நான்காம் பரிமாணம் – 12

3. உண்டி அதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

உணவைப் பற்றிய பல்வேறு விஷயங்களை காலம் என்னும் நான் உங்களுக்கு இந்த அதிகாரத்தில் கூறிக் கொண்டு வருகிறேன். சென்ற பகுதியில், உணவின் பொருள் விளக்கத்தையும் உங்கள் உடலுக்கு உணவு எந்த விதத்தில் தேவைப்படுகிறது என்பதையும் கூற ஆரம்பித்தேன். தொடர்ந்து அதைப் பார்ப்போம்.


கரியின் சேர்க்கை


கார்பன்(கரி) அணுவில் பல்வேறு விதமான கூட்டுப்பொருட்கள் சேர்வதனால் உண்டாவதே நீங்கள் உண்ணும் உணவு என்று உங்களுக்கு சொல்லியிருந்தேன் அல்லவா? அவற்றில் ஒரு சில கார்பன் சேர்க்கையை உண்ணும் பொழுது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றத்தை உடனடியாக கவனிக்க முடியும். உதாரணமாக, நீங்கள் குளுக்கோஸ் சாப்பிட்டால் உடலில் உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். கொழுப்புப் பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே உடல் எடை கூடுவதை கவனிக்க முடியும். இப்படி நீங்கள் ஒவ்வொன்றாக கவனித்து வகைப்படுத்திய பொருட்கள்தான் காலப்போக்கில் மாவுச்சத்து(Carbohydrates), புரதச்சத்து(Proteins), கொழுப்புச்சத்து(Fat), உயிர்ச்சத்து(Vitamins) எனும் பெயர் பெற்றது. அதற்காக இந்த சத்துக்களை மட்டும் சாப்பிட்டாலே உயிர் வாழ முடியும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. இந்த சத்துக்களைத் தவிர உங்களால் பெயரிடப்படாத ஆயிரக்கணக்கான சத்துக்களும் (Micronutrients) நீங்கள் சாப்பிடும் உணவில் கலந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து செல்வதால் தான் உங்களால் உயிர் வாழ முடிகிறது. அதுமட்டுமல்ல, நீங்கள் சாப்பிடும் சாப்பாடு எவ்வாறு கலந்து கலவையாக உள்ளது என்பது கூட அதன் குணத்தை தீர்மானிக்கும். 

நீங்கள் ஒரு விறகடுப்பை பற்ற வைக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். எரிய வைப்பதற்கு உங்களுக்கு விறகும் மண்ணெண்ணையும் உள்ளது. அப்படியானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? விறகின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தால் மண்ணெண்ணெய் எளிதாக பற்றிக்கொண்டு பின்பு விறகும் எரிய ஆரம்பிக்கும். ஆனால் விறகு மற்றும் மண்ணெண்ணையை தனித்தனியாக எரிய விட்டால் மண்ணெண்ணெய் உடனடியாக தீர்ந்து விடும். விறகை எரிய வைப்பதற்கு நீங்கள் அரும்பாடுபட வேண்டியிருக்கும். உங்கள் உடலிலும் இதேபோல்தான். அரிசி போன்ற தானியங்கள் விரைவில் செரிமானம் அடைந்து உடல் சக்தியாக மாறும் தன்மை கொண்டது. ஆனால் நெய் போன்ற கொழுப்பு பொருட்கள் மிகவும் மெதுவாக சக்தியாக மாறும் தன்மை கொண்டது. மேலும் கொழுப்பு எரியவில்லை என்றால் உடலிலேயே தங்கி விடும் வாய்ப்பும் உள்ளது. நீங்கள் சாதத்துடன் நெய்யைக் கலந்து சாப்பிட்டால் இரண்டும் கலந்து சற்று மெதுவாக உங்கள் உடம்பில் சக்தியாக மாறும். இதன் மூலமாக உங்களுக்கு தொடர்ந்து பல மணி நேரம் சீரான முறையில் சக்தி கிடைத்துக்கொண்டே இருக்கும். ஆனால் நெய்யை தனியாக அருந்தினால் அது செரிக்காமல் உடம்பில் கொழுப்பாக மாறிவிடும். சோற்றையும் தனியாக சாப்பிட்டால் வேகமாக சக்தி வெளிப்பட்டு உடல் சர்க்கரையை உடனடியாக ஏற்றிவிட்டு நோய்வாய்படுத்த கூட வாய்ப்பு உள்ளது. இந்த நோய்க்கு நீங்கள் வைத்த பெயர் தான் நீரிழிவு. நீங்கள் சாப்பிடும் உணவு எவ்வளவு வேகமாக எரியும் தன்மை கொண்டது என்று அளப்பதற்கு நீங்கள் Glycemic Index என்று பெயர் வைத்து உள்ளீர்கள். 

சரி. அடுப்பைப் பற்ற வைத்தாயிற்று. எரியும் அடுப்பை கொண்டு உங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் அல்லவா? அப்படி அடுப்பை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அதிக சூட்டின் காரணமாக அந்த அடுப்பே பாதிப்படைய நேரிடும். உங்கள் உடம்பிலும் இதே தான் நடக்கிறது. நீங்கள் சாப்பிட்டு உருவாக்கிக்கொண்ட சக்தியை சரியாக பயன்படுத்தாவிட்டால் அந்த சத்துக்களை உங்கள் உடம்பை சீரழிக்கவும் ஆரம்பித்துவிடும். ஆகவே நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவிற்கு ஏற்றாற்போல் உங்கள் உடம்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும். இதற்கு தான் உடற்பயிற்சி போன்ற விஷயங்கள் உங்களுக்கு பயன்படும். உணவை தனித்தனியாக பிரித்து சாப்பிடவும் முடியாது, அதேசமயம் சரியான கலவையில் சாப்பிட வேண்டும் என்பதை பார்த்துவிட்டோம். ஆனால் எது சரியான உணவு என்று எப்படித் தீர்மானிப்பது?

சரிவிகித உணவு

உங்கள் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பரிணாம வளர்ச்சியினால் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது. பரிணாம வளர்ச்சி என்பது என்றுமே ஒரே தலைமுறைக்குள் நடக்காது. ஒரு சில தலைமுறைகள் தொடர்ச்சியாக பழக்கப்படுத்திக் கொண்டு வரும் செயலே பரிணாம வளர்ச்சியாக மாறுகிறது. இந்த முறையில் பார்த்தால் நீங்கள் தொடர்ந்து பல தலைமுறைகளாக எந்த உணவை சாப்பிட்டுக் கொண்டு வருகிறீர்களோ அதுவே உங்களுக்கான சரிவிகித உணவாக மாறுகிறது. உங்களுக்கு ஒவ்வாத ஒரு உணவாக இருந்தால் கூட பல தலைமுறைகளாகத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது உங்களுடைய சரிவிகித உணவாக மாறிவிடும். ஆகவே உங்களின் சரிவிகித உணவு என்பது உங்கள் முன்னோர்கள் சாப்பிட்டு வந்த உணவு மட்டும்தான். ஒவ்வொரு மனிதருக்கும் இது வேறுபடும் என்பதால் அனைவருக்கும் பொதுவான ஒரு சரிவிகித உணவை யாராலும் வரையறுத்துக் கூற முடியாது. உங்கள் முன்னோர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு சிரமமாக இருந்தால் அதற்கும் ஒரு எளிதான உபாயம் உள்ளது. நீங்கள் வாழும் பகுதியில் எது அதிகமாக கிடைக்கிறதோ அதனையே பெரும்பாலான முன்னோர்கள் சாப்பிட்டு வந்து இருப்பார்கள். நீங்கள் சிறப்பான உணவை தூரதேசத்திலிருந்து இறக்குமதி செய்து சாப்பிடுவதை விட உங்கள் உடலுக்கு பழக்கப்பட்ட உணவு தான் என்றுமே சிறந்தது.

உங்கள் உடலுக்கு பழக்கப்பட்ட உணவை  நீங்கள் சாப்பிட்டு வந்தால் கூட அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. நீங்கள் ஏற்கனவே வகைப்படுத்தி வைத்த சத்துக்களைத் தவிர பல்வேறு வகைப்படுத்தாத சத்துக்களும் உள்ளது என்று கூறினேன் அல்லவா? இவை அனைத்து சத்துக்களும் ஒரே பொருளில் கிடைப்பது என்பது மிகவும் அரிது. அதனால் உங்களது பழக்கத்தில் இருக்கும் பல்வேறு உணவுப் பண்டங்களையும் நீங்கள் சாப்பிட வேண்டும். உதாரணமாக, வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு கொண்டு ஒருவரால் வாழ முடியாது. ஆகவே பழம், காய்கறி, இறைச்சி என்று பலவிதமான உணவுகளை அவரவர் பழக்கத்திற்கு ஏற்றாற்போல் உண்ண வேண்டும். மேலும் அவையாவும் இயற்கையாக இருக்கும் அதே நிலையில் அதிகம் பதப்படுத்தப் படாமல் சாப்பிட்டு வந்தால் அதுவே ஒருவருடைய சரிவிகித உணவாக மாறுகிறது. 
நீங்கள் வெளியிலிருந்து சாப்பிடும் உணவைப் பற்றி கூறிவிட்டேன். உங்கள் உடம்பில் உள்ள அங்கங்கள் யாவையும் உணவை அதேபோல் சாப்பிடுவதில்லை. நீங்கள் சாப்பிடும் உணவு உடலில் சேர்வதற்கான ரகசியத்தில் இந்த மொத்த அண்டமும் வேலை செய்யும் முறை அடங்கியுள்ளது. அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன். காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -