நான்காம் பரிமாணம் – 27

6. யுத்த அதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலமெனும் நான் யுத்த  அதிகாரத்தை சென்ற பகுதியில் துவக்கி உங்கள் வாழ்வில் நடக்கும் சில யுத்தங்களைப் பற்றி கூறியிருந்தேன். யுத்தத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்வதற்காக ஒளியில் ஏற்படும் யுத்தத்தைப் பற்றி கூறத் தொடங்கியிருந்தேன். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டாலே யுத்தத்தின் மூல காரணத்தை உங்களால் எளிதாக உணர முடியும். பார்ப்போமா?

ஒளியும் யுத்தமும்

ஒளியில் ஏற்படக்கூடிய எதிர்மறை குறுக்கீடு (Light’s destructive interference) எனும் நிகழ்வு நடக்கும் பொழுது இரண்டு ஒளி அலைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு இருளை உண்டாக்கும் என்று கூறியிருந்தேன் அல்லவா? ஒளி என்பது சக்தியின் ஒரு வடிவம் தான். அதனால் சக்தியின் கோட்பாடு அனைத்துமே ஒளிக்கும் பொருந்தும். எந்த ஒரு சக்தியின் வடிவத்தையும் யாராலும் உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு உருவத்தில் இருந்து மற்றொரு உருவத்திற்கு மாற்றத்தான் முடியும் என்பது ஒரு பொதுக் கோட்பாடு. அப்படி இருக்கும் பொழுது இரண்டு ஒளி, ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு இருளை உருவாக்கினால் அந்த சக்தி எங்கே செல்கிறது? இங்கேதான் விஞ்ஞானிகள் மற்றொரு உண்மையை கண்டுபிடித்தார்கள். அந்த இருள் தோன்றிய இடத்திற்கு அருகாமையிலேயே மிகவும் அதிகமான ஒரு வெளிச்சமும் உண்டாகியது. அந்த வெளிச்சத்திற்கு காரணம் ஒளியின் நேர்மறை குறுக்கீடு (Light’s constructive interference). அதாவது இருள் ஏற்படும் இடத்தில் மறைந்த சக்தியானது அதன் அருகிலேயே மீண்டும் வெளிப்பட்டு விடுகிறது. இதன் பொருள் என்னவென்றால் எங்கு யுத்தம் நிகழ்கிறதோ அதன் அருகிலேயே அதன் இழப்பிற்கு சமமான அளவு வேறு ஒருவிதமான சக்தி பெருகி விடுகிறது. ஆனால் இந்த சக்தி வெளிப்படையாக வெளியே தெரிவதில்லை. சில எடுத்துக்காட்டுகள் மூலமாகவே இதனைப் புரிந்து கொள்ளலாம்.

சென்ற பகுதியில் கும்பிடு பூச்சி (Praying Mantis) இணை சேரும் பொழுது பெண் பூச்சியானது ஆணின் தலையைக் கொய்து தின்றுவிடும் என்று கூறினேன் அல்லவா? இதில் எந்த விதமான நன்மை இருக்கப்போகிறது? இங்கே இயற்கையின் ஒரு விந்தை ஒளிந்துள்ளது. கும்பிடு பூச்சி கருவுற்றிருக்கும் பொழுது அதன் உடலில் தேவையான அளவு சத்து கிடைப்பதில்லை. இதன் காரணமாக கருவிலேயே அதனுடைய சிசு அழிந்துவிடும் அபாயம் அதிகமாக இருக்கிறது. அந்த அபாயத்தை சரிகட்டும் ஒரே வழி அதன் உடலுக்கு ஏற்றவாறு அதிகமான உணவை உண்ண வேண்டும். ஆனால் பரிணாம வளர்ச்சியில் அப்படிப்பட்ட உணவை செரிமானம் செய்யக் கூடிய சக்தியை அது இழந்து விட்டது. இப்பொழுது கும்பிடு பூச்சிக்கு இருப்பது இரண்டே இரண்டு வழிதான். முதலாவதாக, இலை தழைகளை உண்டு தன்னுடைய சிசுக்களை ஈன்று எடுக்க முயற்சி செய்யவேண்டும். ஆனால் இவ்வாறு செய்தால் சிசுக்கள் பலமிழந்து கருவிலேயே அழிந்து விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இரண்டாவதாக இணை சேர்ந்த உடனேயே ஆணின் தலையைக் கொய்து சாப்பிட்டு விட்டால் அதில் இருக்கும் சத்து உடனடியாக பெண்ணின் உடம்பில் சேர்ந்து ஆரோக்கியமான சிசுக்களை ஈன்றெடுக்கும். ஒருவேளை பெண் பூச்சி ஆணைக் கொன்று சாப்பிடாமல் இருந்தால் இன்று உலகில் கும்பிடு பூச்சி என்னும் பூச்சி இனமே இல்லாமல் போயிருந்திருக்கும். இதுதான் இங்கே ஒளிந்திருக்கும் விந்தையான நன்மை. ஆண் தேனீக்கள் இணை சேர்ந்தவுடன் உயிரை விடும் நிகழ்வுக்குப் இன்னும் இதே போன்ற ஒரு காரணம் உள்ளது. தேனீக்களுக்கு எல்லா காலத்திலும் தேன் எளிதாக கிடைத்து விடாது. பூக்கள் அதிகம் பூக்கும் வசந்தகாலத்தில் மட்டும் தான் அதனால் தேனை எளிதாக சேகரிக்க முடியும். மற்ற காலங்களில் தன்னுடைய உணவுக்காக தான் அது தேனை சேகரித்து வைத்துக் கொள்கிறது. அப்படி இருக்கும் பொழுது ஆண் தேனீக்கள் தேனை சேகரிக்காமல் கூட்டில் உட்கார்ந்திருந்தால் தேன் எடுக்க முடியாத காலங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு கூட்டுக்குள் பெரும் குழப்பம் உண்டாகி விடும். 

அப்படியானால் யுத்தம் நடந்தால் கூடவே அதில் ஒரு நல்ல விஷயம் இருக்குமா? நீங்கள் தேடிப் பார்த்தால் கண்டிப்பாக கிடைக்கும். போர் என்ற உடனேயே நீங்கள் இரண்டு நாடுகளுக்கு நடுவில் நடக்கும் சண்டையை நினைத்துவிடாதீர்கள். அது மிகவும் சிறிய நிகழ்வு மட்டும்தான். அதைவிட மிகப் பெரிய யுத்தம் எல்லாம் தினமும் உங்களுக்கு முன்னாலேயே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. உங்கள் உலகில் கண்களுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்களும் வசித்து கொண்டு வருகின்றன. இந்த நுண்ணுயிர்கள் தங்களுக்குள் இனப்பெருக்கம் செய்து கொண்டு வேகமாக வளரும் தன்மையுடையது. அது வளரும் வேகத்திற்கு ஒரே தடை என்னவென்றால் அங்கே நடக்கும் யுத்தம்தான். பல்வேறு நுண்ணுயிர்கள் சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் பட்டாலே இறந்துவிடும். மேலும் பல நுண்ணுயிரிகள் சுற்றுப்புறத்தில் இருக்கும் மற்ற உயிர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு மடிந்து போய்விடும். உங்கள் உடலில் தொடங்கி உலகில் உள்ள அனைத்து மூலைகளிலும் இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த யுத்தம் சில நாட்களுக்கு நடக்காமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா? நுண்ணுயிர்கள் பல்கிப்பெருகி பூமிப்பந்தை விட மிகப்பெரிய அளவில் ஒரு பெரிய நுண்ணுயிர் பந்தாக மாறிவிடும். அதன் பிறகு உங்களால் பூமியில் வசிக்கவே முடியாது. 

மனிதர்கள் தயாரிக்கும் எந்த ஒரு பொருளிலும் பல்வேறு தரப்பட்ட தரம் உள்ளது என்று உங்களுக்கே தெரியும். ஒரு சிறிய பல்துலக்கும் குச்சியை வாங்கினால் கூட அதில் நூற்றுக்கணக்கான வித்தியாசமான தரமுடைய பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. இப்படி உள்ள பொருட்கள் அனைத்துமே மிகவும் உயர்ந்த தரம் எது தெரியுமா? அதனை ராணுவத்தரம் (Military grade quality) என்று குறிப்பிடுகிறீர்கள். இதற்கு ஒரு காரணம் உள்ளது. எந்த ஒரு உயிரினமும் தான் தாக்கப்படுகிறோம் என்று அறியும் பொழுது தான் தன்னுடைய மொத்த திறனையும் வெளிக்காட்ட முற்படுகிறது. மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. தான் அழிந்து விடுவோம் என்ற நிலை வந்தால் தான் அவனுடைய மிகவும் உயர்ந்த திறன் வெளியில் வரும். அப்படி அவன் கண்டுபிடித்த பொருட்கள்தான் போர் முடிந்தவுடன் உலகத்தை ஆளும் பொருளாகக் கூட மாறிவிடுகிறது. நீங்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான பொருட்கள் பலவும் அதிகப்படியாக போருக்காக கட்டமைக்கப்பட்ட பொருட்கள் தான் என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் தினசரி பயன்படுத்தும் இணையம்(Internet) முதன்முதலாக ராணுவத்துக்காக தான் உருவாக்கப்பட்டது. நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் பலதரப்பட்ட பதப்படுத்தப்பட்ட திடீர் உணவுப் பொருட்கள் ராணுவ வீரர்களுக்காக தயார் செய்யப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் தொலைக்காட்சி பார்க்க வேண்டுமென்றால் கூட செயற்கை கோள்களில் இருந்து நேரடியாக அலைகளைப் பெற்றுக்கொண்டு (DTH) வீட்டில் உட்கார்ந்தபடியே உங்களால் தொலைக்காட்சியை பார்க்க முடிகிறது. இந்த செயற்கைக் கோள்களை எல்லாம் விண்ணில் ஏவுவதற்கு முன்பாக முதலில் கண்டுபிடிக்கப்பட்ட விண்வெளி ஊர்தி (Rocket) இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரால் கண்டுபிடிக்கப்பட்ட வீ2 ராக்கெட் (V2 rocket) ஆகும். விண்வெளியில் காற்று இல்லை என்பதால் மிகவும் வேகமாக ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்ல முடியும். இதனால் பூமியில் இருந்து வெடிமருந்தை விண்வெளிக்கு கொண்டு சென்று மிகவும் வேகமாக தன்னுடைய எதிரிநாட்டு வான்வெளிக்கு சென்றுவிட்டால் உடனடியாக எதிரியை அழிக்க முடியும். இதற்காக கட்டமைக்கப்பட்ட ஒரு வாகனம் இன்று நீங்கள் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தும் அளவிற்கு மாறிவிட்டது.

நான் மேற்கூறியவை அனைத்துமே போர்களைப் பற்றிய ஒரு மிகச் சிறிய பகுதிதான். சுருக்கமாக சொல்லப்போனால் மனிதனின் நாகரிகத்தில் போரால் ஏற்பட்ட மாற்றங்கள் மிகவும் அதிகமானவை. போரை நாகரிகத்தின் ஒரு பகுதி என்றே கூறலாம். போரால் ஏற்படும் இழப்புகள் அதன் அருகிலேயே சரி கட்டப்படும் எனும் இயற்கையின் விதி போரை முழுவதுமாக நியாயப்படுத்தி விடுகிறதா? போரினால் இழப்புகள் வருவதே இல்லையா? எந்த ஒரு சக்தியும் அழியவே அழியாதா? இதற்கான பதிலை தெரிந்து கொள்வதற்கு நீங்கள் மற்றொரு அறிவியல் விதியை தெரிந்து கொண்டாக வேண்டும். அந்த விதியின் படி சக்தியும் அழிந்துவிடும்! அது என்ன விதி? அடுத்த பகுதியில் காண்போம்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -