பாபாவும் நானும் (5)

தரிசனம்

- Advertisement -

ஓம் சாய்ராம்,

சென்ற வாரப் பதிவில் எனக்கு வேலை பறிபோன பின் நான் வேலை தேடி அலைந்ததையும் அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலைப் பற்றியும் கூறியிருந்தேன். அதோடு இறுதியாக இன்று வியாழக்கிழமை இந்த நாளில் எனக்கு ஏதாவது ஒரு நல்லது நடக்க வேண்டும். குறைந்தபட்சம் நேர்முகத்தேர்விற்கான ஒரு அழைப்பாவது வரவேண்டும் என்று கண்ணீர் மல்க பாபாவிடம் வேண்டிவிட்டு எப்போதும் போல டீசர்ட், ஜீன்ஸ் அணிந்து வேலைக்குப் புறப்பட்டுச் சென்றேன். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் ஒரு நேர்முகத்தேர்விற்கான அழைப்பு கூட வராததால் அதற்கான தாடி முகத்தில் அப்பியிருந்தது.

பொதுவாக கடவுளிடம் சென்று எனக்கு இதைத் தா, அதைத் தா என்று வேண்டாக் கூடாது என்று நினைப்பேன். அது உண்மையான பக்தியாக இருக்க முடியாது. கோவிலுக்குச் சென்று கடவுளின் நாமத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜெபிக்க வேண்டும். அவனை நமக்குள் முழுமையாக நிறைக்க வேண்டும். ஆனால் இப்படி எல்லாம் நினைக்க மட்டும் தான் முடிகிறது. ஆபத்து என்றால் ‘ஐயா  சாமி காப்பாத்து’ என்று அவரின் பாதங்களில் ஓடி விழுந்துவிடுகிறேன். எப்போது விழுந்தாலும் அவர் கைகள் பத்திரமாக தாங்கிப்பிடித்து தூக்குகின்றன. அப்படி இருக்கும்போது அவர் பாதகமலங்களில் பணிவதில் என்ன தவறு இருக்க முடியும்?

அலுவலகத்திற்குச் சென்று என் இருக்கையில் அமர்ந்தேன். பொதுவாக வேலை தேடுபவர்கள் உங்கள் வேலை விண்ணப்ப மின்னஞ்சல்களை அதிகாலையில் அனுப்புவது சிறந்தது. ரெக்குரிட்மென்ட் ஏஜென்சியை சார்ந்தவர்கள் வேலைக்கு வந்து அவர்கள் வேலையைத் தொடங்கும்போது உங்கள் மின்னஞ்சலின் நோட்டிபிகேசன் அவரின் கவனத்தை ஈர்க்கும். இது நானே எனக்கு உருவாக்கிக்கொண்ட ஒரு முறை. அன்றும் அப்படித்தான் முந்தைய இரவு குறித்து வைத்திருந்த முன்னஞ்சல்களுக்கெல்லாம் வரிசையாக ரெஸ்யும் அனுப்பி முடித்தேன். 

மணி பதின்னொன்று. கருணைக்கடலான பாபாவிடம் வைக்கப்பட்ட விண்ணப்பம் வீண் போகுமா? எனக்கு ஒரு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. எப்போதும் போல் என்னைப்பற்றிய விசாரிப்புகளுக்குப் பின் நீங்கள் நேர்முகத்தேர்வுக்கு தயாரா என்றாள் அந்தப் பெண்மணி.

“நான் தயார் எப்போது வரவேண்டும்?” என்றேன். 

“இப்போது மணி பதின்னொன்று. உங்களால் மதியம் ஒரு மணிக்கு வர முடியுமா?”

“இன்றேவா? நேர்முகத்தேர்வா?” என்று சந்தேகமாகக் கேட்டேன். 

பொதுவாக அழைப்பார்கள் பின் நேர்முகத்தேர்வு நடத்தப்போகும் மேலாளரிடம் நாள் நேரம் குறித்துவிட்டு மறுபடி அழைத்து நம்மிடம் கூறுவார்கள். இப்படித்தான் அன்று வரை நான் சென்ற அத்தனை நேர்முகத்தேர்வும் நடந்திருக்கிறது. இவள் இன்று மதியம் வரவேண்டும் என்கிறாள். 

பாபா பாபா…. ஓம் சாய்ராம்… ஓம் சாய்ராம்… மனதிற்குள் பல முறை சொல்லிக்கொண்டேன். என்னை நானே ஒரு முறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்.

“சரி வருகிறேன்” என்றேன்.

 “உங்கள் நேர்முகத்தேர்வு சரியாக ஒரு மணிக்கு சைன்ஸ் பார்க் டிரைவில் நடைபெறும்.” என்று கூறி அலுவக முகவரியும் அங்கே நான் சந்திக்கவேண்டிய நபரின் அலைபேசி எண்ணையும் கொடுத்தாள்.

நான் வேலைசெய்துகொண்டிருந்த இடம் சிரங்கூன். தங்கியிருந்த இடம் அங் மோ கியோ. இடையில் ஐந்து பேருந்து நிறுத்தங்கள் தான். பேருந்துக்கு காத்திருக்கும் நேரத்தையும் சேர்த்து ஒரு இருபது நிமிடங்களுக்குள் வீட்டை அடைந்துவிடலாம். ஆனால் அங்கிருந்து சைன்ஸ் பார்க் டிரைவ் செல்ல வேண்டுமானால் ஒரு பேருந்து இரண்டு ரயில்கள் மாற வேண்டும். இடையில் என் முகத்தை மறைத்திருக்கும் தாடியை அகற்றி உடுப்புகள் மாற்றிச் செல்ல வேண்டும். குளித்து முடித்து மணியைப் பார்த்தேன் பன்னிரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. இனி பேருந்து ரயில்களுக்காக எல்லாம் காத்திருந்து செல்வதென்பது வேலைக்காகாது. டாக்சியைப் பிடித்துச் செல்லும் முடிவெடுத்தேன்.

பொதுவாக பேச்சுலர் வாழ்க்கையில் காலை உணவிற்கு அர்த்தம் தெரியாத இளைஞர்கள் தான் பலர் இருப்பார்கள். நானும் அவர்களில் ஒருவன். ஆனாலும் சரியாக பன்னிரண்டு மணிக்கு எனக்குப் பசிக்கத் தொடங்கிவிடும். அன்று எனது உடலும் மனமும் பாபாவால்  நிறைந்துகிடந்ததால் பசி தெரியவில்லை. 

மகிழுந்தின் குளுகுளு பயணத்தில் மூளை படித்ததை எல்லாம் மீண்டும் அசைபோட்டுக்கொண்டிருந்தது. சரியாக 12.45 க்கு அலுவலகம் அடைந்துவிட்டேன். பத்து நிமிட காத்திருப்புக்குப் பின் அந்தப் பெண்மணி தந்த அலைபேசி எண்ணுக்கு அழைத்தேன். ஐந்தடி உயரத்தில் சிறுவன் போல் ஒரு சீனர் வந்தார். ஒல்லியான தேகம் தடிமனான கண்ணாடி. “ஹாய்” என்று கையுயர்த்தினார்.

நானும் பதில் ஹாய் வைத்தேன்.

ஒரு கண்ணாடி அறையில் சிறிய வட்ட மேஜை இருந்தது. அதைச் சுற்றி நான்கு நாற்காலிகள் கிடந்தன. அதே போல் அங்கு மேலும் சில மேஜைகளும் நாற்காலிகளும் கிடந்தன. அந்த அலுவகத்தில் இருக்கும் நபர்கள் சாப்பிடும் இடமாக இருக்கலாம். ஆனால் அங்கு யாருமே சாப்பிடவில்லை. நாங்கள் இருவர் மட்டும் தானிருந்தோம். சிங்கப்பூரில் அலுவலகத்திற்கு உணவு கொண்டு வந்து சாப்பிடுபவர்கள் மிகச் சொற்பமாகத் தானிருப்பார்கள். பெரும்பாலும் கடைச் சாப்பாடு தான்.

அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்தார் நான் எதிரே அமர்ந்தேன். அவர் கையில் வைத்திருந்த சிறிய கையேட்டையும் பேனாவையும் மேசை மீது வைத்தார். ஒவ்வொரு கேள்வியாக என்னை நோக்கி வந்தது. முடிந்தவரை சிறப்பாகவே பதிலளித்தேன். கையேட்டில் எழுதி என் பக்கம் தள்ளினார். c# ப்ரோக்ராமிங் கேள்வி ஒன்று இருந்தது. பூர்த்தி செய்தேன். அடுத்தடுத்து எழுதி எழுதி தள்ளிக்கொண்டே இருந்தார் முடிந்தவரை எல்லாம் சரியாகவே செய்தேன். இரண்டு மணி நேர கிறுக்கல்களுக்குப் பின். சரி நான் மேலும் சிலரை நேர்முகத்தேர்வு செய்துவிட்டு பிறகு சொல்லி அனுப்புகிறேன் என்றார்.

நேர்முகத்தேர்வை நன்றாக செய்த திருப்தி எனக்கிருந்தது. அந்த இடம் எனக்கு மிகவும் புதியது ஒரு சாப்பாட்டுக் கடையும் கண்ணில் தட்டுப்படவில்லை. சரி இரயிலைப் பிடித்து வீட்டிற்குச் செல்வோம். இன்று முழுவதும் விரதமிருந்து சாயுங்காலம சென்று பாபாவை தரிசித்து பின் உண்ணலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

வீட்டிற்கு வந்து சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டினேன். அலைபேசி அழைத்தது. காலையில் பேசிய அதே பெண்மணி. 

“நீ முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்துவிட்டாய். அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும்.” என்றாள்.

“சரி எப்போது செல்ல வேண்டும்” என்றேன்.

“இன்று மாலை ஐந்து மணிக்கு முடியுமா?”

எனக்கு தலை சுற்றுவது போலிருந்தது. ஒருவேளை பசியாகக் கூட இருந்திருக்கலாம். ஒரு நேர்முகத் தேர்விற்கான அழைப்பாவது கொடு என்று கேட்டேன். பாபா ஒன்றில் வெற்றி பெற வைத்து இரண்டாவதற்கு அழைத்துச் செல்கிறார்.

“சரி” என்றேன். 

இப்போது வேறொரு முகவரி தந்தாள். அது தொபாயோவில் இருந்தது. நான் விபரம் கேட்டேன். “தொபாயோவில் இருப்பது தான் தலைமை அலுவலகம் சைன்ஸ் பார்க் டிரைவ் அவர்களின் கிளைன்ட் பிளேஸ். ஒருவேளை உனக்கு வேலை கிடைத்தால் நீ சைன்ஸ் பார்க் டிரைவில் தான் வேலை செய்யும்படி இருக்கும். இப்போது நீ சந்திக்கப்போவது மதியம் சந்தித்தவரின் மேலாளர்.” என்றாள்.

இரயிலைப் பிடித்துச் சரியான நேரத்திற்கு தொபாயோவில் உள்ள அலுவலகம் சென்றேன். வழக்கமான முதலாளி அறை, மேஜை எல்லாம் இல்லை. ஒரு சோபாவில் அவர் அமர்ந்திருந்தார் எதிரே நான் இன்னொரு சோபாவில். ஆறடிக்கு அருகில் அவர் உயரம் இருக்கலாம் நெடுநெடுவென ஒல்லியாக இருந்தார். இவரும் சீனர் தான். சிரித்து சிரித்துப் பேசினார். பெருபாலும் கேள்விகள் அனைத்தும் “சமீபத்தில் தொடர் விடுமுறை எடுக்கும் எண்ணம் எதுவும் இருக்கிறதா? இதற்கு முன் இருந்த நிறுவனத்தில் இருந்து ஏன் மாறுகிறாய்?” என்பது போல பொதுவாகத் தானிருந்தது. ஒரு மணி நேரம் உரையாடினோம். சொல்லி அனுப்புகிறேன் நன்றி என்றார்.

அடுத்து பாபாவை தரிசிக்க வேண்டும். பாபா கோவிலுக்குச் செல்லத் தொடங்கிய நாள் முதல் வியாழக்கிழமைகளில் அவரை தரிசிக்காமல் இருந்தது இல்லை. பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். மீண்டும் அலைபேசி ஒலித்தது. காலையில் பேசிய அதே பெண்மணி. 

“உன்னை தேர்ந்தெடுத்துவிட்டார்கள். வாழ்த்துகள்” என்றாள்.

ஒரு நிமிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. பின் “ஓகே” என்றேன்.

“நீ உடனே கிளம்பி ராபிள்ஸ் பிளேசில் இருக்கும் எங்கள் அலுவலகதிற்கு வரமுடியுமா? இன்றே நீ கையெழுத்துப்போட வேண்டும். அப்போது நாங்கள் உனக்கான வேலை அனுமதி விசாவை விரைவாகப் பெற முடியும். நீ அடுத்த வாரம் அல்லது எப்போது உன் விசா அப்ரூவல் கிடைக்கிறதோ அப்போதே வேலையில் இணைய வேண்டும்.” என்றாள்.

இப்போது என்னை அழைக்கும் இந்தப் பெண் ஒரு ரெக்குரிட் மென்ட் ஏஜன்சியில் இருந்து அழைக்கிறார். இவர்கள் என்னை அவர்கள் கம்பெனியில் வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள். பின் அங்கிருந்து என்னை நேர்முகத்தேர்வு செய்த கம்பெனிக்கு அனுப்புவார்கள். இது அவர்களுக்குள்ளான ஒப்பந்தம்.

ஏழு ஏழரைக்குள் சென்று அப்பாய்ன்மென்ட் ஆர்டரில் கையெழுத்துப் போட்டுவிட்டு பாபாவிடம் செல்லலாம். ராபிள்ஸ் பிளேசில் இருக்கும் அந்த அலுவலகத்திற்கு ஓடினேன். அந்தப் பெண்மணி எனக்காகக் காத்திருந்தார். கொஞ்சம் தடிமனான பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்மணி அவள். என்னை ஒரு இருக்கையில் அமரச்சொன்னாள். அது அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் யாரோ ஒருவருடைய இடம் போல. கணினியின் முன்னால் குழந்தைகள் படமும் ஓரத்தில் வலது கையின் மூன்று விரல்களைக் காட்டிக்கொண்டு சிகப்பு நிற அங்கி அணிந்த பாபாவின் படமும் இருந்தது. கையடுத்துக் கும்பிட்டேன்.

அந்தப் பெண் ஒரு கட்டுக்காகிதத்தைக் கொடுத்தாள் அத்தனையும் படித்துப்பார்க்க வேண்டுமானால் விடிந்துவிடும் என்றேன். 

“சரி நான் உனக்கு முக்கியமான சரத்துகளை விளக்குகிறேன்” என்றாள்.

எனக்கு வருடத்திற்கு எத்தனை நாள்கள் விடுமுறை, எவ்வளவு சம்பளம், எத்தனை மாதம் நோட்டீஸ் பீரியட். இவ்வளவு தான் தேவை. இருந்தாலும் கடமை உணர்ச்சி தவறாத அந்தப் பெண் எனக்கு முழுவதையும் விளக்கினாள்.

அந்தக் கொத்துக் காகிதங்களை கையில் வாங்கினேன். நான் கையெழுத்துப்போட வேண்டிய கடைசிப் பக்கத்தைப் புரட்டினேன். அங்கே அந்த அலுவகத்தின் முதலாளி கையெழுத்து இருந்தது. அதைப் பார்த்த ஒரு நொடி என் மயிர்க்கால்கள் எல்லாம் கூச்செரிந்து நின்றன. கண்களில் நீர் பொங்கியது. அந்தப் பெயர் “சாய் சுதாகர்” என்றிருந்தது. 

ஓம் சாய்ராம்

-சாயி நாமம் ஒலிக்கும் 

அடுத்தப் பதிவைப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

பாபாவும் நானும் (6)

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

4 COMMENTS

  1. இறுதிவரியில் மெய்சிலிர்த்து விட்டது. இறையுணர்வில் முழுநம்பிக்கை கொண்டவர்களால்தான் இம்மாதிரியான விந்தைகளைக் காண முடியும். ?

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -