நான்காம் பரிமாணம் – 21

5. அனல் அதிகாரம் - 1ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். என்னுடைய கண்ணோட்டத்தில் பார்த்த பல்வேறு உலகியல் விஷயங்களை உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறேன். சென்ற பகுதியுடன் ஒளி அதிகாரத்தை நிறைவு செய்துகொண்டு இங்கே அனல் அதிகாரத்தைத் துவங்கவிருக்கிறேன். அனல் என்றால் என்ன? வெப்பத்தைக் குறிக்கும் மற்றொரு சொல் தான் அனல் எனப்படுகிறது. இதனை நீங்கள் கண்ணால் காணும் பொழுது நெருப்பு என்று கூறுகிறீர்கள். பண்டைய நாகரிகங்களில் அண்டசராசரத்தையும் உருவாக்கிய அடிப்படை பஞ்சபூதங்களில் ஒன்றாக நெருப்பு வைக்கப்பட்டுள்ளது. வெப்பத்தைப் பற்றிய வரலாறு மிகப் பழமையானது. உலகில் ஆதிமனிதன் நடமாட தொடங்கியதிலிருந்தே நெருப்பின் கதை பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் வரலாற்றின் மூலமே இந்த அதிகாரத்தைத் தொடங்கலாமா?

வெப்பத்தின் கதை

அண்ட சராசரத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்த பொழுது ஏற்பட்ட வெப்பத்தின் வழியாகவே நட்சத்திரங்களும் கோள்களும் உருவானது.  ஆம், உங்கள் உடம்பு உட்பட உங்களால் உணர முடிந்த அனைத்துப் பொருட்களுமே வெறும் வெப்பத்தால் உண்டானது என்பதை நம்ப முடிகிறதா? எப்படி என்பதைக் கூறி விடுகிறேன். பொருட்கள் யாவையுமே ஒரு அடிப்படை துகளால் உருவாக்கப்பட்டதுதான். நீங்கள் தற்போது வரை கண்டுபிடித்த அடிப்படை துகளை குவார்க் (Quark) என்று அழைக்கிறீர்கள். இந்த அடிப்படைத் துகள் பலவாக ஒன்று சேர்ந்து எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எனப்படும் மூன்றுவிதமான அயணிகளாக மாறுகின்றன. இந்த மூன்றும் சேர்ந்துதான் அணுக்களை உருவாக்குகின்றன என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்த மூன்றும் எவ்வாறு ஒன்று சேர்க்கின்றன என்பதை பொறுத்துப் புதிதுபுதிதாகப் பொருட்கள் உருவாகும். உதாரணமாக சூரியனில் அபரிமிதமாக ஹைட்ரஜன் அணு உள்ளது. இதுதான் அண்ட சராசரத்தில் மிகவும் அடிப்படையான பொருள். ஏனென்றால் இதில் ஒரே ஒரு எலக்ட்ரான், புரோட்டான், மற்றும் நியூட்ரான் மட்டுமே உள்ளன. சூரியனில் உள்ள அதிகமான வெப்பத்தால் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக சேர்ந்து அதற்கு அடுத்த பெரிய அணுவான ஹீலியத்தை (2 எலக்ட்ரான், 2 புரோட்டான், 2 நியூட்ரான்) உருவாக்குகிறது. இப்படி உருவாகும் பொழுது புதிதாக வெப்பத்தையும் உருவாக்கும். அந்த புதிய வெப்பத்தின் துணைகொண்டு வேறு ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக சேர்ந்து புதிதாக ஹீலியத்தை உருவாக்கும். இப்படி சங்கிலித் தொடராக நடந்து கொண்டிருப்பதால் தான் சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டு வெப்பத்தை உமிழ்கிறது. 

ஹைட்ரஜனை வெப்பத்தின் மூலமாக ஹீலியமாக மாற்ற முடியும் என்றால் இது போலவே இன்னும் பெரிய அணுக்களை ஹீலியம் மூலமாக உருவாக்க முடியும் அல்லவா? இப்படி ஒவ்வொன்றாக கூடிக்கொண்டே 120 எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் கொண்ட அணுக்கள் வரை உருவாகியதுதான் நீங்கள் கண்டுபிடித்த அனைத்து அடிப்படை பொருட்களும். உதாரணமாக பிளாட்டினத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு எலக்ட்ரான், ஒரு புரோட்டான் மற்றும் ஒரு நியூட்ரானை இணைத்தால் அது தங்கமாக மாறிவிடும். இதேபோல் தங்கத்தில் புதிதாக ஒரு எலக்ட்ரான் புரோட்டான் மற்றும் மூன்று நியூட்ரான்கள் சேர்த்தால் அது பாதரசம் (Mercury) ஆக மாறிவிடும். ஆனால் இவ்வாறு மாற்றுவதற்கு சூரியனில் உள்ளதுபோல மிகவும் அதிகப்படியான வெப்பம் தேவைப்படும். வெப்பத்தினால் ஒரு பொருளை அதை விட அதிகமான எடையுள்ள மற்றொருப் பொருளாக மாற்ற முடியும் என்றால் அதே வெப்பத்தின் மூலமாக அணுக்களின் உட்பொருளைக் குறைத்து அதனை வேறு ஒரு பொருளாக மாற்ற முடியுமா? அவ்வாறு முடியும் என்றால் அந்த வெப்பத்தை எவ்வாறு உருவாக்குவது? வெப்பத்திற்கு மாற்றாக வேறு ஒரு சக்தியின் துணை கொண்டு இதனை செய்ய முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க உலகின் பல்வேறு மூலைகளிலும் மனிதர்கள் தங்களது மொத்த வாழ்நாளையும் அர்ப்பணித்தனர். இவர்கள் தான் உலகின் முதல் நவீன விஞ்ஞானிகள். இந்த விஞ்ஞானிகளை மேற்கத்திய நாடுகளில் அல்கெமிஸ்ட் (Alchemist) எனவும் தமிழில் சித்தர்கள் எனவும் கூறுகின்றீர்கள். இவ்வாறு ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றுவதற்கு பெயர்தான் ரசவாதம் எனப்படுகிறது. இங்கே இரசவாதம் எனும் ஒரு கலையை எடுத்துக் கொண்டாலும் வெப்பம் எவ்வளவு முக்கியமான பங்காற்றுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஹைட்ரஜன் எனப்படும் அடிப்படை அணுவில் இருந்து வெப்பத்தின் மூலம் உருவானது தான் நீங்கள் மூச்சுவிடும் ஆக்சிஜன், உங்கள் உடல் உருவான கார்பன் (அல்லது கறி), நீங்கள் பயன்படுத்தும் தங்கம், வெள்ளி முதலிய அனைத்து உலோகங்கள் அல்லது பொருட்களும். 

ஆதி மனிதன் நெருப்பை கையாளும் விதத்தில் தான் மற்ற மிருகங்களிடமிருந்து தனித்துவம் பெறத் துவங்கினான். நெருப்பை கையாளக் கற்றுக் கொள்வதற்கு அவனுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் பிடித்தன. தொடக்கத்தில் அதனைப் பார்த்து பயம் கொண்ட மனிதன், பின்பு அதனை வணங்கிக் கடவுளாகவும் ஏற்றுக்கொண்டான். இதற்கு பல்வேறு வரலாற்று சான்றுகள் உள்ளன. சதுப்பு நிலங்களில் இயற்கையாகவே மீத்தேன் எரிவாயு உண்டாகும். இந்த வாயுவானது வெப்ப மாற்றத்தால் தானாகவே தீப்பிடித்து எரிய ஆரம்பித்துவிடும். நிலங்களில் இவ்வாறு தானாகவே உண்டாகும் நெருப்பை ஆதிமனிதன் பார்த்து அதன் மூலமாக கற்பனை செய்துகொண்டு தமிழ் இலக்கியத்தில் உருவாக்கியதுதான் ” சதுக்கபூதம்”. சிலப்பதிகாரத்தில் இதன் மேற்கோள்களை உங்களால் பார்க்க முடியும். இதே போன்ற இயற்கை நிகழ்வுகளை வைத்து உருவாக்கிய மற்றொரு பூதம் தான் “கொள்ளிவாய்ப் பிசாசு”. சிறிது சிறிதாக பயம் குறைந்தவுடன் நெருப்பின் மீது ஒரு மரியாதை கூட மனிதனுக்கு உருவாகியது. இந்த பயம் மற்றும் மரியாதை கலந்து நெருப்பை வணங்கும் ஒரு வழிபாட்டுமுறை உருவாகி பின்பு இது “பார்சி” எனும் மதமாக மாறியது. பார்சி இன மக்கள் ஆதிகாலத்தில் வணங்கிவந்த நெருப்பு கோயில்களை இன்றுகூட உங்களால் காண முடியும். அசர்பைஜான் நாட்டில் உள்ள பாகு குகைகள் (Baku Caves) இதற்கு சான்றாக உள்ளன. நெருப்பு எனும் வடிவத்தை எளிதாக உணர்ந்து கொண்ட மனிதன் வெப்பமெனும் சக்தியை உணர்வதற்கு பல காலம் பிடித்தது. அதன் பின்னால் பல சுவாரஸ்யமான தகவல்களும் ஒளிந்து உள்ளன. அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள். 

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -