சுதந்திரத்தின் நிறம்

நூலாசிரியர் : லாரா கோப்பா (தமிழில்: B.R. மகாதேவன்)

- Advertisement -

பதிப்பகம்: தன்னறம் நூல்வெளி

முதல் பதிப்பு: 2019

விலை: ரூ.500

காந்தியப் போராளிகளான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் வாழ்க்கை வரலாற்று நூல் “சுதந்திரத்தின் நிறம்”. அவர்களுடன் தங்கி பேட்டி கண்டு அவர்களது வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து இத்தாலி மொழியில் எழுதியிருக்கிறார் லாரா கோப்பா. அந்நூலை ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் சரளமான நடையில் மொழிபெயர்த்திருக்கிறார் B.R. மகாதேவன்.

தன்னறம் பதிப்பகம் கெட்டியான அட்டையில் மிகச் சிறந்த முறையில் இந்நூலை வெளியிட்டுள்ளது. சிறிது நாட்களுக்கு முன்னர் 300 இளைஞர்களுக்கு இலவசமாக இந்நூலை வழங்கிய அவர்களின் செயல் பாராட்டுதலுக்குரியது. ஏனெனில் இந்தப் புத்தகம் அவசியம் சென்றடைய வேண்டியது நாளைய உலகம் படைக்கவிருக்கும் இளைஞர்களின் கைகளில்தான்.

நாம் சுதந்திரத்திற்குப் பின்னான காந்தியவாதிகளின் செயல்பாடுகளை மிகவும் குறைவாகவே அறிந்து வைத்திருக்கிறோம். காந்தியத் தத்துவங்கள் கடினமானது, இன்றைய நடைமுறைக்கு ஒத்துவராதது என்றே எண்ணுகிறோம். அது போன்ற எண்ணங்களைத் தகர்த்தெறிகிறது இந்த நூல்.

பெரும்பாலான சரித நூல்கள், இந்த தேதிகளில், இந்த இடங்களில் போராட்டங்கள் செய்தார்கள். அதன் விளைவாக இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன என்பன போன்ற தகவல்கள் மட்டும் அளிப்பவை. நம் மனங்களில் பெரிதாக எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாதவை. அவ்வாறல்லாமல் அத்தகைய போராட்டங்களின் விதை எங்கிருந்து விழுகிறது? போராட்டம் நடத்தும் முன் எத்தகைய முன்னேற்பாடுகள் தேவை? இறுதிவரை தாங்கள் எடுத்துக் கொண்ட நிலையில் உறுதியாக நிற்கும் மனோதிடம் எத்தனை அவசியம்? போன்ற பல ஆதாரமான கேள்விகளுக்கும் பதிலாக கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வரலாற்று நூல் அமைந்துள்ளது. படித்து முடிக்கையில் நம்முள் பலவிதமான அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது.

போராட்டக்களத்தையே வாழ்விடமாகக் கொள்கையில் தம்பதிகளாகப் பல சாதகங்கள் இருந்தாலும் சவால்களும் அதிகமாகவே இருக்கும். இருவரும் தாங்கள் கொண்ட கொள்கைப் பிணைப்பாலேயே வாழ்விலும் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். தனது மகளை எட்டு மாதக் குழந்தையாக தாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு பொதுப்பணிக்கு வந்துவிட்டார் கிருஷ்ணம்மாள். அவரது மகன் பூமிகுமாருக்கு, கிடைக்கும் அவகாசங்களில் கல்வி கற்பித்துள்ளார். இவர்கள் அனைவரும் சேர்ந்து குடும்பமாக வாழ்ந்த நாட்கள் மிகச் சொற்பமே. அதோடு தம்பதிகள் இருவரும் தங்களுக்கு என எதனையும் சொந்தமாக்கிக் கொள்ளாதவர்கள். தனது மனைவியிடம் திருமணத்திற்கு முன் ஜெகந்நாதன் சொன்ன வார்த்தைகள் இவை,

என்னிடமிருந்து எந்தவித சொத்தையோ சுகத்தையோ எதிர்பார்க்காதே, நமக்கென்று எதுவும் இருக்கப் போவதில்லை. நமது வீட்டின் கதவுகள் என்றும் திறந்தேதான் இருக்கும். நாம் உபயோகிக்கும் பாத்திரங்கள் மண்ணாலானவையாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் வேறு இடத்திற்குப் போவேதேன்றால் உடைத்துப் போட்டுவிட்டு போய்கொண்டே இருக்கலாம். நான் எதையும் சுமக்க விரும்பவில்லை.

இந்த எளிய வாழ்கையே அவர்களுக்கு பெரும் பலமாய் இருந்திருக்கிறது. வினோபாவின் ‘பூதான்’ இயக்கத்தில் முழுமூச்சுடன் இறங்கி இந்தியாவின் பல கிராமங்களில் வெற்றிகரமாக பல ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்குத் தானமாக இவர்கள் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதற்காக அவர்கள் சந்தித்த சவால்கள் எண்ணிலடங்காதவை. அவற்றை அவர்கள் கடந்து வந்த பாதை சாகசங்களுக்குப் பஞ்சமில்லாதவையாக இருக்கின்றன.

பல இடங்களில் கிருஷ்ணம்மாளின் துணிச்சல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஜெயபிரகாஷ் நாராயணன் கலந்து கொண்ட ஒரு உண்ணாவிரதப் போராட்ட மேடையில் கிருஷ்ணம்மாள் பேசத் தொடங்குகையில் கூட்டத்தில் இருந்த சிலர் அவர் மீது கல்லெறியத் தொடங்கினர். ஒரு கல் அவரது நெற்றியைப் பதம் பார்க்க, ரத்தம் கொட்டி அவரது வெள்ளைப் புடவை சிவப்பாக மாற ஆரம்பித்துள்ளது. ஆனால் அவரோ பேசுவதை நிறுத்தாமல் தொடர்ந்திருக்கிறார். இந்தப் பார்த்த கிராமப் பெண்களுக்கு உற்சாகமும் ஆவேசமும் ஒருசேரத் தோன்ற, கல்லெறிந்தவர்களைத் தாக்கி விரட்டியுள்ளனர்.

மேலும் சில சம்பவங்களை வாசிக்கும்போது, மக்களைச் சுரண்டி வாழும் பண்ணையார், அவரின் பண பலத்திற்குப் பயந்த ஏழை மக்கள் என அந்தகால எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் இங்கே அந்தப் பண்ணையார்களை அந்த ஏழை மக்களுக்காக எதிர்ப்பவர்கள் நிஜக் கதாநாயகர்கள். காந்தியவாதிகள்.

நூலில் காந்தி, வினோபா, ஜெயபிரகாஷ் நாராயணன், காமராஜர் போன்ற பெரிய தலைவர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. அவர்களின் செயல்பாடுகள், கொள்கைகள் பற்றிய தங்களது கருத்துகளை இருவரும் நேர்மையாகப் பதிவு செய்திருக்கின்றனர்.

லாரா, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் குறித்து இவ்வாறு கூறுகிறார்:

கிருஷ்ணம்மாள் தன் வாழ்வில் நடந்தவற்றைச் சொல்லும்போது, ஏதோ தேவதைக் கதை ஒன்றைச் சொல்வது போல், ஏதோ ஒரு கனவை விவரிப்பதுபோல் சொல்லிக்கொண்டு போகிறார். அவருக்குத் துன்பம் கொடுத்த நபர்கள் குறித்து எந்த ஒரு கடுஞ்சொல்லையும் எந்த ஒரு நிமிடத்திலும் அவர் சொல்லவே இல்லை. என்னை இது பெரிதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அதுமட்டுமில்லாமல் அவர் அன்று யாரை எதிர்த்துப் போராடினார்களோ அவர்கள் அனைவருமே இன்று அவரது நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அதற்குக் கரணம் அவரது எளிமை, தியாக மனம் மற்றும் போராட்ட குணம்தான். காந்தி சொன்னது போல், ‘ஆங்கிலேயர்களின் ஆட்சியை வெறு, ஆங்கிலேயர்களை வெறுக்காதே’ என்ற வரிகள்.. எவ்வளவு உயர்ந்த ஆன்மீக தளத்தில் அவர் இருந்திருந்தால் இதைச் சொல்லியிருப்பார்.

கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும் அதைத்தான் தங்கள் வாழ்க்கையிலும் பின்பற்றி வந்தார்கள். ஒருவேளை நான் இதை எல்லாம் அருகில் இருந்து பார்த்திருக்காவிட்டால் கதையிலோ கட்டுரையிலோ மட்டும் படித்திருந்தால் நிச்சயம் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் கிருஷ்ணம்மாள் நிஜம். ஜெகந்நாதன் நிஜம். அவர்கள் கட்டிக் கொடுத்த வீடுகள் நிஜம். சேரும் சகதியுமாக இவர்களைக் கட்டித் தழுவி, வாழ்த்தும் வணக்கமும் சொல்லும் மனிதர்கள் நிஜம். அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோசம் நிஜம். இருவரின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள இன்றைய தலைமுறையினருக்கு ஏராளமான வாழ்க்கைப் பாடங்கள் இருக்கின்றன. தன்னலமின்மையையும் தியாகத்தையும் போராட்ட குணத்தையும் போதிக்கும் இந்நூல், இன்றைய இளைஞர்கள் ஒவ்வொருவரும் காட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.

இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சுட்டவும்.?

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

2 COMMENTS

  1. காந்திய நினைவுகள் ததும்பும் நல்லதொரு விமர்சனம்

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -