நான்காம் பரிமாணம் – 52

11. நீரதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -


இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் நீரதிகாரத்தில் தண்ணீரின் பல்வேறு குணாதிசயங்களை கூறிக் கொண்டு வருகிறேன். குணங்கள் அற்ற ஒரு பொருள் என்று நீங்கள் நினைக்கும் நீருக்குள் நம்ப முடியாத பல ஆச்சரியங்கள் ஒளிந்துள்ளன என்று சென்ற பகுதியில் கூறினேன் அல்லவா? அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்.


நீரின் வடிவம்


உலகின் தட்ப வெட்ப நிலையில் திடம், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் இருக்கக்கூடிய ஒரே பொருள் என்றால் அது நீர் மட்டும்தான். மற்ற எந்த பொருளையும் நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற மிகவும் அதிகமாக அல்லது மிகவும் குறைந்த வெப்பத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் தண்ணீர் முற்றிலும் வித்தியாசமான ஒரு பொருளாக விளங்குகிறது.  தண்ணீரின் மிகவும் விந்தையான ஒரு செயல்பாட்டினால் தான் நீங்கள் அனைவரும் உயிரோடு இருக்கிறீர்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த செயல்பாட்டை உங்களால் வீட்டிலேயே எளிதாக சோதனை செய்து பார்க்க முடியும். உங்கள் வீட்டில் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியில் தண்ணீரை உறைய வைத்து பனிக்கட்டியாக மாற்றிக்கொள்ளுங்கள். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீருக்குள் அந்த பனிக்கட்டியை போட்டால் இந்த பனிக்கட்டி தண்ணீருக்குள் மூழ்காமல் மேலே மிதந்து கொண்டே இருக்கும். இது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் ஆகும். புரிந்து கொள்வதற்கு எளிதாக ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். ஒரு கல்லை பொடிப்பொடியாக மண்ணாகும் வரை உடைத்து வைத்தால் அது கல்லை விட அதிகமான கொள்ளளவை கொண்டிருக்கும். இரும்பை அதிக வெப்பத்தில் காய்ச்சி திரவ வடிவத்தில் ஆக்கி அதற்குள் ஒரு இரும்புக் கம்பியை போட்டால் அது கண்டிப்பாக அந்த திரவத்தில் மூழ்கிப் போகும். இப்படி எந்த ஒரு பொருளும் திட நிலையில் இருக்கும் பொழுது அதிக அடர்த்தியையும் நீர் காற்று  மற்ற வடிவங்களில் இருக்கும்பொழுது அடர்த்தி குறைவாகவும் இருக்கும். 

ஆனால் தண்ணீர் மட்டும் இதற்கு நேர் எதிராக திடமாக இருக்கும் பொழுது குறைந்த அடர்த்தியாகவும் திரவ நிலையில் அதிக அடர்த்தியாகவும் இருக்கிறது. பனிக்கட்டியில் உள்ள தண்ணீர் மூலக்கூறு வட்ட வடிவமாக தன்னை அமைத்துக் கொள்வதால் இப்படி ஒரு நிகழ்வு ஏற்படுகிறது. இந்த ஒரு சின்ன வித்தியாசம் தான் சமுத்திரங்களில் உள்ள மேற்பரப்பை மட்டும் பனிக்கட்டியாக மாற்றிவிட்டு அடி ஆழத்தை கதகதப்பான திரவ நிலையிலேயே வைத்திருக்கிறது. இது மட்டும் நடக்கவில்லை என்றால் உலகின் மகா சமுத்திரங்கள் அனைத்துமே முழு பனிக் கட்டிகளாக உறைந்துபோய் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் அழிந்து இருக்கும். கடல்வாழ் உயிரினங்கள் அழிந்தால் நிலத்தில் வாழும் விலங்குகள் அனைத்தும் உணவு இல்லாமல் அழிந்து போய்விடும். உணவைக்கூட விட்டுத்தள்ளுங்கள். கடலில் இருக்கும் பாசி கரிமில வாயுவை உட்கொண்டு உயிர் வளியை வெளியிடுவதால் தான் உங்களால் நிம்மதியாக மூச்சு கூட விட முடிகிறது. நிலத்தில் இருக்கும் மரம் செடி கொடிகள் கொடுக்கும் உயிர்வளி மிகவும் குறைவானது தான். கடல் பாசிகள் தான் உங்கள் மூச்சுக்காற்றை அதிகப்படியாக உற்பத்தி செய்கிறது. சுருக்கமாக சொல்லப்போனால் தண்ணீருக்குள் இருக்கும் ஒவ்வொரு சிறிய செயல்பாடும் உங்கள் வாழ்க்கையை முழுவதுமாக புரட்டிப் போடும் அளவுக்கு முக்கியம் வாய்ந்தது.

தங்கம் போன்ற உறுதியான உலோகங்களை கூட கரைக்கும் அமிலங்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதனை Aqua Regia என்று அழைப்பார்கள். ஆனால் இப்படிப்பட்ட அதிக சக்தி வாய்ந்த அமிலங்களால் கூட அனைத்து பொருட்களையும் கரைக்க முடியாது. நீங்கள் அதிகமான பொருட்களை கரைக்கும் திரவங்களின் பட்டியலைத் தயார் செய்தால் அதில் முதலிடம் வகிப்பது இந்த எந்த அமிலமும் கிடையாது. நீங்கள் அருந்தும் குடிநீர் தான் இங்கே முதலாவதாக தேர்ச்சி பெறுகிறது! அது எப்படி சாதாரண ஒரு நீரால் அதிகமான பொருட்களை கரைக்க முடியும் என்று தானே நினைக்கிறீர்கள்? நீங்கள் சாதாரணம் என்று நினைக்கும் அந்த எளிமைதான் பலவிதமான பொருளையும் தன்னுள்ளே கரைக்கும் திறனை தண்ணீருக்கு கொடுக்கிறது. ஒரு பொருள் தன்னுள்ளே ஏற்கனவே அதிகமான உள்ளிருப்பை கொண்டால் மேற்கொண்டு எந்த பொருளையும் தனக்குள் கரைக்க முடியாது. ஆனால் தண்ணீர் மிகவும் எளிமையாகவும் சுத்தமாகவும் இருப்பதால் அதிகமான பொருட்களை அதனால் மட்டும் தான் கரைக்க முடியும். உங்கள் வாழ்வில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை இதனுடன் பொருத்திப் பார்த்தால் இது எவ்வளவு உண்மை என்பது நன்கு புரியும்.

உலகில் நீரின் பெரும்பகுதி சமுத்திரங்களிலும் கடல்களிலும் இருந்தாலும் அவை அனைத்தும் அடர் உப்புடன் கலந்து குடிப்பதற்கு தகுதியாக இருப்பதில்லை. உலகில் உள்ள தண்ணீரில் வெறும் 3% மட்டும் தான் குடிப்பதற்கு ஏதுவாக குறைவான உப்புடன் இருக்கிறது. அந்தத் தண்ணீரிலும் மூன்றில் இரண்டு பகுதி துருவங்களில் உரை பணியாக கிடைக்கிறது. மீதமுள்ள நீரில் கூட அதிகப்படியான பகுதி பூமியின் அடி ஆழத்தில் ஒளிந்து உள்ளது. நான் கூறுவது நீங்கள் நினைக்கும் கிணறு அல்லது ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் தண்ணீர் கிடையாது. இவை அனைத்தும் பூமியின்அடியில் சுமார் 30 ஆயிரம் அடி ஆழத்தில் ஒளிந்துள்ளது. இதனை ஆங்கிலத்தில் aquifer என்று அழைப்பார்கள். நீங்கள் உங்கள் வீட்டில் போடும் 200-300 அடி ஆழ்துளைக் கிணறு எதுவுமே உண்மையில் ஆழமே கிடையாது. பூமியிலுள்ள பெரும்பகுதியான குடிநீர் இந்த aquiferஇல் தான் இருக்கிறது. இவ்வளவு ஆழம் தோண்டி தண்ணீரை எடுப்பதற்கு பதிலாக மனிதன் கடல் நீரை குடிநீராக மாற்றி உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டான். இருந்தாலும் வருங்காலத்தில் மனிதனின் குடிநீர் தேவைக்காக aquifer பயன்படுத்த நேரிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

தண்ணீரின் குணங்கள் இத்துடன் முடியப்போவதில்லை. நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத பல விளைவுகளையும் யூகிக்கவே முடியாத அதிசயமான குணநலன்களும் தண்ணீருக்குள் பொதிந்து கிடக்கின்றன. அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -