சூர்யப்பாவை – 26

தொடர் கவிதை

- Advertisement -

புற்களாய்த் துளிர்க்கும் நேசத்துக்கு
நிலம்தந்து நீர்தந்து தட்பவெப்ப
நிலை சமன்செய்து வேளைக்கு
நல்லுரமாய்க் கவனம்தூவி
நாளொருமேனியும் நல்ல
பொழுதொரு வண்ணமுமாய்
நீ செய்த வேளாண்மை
புல்லினை மூங்கிலாக்கியது.

மூங்கிலின் கணுவெங்கும் உன்
விரல்களின் திடம் சடசடக்கிறது.
பச்சைமூங்கிலில் உடற்காமமும்
பொன்மூங்கிலில் உளக்காமமும்
உன்னால் நினைவூட்டப்படுகின்றன.
பசுங்காமம் அடர்ந்துஅடர்ந்து
பொற்காமம் திரள்கின்றது.
பொற்காமத்தின் பொன்னுடலில்
ஐங்கணையனின் கணைகள்
அழகாய்த் துளைக்கின்றன.
காற்றாய் நுழைந்த காதல்
இசையாய் வெளிவருகின்றது.
மூங்கில் புல்லாங்குழலானது.

இசைப்பவனாய் இருக்கும்வரை
இளக்கமேற்றிப் பண்படுத்துகிறாய்.
இசையாய் மாறிவிட்ட பின்னர்
இடைவிடாது பண்ணிசைக்கிறாய்.
ஒலிப்பவை யாவும் தேவநாதம்
ஓயாது உன்னை நினைவூட்டும்
தாளாத ஏக்கம் தனையூட்டும்.
மீட்டுபவனுக்காய்த் தவமேற்கும்
மெல்லதரம் தொடத்தேடும்.
இருவிதழ் இடைத்தேர்தலில் வென்று
அமர்ந்திட்டால் அதுவே போதுமே..
நெஞ்சத்து நேசக்காற்றினை மெல்ல
நெளியவிடுகிறாய் எனக்குள்.

உயிரின் ஓசையில் உருகியுருகி
உறைகின்றோம் இருவருமே.
உள்நுழைவிலும் வெளியேற்றத்திலும்
பன்மடங்காய் இசைக்குறிப்புகள் பெருக
உயிர்ப்பத்திரம் எழுதுகிறாய் நீ.
இசையானவன் நீ சூர்யா.
இசைவதில் எமையாள்பவனும் நீ
காதலென்பது இசைபடவாழ்தல்.!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -