சகடக் கவிதைகள் – 36

தீராக்கடன்

- Advertisement -

தீராக்கடன்

நேரத்தை விற்பனை செய்யும்
கால வியாபாரியோடு

உலகின் கடைசி நாளில்
உரையாடும் வாய்ப்பை பெற்றேன்

இன்னும் சில மணித்துளிகள்
இனாமாய் கேட்டேன்

கொடுத்த நேரமெல்லாம் வீணடிக்கப்பட்டதாய்
குறைகூறியபடி மறுத்துவிட்டார்

வீணாகாத காலத்தைப் பற்றி
விளக்கிக் கூறுமாறு வேண்டினேன்

வியப்பளிக்கும் விதமாய்
வினோத பதில்களை தந்தார்

இல்லாததை தேடுவதும்
இருப்பதை இகழ்வதும்
இன்றை மறப்பதும்

வருவதை எதிர்பதும்
வராததை சபிப்பதும்
வந்ததை பழிப்பதும்

உயர்வு தாழ்வு சொல்வதும்
உதவாது செல்வதும்
உழன்றதிலேயே உழல்வதும்

இவையன்றி வேறென்ன செய்தாலும்
இனிமையாய் செலவழிந்த காலமே

விரக்தியாய் கேட்டபடி
வீணான வாழ்வை
எண்ணி வருந்தினேன்

இது முதல் தடவையல்ல
இதுவே உன் வாடிக்கை
இருளும் நேரம் தீக்குச்சியை
தேடாதே என்றார்
இருளில் தானே வெளிச்சம்
தேவையென்றேன்

கருணையே வடிவானவராய்
கண்களால் அரவணைத்தார்

புதிய பூமி ஒன்றும்
பல கோடி ஒளியாண்டுகளும்
கடனாய் தந்து மறைந்தார்

நேரம் குறைவென்று
முணு முணுத்தபடி மீண்டும்
விரயமாக்க ஆரம்பித்தேன்….

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -