நான்காம் பரிமாணம் – 42

9. வடிவ அதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் வடிவ அதிகாரத்தில் வடிவங்கள் மற்றும் அதன் அதன் காரணங்களைப் பற்றி கூறி கொண்டு வருகிறேன். எந்த ஒரு வடிவத்திற்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்பதை பற்றி இன்று விவரமாக கூறப்போகிறேன். தொடங்குவோமா?


வடிவமும் குணமும்


பூமி கோள வடிவத்தில் இருப்பதால் தான் ஒரே அச்சில் தொடர்ந்து சுழல முடிகிறது என்று சென்ற பகுதியில் கூறியிருந்தேன். முப்பரிமாணத்தில் இருக்கும் கோளத்தை இரண்டு பரிமாணங்களில் மட்டும் பார்த்தால் கிடைக்கும் வடிவம்தான் வட்டம். நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் முதற்கொண்டு நீங்கள் தெருவில் நடக்கும் பொழுது பார்க்க முடிகின்ற பாதாள சாக்கடையை மூடும் மூடி முதல் பல்வேறு பொருட்களும் கோள/வட்ட வடிவில் இருக்கிறது. அதற்கு அடிப்படைக் காரணம் வட்ட வடிவத்தின் தன்மைதான். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அழுத்தம் என்ற பண்பு பொதுவானது. பொருட்களின் உள்ளிருந்து அதனை வெளியே தள்ளுவதற்கான அழுத்தமும் வெளியிலிருந்து உள்ளே அமுக்கும் அழுத்தவும் எப்பொழுது சமநிலையில் இருக்கிறதோ அப்பொழுது அந்தப் பொருள் ஒரு ஸ்திரமான வடிவத்தை அடைகிறது. இந்த இரண்டு அழுத்தங்களும் எப்பொழுது ஒரு பொருளின் அனைத்து பகுதிகளிலும் ஒரே அளவில் வெளிப்படுகிறதோ அப்பொழுது கிடைக்கும் ஒரே வடிவம் வட்டம் அல்லது கோளம் ஆகும். 

நீங்கள் வட்டத்தை தவிர வேறு எந்த ஒரு வடிவத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். காலப்போக்கில் அந்த வடிவத்தில் உள்ள நுனி சிறிது சிறிதாக மழுங்க ஆரம்பித்து சேதமடைந்து விடும். அதற்கு காரணம் அதன் உள்ளே மற்றும் வெளியே ஏற்படும் அழுத்த மாற்றம் தான். ஆனால் வட்டத்திற்கும் கோளத்திற்கும் நுனி என்ற ஒன்று கிடையவே கிடையாது. அனைத்து ஓரங்களிலும் வழுவழுப்பாக இருப்பதனால் வட்டமும் கோளமும் என்றுமே நீண்டகாலம் உருமாற்றம் அடையாமல் இருக்கும். பாதாள சாக்கடையின் மூடி வட்ட வடிவமாக இருப்பதற்கு காரணமும் இதுதான். அதிக காலம் அந்த மூடியின் ஓரங்கள் பாழாகாமல் இருப்பதுடன் இந்த மூடி என்றுமே அது மூடும் குழிக்குள் விழுந்து விடாமல் இருக்கும். நீங்கள் வேறு எந்த வடிவத்தில் அந்த மூடியை செய்தாலும் அதனை பக்கவாட்டாக திருப்பி அந்த குழிக்குள் போட்டுவிடலாம். ஆனால் வட்டமாக இருக்கும் முடியை எவ்வளவு முயன்றாலும் அல்லது எப்படி திருப்பினாலும் அந்த குழிக்குள் போடமுடியாது. எப்போதுமே மூடி ஆக மட்டுமே இருக்க முடியும். எந்த ஒரு பொருளும் ஒரு மாற்றம் அடையும் பொழுது இறுதியாக வட்ட வடிவத்தை அடைவதற்கே முயலும்.  நட்சத்திரங்களும் கோள்களும் ஆரம்பத்தில் விதவிதமான வடிவங்களில் இருந்தால்கூட இறுதியில் கோள வடிவத்தை அடைந்த காரணமும் இதுதான். கோளமும் வட்டமும் ஸ்திரத்தன்மை என்னும் அடிப்படை குணாதிசயத்தை கொண்டது.

இப்பொழுது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். வட்டம் என்பது ஒரு தெளிவான வடிவமாகும். நீங்கள் வாழ்வில் பார்க்கும் பல்வேறு வடிவங்கள் தெளிவற்ற நிலையில் இருக்கின்றது. உதாரணமாக ஒரு நதி என்றுமே வளைந்து வளைந்து தான் ஒரு பாதையை உருவாக்கும். உலகிலுள்ள எந்த ஒரு நதியும் நேரான பாதையில் சென்றதாக வரலாறு கிடையாது. இப்படிப்பட்ட தெளிவில்லாத வடிவங்கள் உருவாவது எதனால்? அதற்குரிய குணாதிசயங்கள் என்னென்ன? நீங்கள் நதியை ஒரு குறிப்பிட்ட வடிவம் இல்லாமல் அதன் போக்கிற்கு வளைந்து செல்கிறது என்று நினைத்திருந்தால் முதலில் அது தவறு. எந்த ஒரு நதியின் வளைவும் மணல் நிறைந்த சமவெளியில் ஆங்கிலத்தில் உள்ள ‘S’ என்னும் எழுத்தை அடுக்கி வைத்ததுபோலத்தான் இருக்கும். அதிலுள்ள ஒவ்வொரு S வடிவத்தின் நீளமும் சொல்லிவைத்தது போல அந்த நதியின் அகலத்தை விட ஆறு மடங்கு அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா? நதியின் ஓட்டத்தில் நீர் மட்டுமே நகராமல் அதனுடன் சேர்ந்த கல் மண் போன்ற பொருட்களும் நீரால் அடித்துச் செல்லப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும். அவ்வாறு அடித்து செல்லும் மண் என்றுமே ஒரே அளவில் நீரில் இருக்கிறது. சில சமயங்களில் அதிகமாகவும் மற்ற சமயங்களில் குறைவாகவும் இருக்கும். 

இந்த ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் அழுத்தம் சில சமயங்களில் நதியின் ஒரு கரையில் குறைவாகவும் மற்ற கரையில் அதிகமாகவும் இருக்கும். அதன் விளைவாக அதிக அழுத்தம் ஏற்பட்ட கரையில் அதிக மண் அரிப்பு ஏற்பட்டு அங்கு ஒரு வளைவு உண்டாகும். இந்த முதல் வளைவில் தண்ணீர் செல்லும் பொழுது வளைவின் வேகம் தொடர்ந்து நீரின் ஓட்டத்தில் பிரதிபலிக்கும். அந்தப் பிரதிபலிப்பு தான் ஒவ்வொரு புது S வடிவத்தை அதன் ஓட்டத்தில் ஏற்படுத்தி தொடர்ச்சியாக வளைந்து செல்கிறது. காலங்காலமாக இது தொடர்ந்து நடந்து வருவதால் எந்த ஒரு நதியின் போக்கும் மாறிக் கொண்டேதான் இருக்கும். இங்கே ஒளிந்துகொண்டு இருக்கும்  அழுத்தத்தை வெளியிடும் பண்பு தான் இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களும் அலை அல்லது திடமான ஒரு பொருளாக இருக்கிறது என்று பல்வேறு இடங்களில் நான் கூறியிருக்கிறேன். திடமான ஒரு பொருள் வட்ட வடிவமாக மாறிவிடுகிறது. அப்படி வட்டவடிவமாக வரமுடியாத பொருட்கள் நதியில் ஏற்படும் வளைவுகள் போன்ற அலையாக மாறி தன்னுடைய தனித்துவத்தை இழந்து பிரபஞ்சத்தில் கலந்து விடுகிறது. சொல்லப்போனால் இந்த இரண்டு வடிவங்கள் தான் வடிவங்களுள் இருக்கும் முக்கியமான இருமை. மற்ற அனைத்து வடிவங்களும் இறுதியில் இவை இரண்டு பிரதான வடிவங்களுக்கும் ஏதாவது ஒன்றாக மாறிவிடும்.

அப்படியானால் அலை மற்றும் கோள வடிவைத் தவிர மற்ற அனைத்து வடிவங்களுக்கும் குணம் என்ற ஒன்று கிடையவே கிடையாதா? மற்ற வடிவங்கள் அனைத்தும் தற்காலிகமான வடிவங்களாக இருந்தால்கூட அவற்றுக்கும் பல முக்கியமான குணாதிசயங்கள் உள்ளது. அது என்ன என்பதை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -