சூர்யப்பாவை – 8

- Advertisement -

தரைசூழ்ந்த தளும்பாக்கடல்
தவமேற்று நடத்துகின்ற
வேள்வியின் விளைவரம் மழை.
தன் காலடியிலேயே என்றும்
வீழ்ந்து கிடந்தாலும்
தரையின் விடாய் தீர்க்க
உப்புநீர் தருவதில்லை கடல்.
உயர்வேள்வி செய்து உருவாக்கி
நன்னீரையே துப்பாக்குகின்றது.

காலடியிலேயே கிடப்பதால்
கழிவிரக்கம் கொள்வதில்லை கடல்.
காமுற்றுக் கனிவு கொள்கிறது.
அலைவிரல்களைத் தரைக்கனுப்பி
அன்றாடம் தலைகோதுகிறது.
கிளிஞ்சல்களில் காதலைப்
பொதிந்து தூதனுப்புகிறது.
சங்குகளில் கொஞ்சல்மொழியைக்
குரல்செய்தியாக்கிக் கிசுகிசுக்கிறது.

 
கூடவே இருப்பதுமட்டும் பெரிதல்ல,
இருப்பதை உணர்த்துவதே தேவை.
சொல்லிலும் செயலிலும் அன்றாடம்
உணர்த்தப்படாத அன்பு பாறையில்
உணங்கிய பசும்புல்லாதல் திண்ணம்
கைவிரல்களை இறுகப்பிணைத்துக்
கடற்கரையில் நடக்கையில்
கதைத்தாய் இவற்றையெல்லாம்.
ஆழிபோல் பெருங்காதல் கொள்வதே
ஆகச்சிறந்த வாழ்வென்றாய்.

ஆழியின் காதலைப் படியெடுத்தால்
உன்னுருவம்தான் கிடைக்குமாதலால்
உன்னைப்போல் காதல்கொள்வதே
உயிரடையும் மாண்புநிலை சூர்யா.
உன்னால் காதல்கொள்வதும்
உனக்காய்க் காதல்செய்வதும்
இவ்வாழ்வின் பெருநற்பேறு.
கடலும் காதலுமானவன் நீ சூர்யா !

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -