நான்காம் பரிமாணம் – 45

9. வடிவ அதிகாரம் - 5ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். வடிவ அதிகாரத்தில் சில வடிவங்களைப் பற்றியும் வடிவம் இல்லாத நிலையைப் பற்றியும் இதுவரை கூறியிருந்தேன். ஒவ்வொரு வடிவத்துடன் தொடர்புள்ள குணாதிசயங்களைப் பற்றியும் கூறியுள்ளேன். இந்தப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத சில வடிவங்களை பற்றியும் அதற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் கூறி வடிவ அதிகாரத்தை நிறைவு செய்கிறேன்.

மூளையின் வடிவமும் அதன் குணமும்

நீங்கள் Phantom leg (சாத்தானின் கால்) என்னும் ஒரு நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஏதாவது ஒரு விபத்தில் கால்களை முற்றுமாக இழந்தவர்கள் குணமடைந்த பின்பு இந்த நோய்க்கு உட்படுவார்கள். உடலிலிருந்து கால் முழுவதுமாக எடுக்கப்பட்டு விட்டாலும் இவர்களுக்கு இல்லாத காலில் வலி போன்ற உபாதைகள் ஏற்படும். கால் உடலில் இருக்கும் பொழுது வலித்தால் அதற்கு உண்டான மருத்துவம் பார்க்கலாம். ஆனால் இல்லாத காலில் வலி ஏற்பட்டால் எவ்வாறு மருத்துவம் பார்ப்பது? இந்த வலி உண்டாவதற்கு ஒரு அறிவியல் காரணம் உள்ளது. உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு பகுதியும் மூளையுடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையது. சொல்லப்போனால் உடலின் பகுதிகள் அனைத்துக்கும் தனித்தனியாக மூளையிலும் ஒரு சிறிய பகுதி உள்ளது. உதாரணத்திற்கு கால்களை எடுத்துக் கொண்டால் மூளையில் உள்ள ஒரு சிறு பகுதி கால்களை கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பேற்றிருக்கும். காலில் இருந்து வரும் நரம்புகளின் சமிக்கைகளை மூளையின் அந்த சிறு பகுதி தான் உணர்ந்து அது வலியா இல்லை சாதாரண நிலைமையா என்று உணரவைக்கும். அப்படிப்பட்ட சமிக்கைகள் இல்லாமல் போகும்போது மூளையில் இருக்கும் காலுக்கான கட்டுப்பாட்டு பகுதி தறிகெட்டு தேவையில்லாத உணர்வுகளை கூட கொடுக்க ஆரம்பிக்கும். இந்த நிலைமையில்தான் இல்லாத காலுக்கு வலி ஏற்படுவது போன்ற ஒரு உணர்வு வரும். இப்படிப்பட்ட நிலைமையில் நீங்கள் மூளையின் அந்த பகுதியை படம் பிடித்து பார்த்தால் அது முழுவதும் செயல்படுவது போன்று இருக்கும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதன் செயல் சிறிது சிறிதாக குறைந்து வந்து பயன்படாமல் போய்விடும். இங்கே மூளையின் செயல்பாடு மட்டுமல்லாமல் மூளையின் வடிவமே சற்று மாறிவிடும். இதனை நியூராப்லஸ்டிசிடி(Neuroplasticity) என்று அழைப்பார்கள்.

இங்கே இன்னொரு உதாரணத்தையும் கூறிவிடுகிறேன். உங்கள் உலகில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானி மிகவும் பிரபலமான பல கோட்பாடுகளை கண்டுபிடித்தார் என்று தெரியும். அவர் இறந்த பின்பு அவருடைய மூளையை எடுத்து அது ஒரு சாதாரண மனிதனின் மூளையை விட வித்தியாசமாக இருக்கிறதா என்ற ஆராய்ச்சி நடைபெற்றது. அதன் இறுதியில் அவர்கள் கண்டுபிடித்தது ஒரே ஒரு விஷயம்தான். அவரது மூளையின் வடிவம் மற்றவர்களை விட சற்று வேறு மாதிரியாக இருந்தது. எந்த விதத்தில் என்றால் மூளைக்குள் பல்வேறு சிறு சிறு பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதிகளை ஒன்றுடனொன்று இணைப்பதற்கான பகுதியும் மூளைக்குள்ளே இருக்கிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையின் பகுதிகள் அனைத்தும் சாதாரண மனிதனைப் போன்று இருந்தாலும் அவை அனைத்தையும் இணைக்கும் பகுதிகள் மிகவும் வலுவாக இருந்தது. இதிலிருந்து ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள முடியும். அனைவருக்கும் மூளை என்னும் உறுப்பு ஒன்றாக இருந்தாலும் அதன் வடிவத்தில் ஏற்படும் சிறு மாற்றம் கூட அவர்களது அறிவு கூர்மையை காட்டி கொடுத்துவிடுகிறது. ஒரு மண் துகளை உருமாற்றி கணிப்பொறியின் பிராசஸர் எனப்படும் கணிப்பொறி மூளை உருவாவதைப் போல மூளையில் ஏற்படும் உருமாற்றம் தான் அறிவாக பிரதிபலிக்கிறது. ஆகமொத்தம் வடிவமும் செயல்பாடும் ஒன்றுடனொன்று அளவற்ற தொடர்புடையது.

வடிவத்திற்கும் அறிவு மற்றும் மனதின் செயல்பாடு அனைத்திற்கும் தொடர்பு உண்டு என்றால் மூளையின் வடிவத்தை நம்மாலே செயற்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா? கண்டிப்பாக முடியும்! இதனை ஆங்கிலத்தில் நியூரோஜெனிசிஸ் (Neurogenesis) என்று கூறுகிறார்கள். நீங்கள் ஒரே ஒரு செயலில் தொடர்ந்து முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டு வந்தீர்களானால் மூளை தானாகவே புதிய புதிய நியூரான் எனப்படும் செல்களை உருவாக்கி அந்த செயலை மேலும் மேலும் வலுப்படுத்தும். கவனம் செலுத்தும் செயலில் வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் தேவையில்லாத செயல்களை செய்ய பயன்படுத்தும் நியூரான்களை சிறிது சிறிதாக அழித்துவிடும். இந்த செயலை தொடர்ந்து செய்து வருபவர்கள் தங்களுடைய மூளையின் வடிவத்தை முற்றிலும் மாற்றி தனக்குத் தேவையான செயல்களை மட்டும் செய்வதுபோல் செய்து கொள்ள முடியும். எவ்வாறு உடலின் தோற்றத்தை பயிற்சிகள் மூலம் மாற்றி கொள்ள முடியுமோ அதுபோலவே மூளையின் வடிவத்தையும் அதோடு இணைந்த செயல் திறனையும் மாற்றிக்கொள்ள முடியும் என்று நீங்கள் சமீபத்தில் நியூரோஜெனிசிஸ் மூலம் கண்டுபிடித்தீர்கள். ஆனால் இவற்றை கண்டுபிடிப்பதற்கு பல காலம் முன்னாலேயே உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களும் இந்த வழிமுறையை தெரிந்து வைத்திருந்தனர். மனதை ஒருநிலைப்படுத்தி ஒரே விஷயத்தில் குவிக்கும் பொழுது மூளை உங்களுக்கு தேவையான மாற்றத்தை அடைகிறது. ஆம். இதற்கு பண்டைய காலத்தில் வைத்த பெயர்தான் ‘தியானம்’. பண்டைய முறையில் தியானம் செய்பவர்கள் பலரை நியூரோ ஜெனிசிஸ் முறையில் ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொழுது கூட இவை இரண்டும் ஒரே வழிமுறை தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே உயிரற்ற பொருட்கள் தொடங்கி உயிருள்ள உடல், அறிவு, மனம், போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்தும் கருவியாக அதன் ‘வடிவம்’ விளங்குகிறது என்றால் மிகையாகாது. எந்த ஒரு பொருளின் குணாதிசயம் மாறும் பொழுது அதன் வடிவமும் தானாகவே மாறிவிடும். இன்னொரு வகையில் பார்த்தால், அதன் வடிவம் மாறும் பொழுது அதன் குணமும் மாறும். உங்கள் வாழ்வில் மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு குணத்தை அதன் வடிவத்தின் துணைகொண்டு மாற்றித்தான் பாருங்களேன்.

கடந்த ஐந்து பகுதிகளாக கூறிவந்த வடிவ அதிகாரத்தை இங்கே நிறைவு செய்து வேறொரு புதிய அதிகாரத்துடன் உங்களைத் தொடர்ந்து சந்திப்பேன்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -