நந்தவனத்தில் ஓர் ஆண்டி

கதையாசிரியர்: ஜெயகாந்தன்

- Advertisement -

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

கடுவளி சித்தரின் இப்பாடலை பலமுறை கேட்டு ஏதோ வேடிக்கைப்பாடல் என நினைத்துக் கடந்திருப்போம். ஜெயக்காந்தன் இப்பாடலுக்குள் உறங்கிக்கிடந்த ஒரு கதைக்கு உயிர் கொடுத்து நம்மை உருகவைத்திருக்கிறார்.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது நந்தவனம் போல் காட்சியளித்தாலும் அது ஒரு இடுகாடு என தொடங்கும் இக்கதையின் நாயகன் ஆண்டி என்ற வெட்டியான். பெயரளவில் தான் ஆண்டி, உண்மையில் அவனுக்கு முருகாயி என்ற மனைவியும் இருளன் என்றொரு மகனும் இருக்கிறார்கள்.

பச்சைக்கொடிகள் படர்ந்த கம்பவுண்ட், மேற்கு மூலையில் பனைஓலைகளால் வேயப்பட்ட குடிசை. என கதாசிரியரின் வர்ணிப்பில் நாமும் ஆண்டியின் வீட்டிற்குள் அமர்ந்து அவனை ரசிக்கத் தொடங்கிவிடுகிறோம். எந்த வேலை செய்தாலும் ஆண்டியின் வாய் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” என்ற பாடலை பாடிக்கொண்டே இருக்கிறது.

அது புதைக்கும் இடம் என்பதால், அதிகமாக குழந்தைகளின் பிணங்களே வருகிறது. ஆண்டிக்கு அக்குழந்தைகளைப் பார்க்கும்போது பரிதாபமோ பச்சாதாபமோ ஏற்பட்டதில்லை. அர்த்தம் தெரியாவிட்டாலும் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” என்று பாடிக்கொண்டே குழிகளை வெட்டுவான். ஊரார் அவனை ஒரு மாதிரி என்பார்கள்.

இடுகாட்டை நந்தவனமாக்கிய உழைப்பாளி. அனாசயமாக குழிகள் தோண்டும் பலசாலி. என ஆண்டியின் ஒவ்வொரு இயல்பையும் விளக்கி அவனை நம் உள்ளத்தில் உருவெடுக்க வைத்துவிடுகிறார் ஆசிரியர். அவன் மனைவி மற்றும் மகன் கருப்பழகன் இருளனையும் நம் கண் முன்னே தத்ரூபமாக நிறுத்திவிடுகிறார்.

இவன் இந்தப் பாடலைப் எங்கு கேட்டிருப்பான்? என்று கேள்வியை எழுப்பிவிட்டு. முருகாயியின் கனவுக்குள் நம்மைப் பயணிக்க வைக்கிறார். அதில் அவள் கையில் வந்தமரும் ஒரு கரும்பூச்சி தங்கநிறமாக மாறி அவளைத் தின்னச்சொல்லித் தூண்டுகிறது. ஒருகட்டத்தில் அவள் அதை விழுங்குகிறாள். பின் அக்கனவை ஆண்டிக்கு விவரிக்கும் போது கனவில் விழுங்கிய அப்பூச்சி வயிற்றுக்குள் ஒவ்வாமையை ஏற்படுத்தி அவளை வாந்தி எடுக்க வைக்கிறது. ஆண்டியின் பலநாள் வேண்டுதல் நனவாகிறது என்பதை அவன் புரிந்துகொள்கிறான். வயிற்றில் ஒவ்வாமையை ஏற்படுத்திய அந்தப் பூச்சி இருளன் தான். ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்ற ஒற்றை வாக்கியத்தை ஒரு கனவாக, கதைக்குள் கதையாக, அழகாக விளக்கி முருகாயி விழுங்கிய அந்தப் பூச்சியை நம் வயிற்றிகுள்ளும் ஓடவிடுகிறார் ஆசிரியர்.

கருவுற்றிருந்த முருகாயிக்கு மருந்துவாங்க சென்ற வழியில் ஒரு பண்டாரம் பாடிச் சென்ற அந்தப் பாடல்தான் ஆண்டியின் மூச்சாகவே மாறிப்போயிருந்தது. இருளன் ஒருநாள் உடல்நிலை சரியில்லாமல் இறக்கிறான். ஆண்டியும் முருகாயியும் அழுது புரள்கிறார்கள். எத்தனையோ குழந்தைகளுக்காக குழிவெட்டிய ஆண்டி தன் மகனுக்காக வெட்டுகிறான்.

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி…” அதே பாடல் அவனைத் துரத்துகிறது. இப்போது அவனுக்கு அதன் அர்த்தம் புரியத் தொடங்குகிறது. ஓவென்று அழுகிறான். அவன் புதைத்த அத்தனை குழந்தைகளும் அவன் முன்னே வருகிறார்கள். அத்தனை பேருக்காகவும் கதறிக் கதறி அழுது மூர்ச்சையாகிறான். அன்றிலிருந்து இடகாட்டுக்கு வரும் ஒவ்வொரு குழந்தைக்காகவும் அழுகிறான். இப்போதும் ஊரார் அவனை ஒரு மாதிரி என்று தான் கூறுகிறார்கள். இந்தக் காட்சி விவரணைகளில் ஜெயகாந்தன் எப்படிப்பட்ட கல்நெஞ்சக்காரனையும் கதற வைத்துவிடுகிறார்.

கதை முழுவதும் ஒலிக்கும் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” கதை முடிந்த பின்னும் நம் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஒரு சோக கீதமாக.

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -