சூர்யப்பாவை – 11

தொடர் கவிதை

- Advertisement -

அன்போ காதலோ நட்போ
அங்கே விட்டுக்கொடுத்தலே
ஆணிவேரெனச் சொல்லுமுலகம்.
விட்டுக்கொடுப்பதில் தயக்கமில்லை.
எதையெல்லாம், எப்போதெல்லாம் ,
எதுவரையிலும் விட்டுக்கொடுப்பது?
ஒவ்வொருவர் கையிலும்
வெவ்வேறு அளவுகோல்..

விட்டுக்கொடுப்பதால் சிலநேரம்
விழுந்துவிடும் இடைவெளி.
அதிலிருந்து முளைக்கும் விரல்
எதிர்ப்புறம் மட்டுமே சுட்டும்.
சுட்டுகையில் உதிரும்
சொற்கள் தீயாய்ச் சுடும்.

விட்டுக்கொடாத காதலையே
விளைவிப்போம் நமக்குள்.
புரிதலே போதும்..
குறைசுட்டிச் சரிசெய்கையிலும்
அண்மைச்சுட்டுக்கே வாய்ப்பு.
சேய்மைச்சுட்டுக்கு இடந்தராது
ஒட்டிக்கொள்வோம் என்கிறாய்.

தோழமையூறும் உனதண்மையில்  
வெம்மையின் கதகதப்பே 
வெளியாகும் என்னன்புச் சூர்யா.
வெக்கையும் கொதிப்பும்
ஒருக்காலும் உமிழப்பட்டதில்லை
ஒட்பமும் உயர்காதலும் கலந்து
தட்பவெப்ப இடைவெளி சீராக்கும்
காலப்பருவக்காதலன் நீ சூர்யா..!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -