சூர்யப்பாவை – 30

தொடர் கவிதை

- Advertisement -

இலக்கினையடைதலென்பது
இலகுவானதல்ல ..
நீண்டநெடும்பயணத்தில்தான்
தேடலின் தவிப்பு உச்சியிலிருக்கும்.
அடைந்த அக்கணத்தில் வானுயர
ஆர்ப்பரித்தெழும் உள்ளம்
அதன்பின் செய்வதறியாது
அலைக்கழியும் அங்கிங்கு தடுமாறும்
நிலைநில்லாது சுற்றித்திரிந்து
வலைபட்ட மானாய் மருளும்.

இலக்கினை யடைதலினும் பெரிது
அதனைத் தக்கவைத்தல்தானே.
தக்கன செய்தால் தங்கும் 
செக்கினில் பூட்டிய மாடாக
இலக்கினைச் சுற்றிவளைத்து
இருத்திக்கொளல் இன்றியமையாப்
பெரும்பேணற்பணி.
பெட்டைக்கோழி தம் செட்டைக்குள்
முட்டை காத்தலாய் முழுதாய்
அடைகாத்தலே தக்கவைத்தல்.

உன்னை நானும் என்னைநீயும்
உறவாய் உலகாய் அடைந்தபின்
நமக்குநாம் உயிராய்த் திரிதலும்
ஒன்றாய் எரிந்தொளிர்தலும்
உள்விழுந்து உள்ளொளி தூண்டி
வெள்ளெனக் காமக்கடுஞ்சுடர்
விளைவிக்கும் அருந்தவமே
ஆயுட்கால அடியார்ப்பணி.

அடைதலினும் அருமை கொண்டது
ஆழ்ந்தகன்ற நீள்தேடல்.
தேட்டத்தில் ததும்பட்டும் காதல்
தேக்கமாய் நிலைகொண்டு
காதல்நதிகளாய்ப் பாய்ந்தோடிக்
காமக்கடும்புனலாழியில்
கலந்து சூழட்டும் நம்முலகினை.
கடலும்வானுமாய் ஒட்டிக்கொண்டு
கட்டிக்கிடப்போம் வா சூர்யா.
ஒட்டிய இடத்தினின்று விரிந்து
ஓங்கி உலகளப்போம் வா …!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -