சூர்யப்பாவை – 9

தொடர் கவிதை

- Advertisement -

கண்களை அகலவிரித்து அதில்
மகிழ்நிறங்களை நிரப்பிப்
பூவாய்தனைப் பெரிதாய்த்திறந்து
பெருவியப்பினை அதிலேயிட்டுக்
கைகளைக் கிலுகிலுப்பையாக்கிப்
பேரானையொன்றை வரவேற்கும்
குழந்தையின் மனநிலையில்தான்
காதலினை ஏற்கவேண்டும்.
அப்பேரானை செழித்தோங்கிய
அடாவியில் உலாவுதலாய்க்
காதலுற்றுக் களிக்கவேண்டும்..

திங்களிருமுறை கடல்நீர்
ஈர்த்துயர்த்தும் நிலாவாய்
ஒருவரையொருவர் ஈர்த்தல்
இயல்பாய் நிகழவேண்டும் .
பருமலை நனைத்திடும்
பெருமழையாய் முழுதாய்க்
காதலைத் தழுவிடவேண்டும்.

என்னுலகத்தின் பேருயர்மலையே
என்னை மழையாக்குவதும்
எனக்காய் மடியேந்துவதும்
எனையீர்த்திட உன்கைகளை
மரங்களாக்குவதுமென
மாயங்கள் பல செய்கிறாய்.
மயங்கித் திளைத்தலும்
மணமாய்த் திரள்தலுமாய்
மகத்தான அப்பொழுதுகளில்
உனையென்வசம் ஆக்குகின்றேன்.
மலைத்தேகமெங்கும் தேடிதேடி
காதலெழுதும் மழைப்பெண்
எனக்கு மனமெங்கும்
வண்ணங்கள் பூசுகின்ற
வானவில் நீ சூர்யா ..!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -