சூர்யப்பாவை – 17

தொடர் கவிதை

- Advertisement -

சிறுசிறு செல்லக் கவனயீர்ப்புச்
செயல்களே பெருங்காதல்
மாடமாளிகைத் திறவுகோல்கள்.
தேநீரோடு ஒட்டியுறவாடும்
வெண்ணெய் மாச்சில்களாய்
அன்புறவு அமைத்திடல் வேண்டும்.
வெளிப்படுத்தாத அன்பெல்லாம்
விதைக்கப்படா விதைகள்தாமே.

வாய்ப்பு கிடைக்கும்போது மட்டுமல்ல
வாய்ப்புகளை உருவாக்கியும்
வார்த்தெடுத்திட வேண்டும்
அன்பின் பொன்பொழுதுகளை..
சொற்களை முத்தங்களாக்கினால்
சொக்குப்பொடி நொடிகளால்
நிறைந்திடும் கணங்கள்.
முத்தங்களைச் சொற்களாக்கினால்
முடிவிலாப் பேரின்பத்தில்
முக்குளிக்கும் கணங்கள்.

தாய்வழி முறைகொண்ட
தமிழ்வழித் தலைமுறை நாம்
வாய்வழி வளர்சிதைமாற்றம் கண்டு
வளர்த்தெடுக்கலாம் காதலை.
சொல்லில் மொழியில் செயலில்
அதரங்கள் ஆற்றுப்படுத்தினால்
இதமாகும் ஈருள்ளக்காதல்..
கட்டுப்பாடுகளை இட்டுக்கொள்வதும்
கட்டவிழ்த்துக் கொள்வதும்
காதலைப் பலப்படுத்தும்
இலக்கென இருத்தல் நலம்.

சொல்முத்தமும் முத்தச்சொல்லும்
இருபுறம் தாங்கியவுன் எடைக்கோலில்
காதல்முள் ஊசலாடிக் கொண்டே
இருக்கின்றது இருபுறமும்.
அதில் ஊஞ்சலாடுகின்றன
உனதன்பின் வெளிப்பாடுகள்.
அன்புப்பெருவெளி நீ சூர்யா.
அதில்தான் சுழல்கின்றது
என்னுலகம்…!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -