நான்காம் பரிமாணம் – 32

சுவை அதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


காலம் என்னும் நான் சென்ற பகுதியில் சுவை அதிகாரத்தை தொடங்கி உணவிலுள்ள சுவைகளை பற்றிக் கூறிக் கொண்டு வருகிறேன். இனிப்பு மற்றும் கசப்பு சுவையைப் பற்றிய தகவல்களையும் கொடுத்துள்ளேன். அதைத்தவிர அறுசுவைகளில் நான்கு மீதம் உள்ளதல்லவா? அதனைப் பற்றி இந்த பகுதியில் தொடர்கிறேன்.

உவர்ப்பும் உடலும்

இனிப்புச்சுவை என்பது உடலுக்கு சக்தி தரக்கூடிய பொருட்களின் அடையாளம் என்றும் கசப்புச் சுவை அதிகமாக சாப்பிடக்கூடாத உணவிற்கு மூளை தரக்கூடிய குறியீடு என்றும் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அப்படியானால் இவை இரண்டு மட்டுமே ஒரு விலங்கினத்தை வாழவைத்து விட முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது. ஒரு விலங்கினம் தன் வாழ்நாளில் ஒரு சிறு பகுதியை மட்டும் தான் உணவு உண்பதற்கு பயன்படுத்தும். மற்ற நேரங்களில் அதன் வாழ்வாதாரத்திற்கு தேவையான மற்ற செயல்களை செய்து கொண்டிருக்கும். அப்படியானால் சிறிதுநேரம் சாப்பிட்ட உணவின் துணைகொண்டு அதை உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறிது சிறிதாக கொண்டுபோய் சேர்த்து மற்ற அனைத்து நேரங்களிலும் உடலைக் காக்க வேண்டிய பொறுப்பு உடலுக்கு இருக்கிறதல்லவா? அதனைச் செய்து முடிக்கும் சுவைதான் உவர்ப்புச் (உப்புச்) சுவை. இதனைப் புரிந்துகொள்ள உங்களுக்கு சிறிது வேதியியல் தெரிய வேண்டும். நீங்கள் எந்த ஒரு அமிலத்தையும் (Acid) காரத்துடன் (Base) ஒன்று சேர்க்கும் பொழுது அதன் விளைவாக உங்களுக்கு உப்பும் தண்ணீரும் கிடைக்கும். உதாரணமாக உங்கள் வயிற்றில் உணவின் செரிமானத்திற்காக இயற்கையாகவே சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் உணவில் பயன்படுத்தும் சோடா மாவையும் (காரம், Base) ஒன்றாகச் சேர்த்தால் அதன் விளைவாக அமிலம் காரம் ஆகிய இரண்டும் மறைந்து உணவில் நீங்கள் பயன்படுத்தும் உப்பாகவும் (Sodium chloride) தண்ணீராகவும் மாறிவிடும். சுருக்கமாக சொல்லப்போனால் கடல் நீர் போன்று நீரும் உப்பும் கலந்த கலவையாக மாறிவிடும். இவ்வாறு மாறிவிட்டால் அந்தக் கலவை மிகவும் உறுதியாகவும் அதற்கு மேற்கொண்டு வேறு எந்த ஒரு நிலைக்கும் செல்ல முடியாத அளவிற்கு வலுவடைந்து விடும். அதனால் தான் கடல் நீர் என்றுமே கெட்டுப் போகாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது. இதே விஷயத்தை உங்கள் உடலுக்குள் நிகழ்த்தும் பொருள்தான் உப்பும் தண்ணீரும். நீங்கள் உப்பை எப்போது சாப்பிட்டாலும் உடனடியாக தாகம் ஏற்பட்டு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்படும். அதன் காரணம் கூட உப்பும் நீரும் சேர்ந்து உடலை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சி தான். உங்கள் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமானால் நீங்கள் சோடா மாவு கலந்த நீரை குடித்தால் உடனடியாக உங்கள் வயிறு அமைதி அடைகிறது அல்லவா? அதற்கு காரணமும் இதுதான். உப்புச்சுவை என்பது மாற்றமடையாமல் இருப்பதால் உடலின் அனேகமான செயல் பாடுகளுக்கு அது உறுதுணையாக இருக்கிறது. உணவில் உப்பை முழுமையாக நிறுத்திவிட்டால் மூளை வேலை செய்தால்கூட அதன் கட்டளைகளை உடலின் வேறு எந்த பகுதிக்கும் எடுத்துச் செல்ல முடியாமல் செயலிழந்து விடும். நீங்கள் கற்கும் அனைத்து விஷயங்களையும் மூளையில் சேமித்து வைப்பதற்காக கொண்டு செல்லக்கூடிய நரம்பு மண்டலத்தை இயக்குவது இந்த உப்புதான். சாப்பாட்டில் உள்ள அனைத்து சத்துக்களையும் உடலின் செல்களுக்கு கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருப்பதும் உப்புதான் (Electrolyte = Salt + Water).  எந்த ஒரு பொருளையும் பதப்படுத்தி பாதுகாக்கும் தன்மை கொண்டதனால் தான் நீங்கள் உப்பின் மூலம் உணவை கெட்டுப் போகாமல் பதப்படுத்தி அதற்கு ஊறுகாய் என்று பெயர் வைத்துள்ளீர்கள்.

உப்புச் சுவையின் அடிப்படை காரணம் இப்பொழுது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். உடலில் புதிய தெம்பையும் சக்தியையும் கொடுப்பதற்கு இனிப்புச் சுவையும், அதனை பதப்படுத்தி பாதுகாப்பதற்கு உவர்ப்புச் சுவையும் உடலுக்கு தேவையில்லாத விஷயங்களை தடுப்பதற்காக கசப்புச் சுவையும் இயற்கையாகவே உங்களுக்கு உணர முடிந்தது. அப்படியானால் உயிர்காக்கும் பல்வேறு மருந்து கசப்பாகவும் அதிக இனிப்பின் மூலம் சர்க்கரை அல்லது நீரிழிவு நோய் ஏன் ஏற்படுகிறது? இங்கே கசப்புச்சுவை ஒரு முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டும். கசப்பு என்பது உங்கள் உடலுக்கு தேவையில்லாத பொருட்களை தடுக்கும் சுவை மட்டுமல்ல. உடலுக்குள் தேவையில்லாமல் நுழைந்துவிட்ட மற்ற கிருமிகளை அழிக்கும் சக்தியாகவும் விளங்குகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளுக்கும் இயற்றலும், காத்தலும், அழித்தலும் அடிப்படை தத்துவமாகும். இந்த மூன்றும் உங்கள் உடலில் நடப்பதை உணர்த்தும் சுவைதான் இனிப்பு, உவர்ப்பு மற்றும் கசப்பு!  சரி விஷயத்துக்கு வருவோம். உடலுக்கு சக்தி கொடுக்கும் இனிப்பால் எவ்வாறு நீரிழிவு நோய் வருகிறது? இங்கே ஒரு எடுத்துக்காட்டை கூறிவிடுகிறேன். நீங்கள் ஒரு நான்கு சக்கர வாகனத்தை செலுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள எரிபொருளை அதிகமாக பயன்படுத்துவதன் மூலமாக வண்டியை மிகவும் வேகமாக முன்னோக்கி செலுத்த முடியும். இப்பொழுது அந்த வண்டிக்கு மிகவும் அதிகமான எரிபொருளை கொடுத்து வேகத்தை அதிகரித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும். ஏதேனும் ஒரு கட்டத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் அல்லவா? இதனை உங்கள் உடலில் நீங்கள் செய்துகொள்வதற்கு பெயர்தான் நீரிழிவு நோய். உடலுக்கு சக்தி கொடுப்பதற்காக அரிசி, கோதுமை, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் இயற்கையாகவே இனிப்புச் சத்து கலந்துள்ளது. அந்த இனிப்புச் சத்தை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக்கொண்டு நீங்கள் செயற்கையாக உருவாக்கிய பொருள்தான் சர்க்கரை. இது உங்கள் உடலுக்குள் செல்லும் பொழுது அமைதியான நீரோடையாக செயல்படவேண்டிய சக்தி வெடித்துச் சிதறும் வெடிகுண்டு போன்ற செறிவூட்டிய சக்தியாக மாறி உங்கள் உடலையே தாக்குகிறது. இயற்கையில் விளையும் பழங்களை நீங்கள் அப்படியே சாப்பிட்டால் அதன் இனிப்புச்சுவை உங்கள் உடம்பிற்கு வெடிகுண்டாக மாறாது. காரணம் அங்கே இனிப்புச் சுவையுடன் மற்ற சுவைகளும் கலந்து மிதமான வேகத்தில் உடலுக்கு பயன்தரும். இங்கே கசப்புச்சுவை என்பது உங்கள் நான்கு சக்கர வாகனத்தில் இருக்கும் பிரேக்(Brake, நிறுத்தான்) போன்று செயல்படுகிறது. உவர்ப்புச் சுவை இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி உடலை சரிவிகிதத்தில் வைத்துக் கொண்டு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் முடிக்கியாக (clutch & accelerator) செயல்படுகிறது. நீங்களே யோசித்து பாருங்கள். ஒரு பிரேக் இல்லாத வாகனத்தை நீங்கள் இயக்குவீர்களா? வெறும் இனிப்பு சுவை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உங்கள் உடம்பை அதுபோன்றுதான் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

அறுசுவையில் மூன்று சுவையை மட்டும் தான் பார்த்து இருக்கிறோம். முதல் மூன்று சுவையில் அடிப்படை அனைத்தும் உள்ளது என்றால் மீதமுள்ள மூன்று சுவை என்ன செய்யும்? சுவைக்கும் உங்கள் கண்களுக்கும் என்ன சம்பந்தம்? உங்களுடைய மற்ற உணர்வு திறனால் சுவை மாறுபடுமா? இவற்றின் விடையை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -