சூர்யப்பாவை – 18

தொடர் கவிதை

- Advertisement -

எழில்நிறைந்த பொம்பொழிலெனினும்
சிறுநெருஞ்சில் தவிர்த்திட
சிற்றடியில் கவனம்வைத்துப்
பார்த்து நடந்திடுதல்போல
எத்துணை நெருக்கமெனினும்
சொற்கவனம் கொள்க ..
சிறுநெருஞ்சில் வலியெனினும்
சிறுகசிறுகச் சேர்ந்துவிட்டால்
பெருங்கீறல் தோன்றிடலாம்.
எறும்புச் சொற்களாயிருப்பினும்
அடிக்கடி ஊர்ந்தால் அன்பில்
பெருந்தேய்வு உண்டாகலாம்.

முதலுரிமை கொண்டமைக்காக
முழுவுரிமை தந்தமைக்காக
எச்சொல்லையும் எடுத்தெறிதல்
என்பதுதான் தகுமோ?
உரிமைகளை நிலைநிறுத்திட
உள்ளத்தை உடைத்திடலாமோ?
அன்புக்குரியவராய் ஆனபின்பு
வன்சொல் வலிச்சொல் எதற்கு?
தனக்குப் பிடித்தவற்றைத்
தான்தோன்றியாய்ச் செய்வதல்ல காதல்.
இணையினுளத்தில் எங்கேனும்
இடறலைத்தராமல் எதையும்
செய்வதே உயர்காதல்.

தோளோடணைத்துத் தேற்றுகின்ற
தோழமைகொண்ட உறவுக்கே
வாழ்நாள் காதலாளனாய்
வாழும் வாய்ப்பு கிட்டிடும்.
இணைந்து நடக்கும் இயல்பும் கைகள்
பிணைத்து நடக்கும் இறுக்கமும்
வெடித்துச் சிரித்திடும் இலாகவமும்
வெளியிடத்தில் காட்டிடும் எளிமையும்தான்
விட்டுப்பிரிய விடாத பிடிப்புகள்.

வாழ்வின் பிடிப்பென்பது உன்
விரல்களால் என் விரல்களில்
விரும்பியும் வியந்தும் விரிந்தும்
எழுதப்படவேண்டும் எப்போதும்.
எட்டிப்பிடித்தாலும் உடனின்று
கட்டிப்பிடித்தாலும் நேயத்தை
நெட்டித்தள்ளி நிரப்பிவிடுகிறாய்
நெஞ்சக்கடல்தனை.
கைதேர்ந்த காதற்கடலாடி நீ சூர்யா..
என்னுலகை எல்லாப்பக்கமும் நீக்கமற
நீதான் சூழ்ந்திருக்கிறாய் …!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -