சகடக் கவிதைகள் – 35

அறுவடைக்காலம்

- Advertisement -

அறுவடைக்காலம்

ஒதுங்க இடமின்றி நனையும்
ஒரு மழை நாளில் மட்டுமே
குடையின் அருமை தெரிகிறது

வானம் கொட்டும் நேரம்
வந்து குடை தர
ஒருவரும் இல்லை

தனித்த வெளியில்
தன் மேல் விழுவதை
ஏற்கவும் முடியாமல்
எதிர்க்கவும் முடியாமல்
ஒரு நீண்ட நடைபயணம்

சேர்த்து வைத்ததெல்லாம்
சேர்ந்து வருவதில்லை
உண்ண முடியா பசியும்
அருந்த முடியா தாகமும் தவிர
மிஞ்சியது ஏதுமில்லை

எங்கோ தூரத்தில் புள்ளியாய்
எவனோ ஒருவன்
என்னை நோக்கி வருகிறான்

யாராய் இருக்குமென்று
யோசித்தவண்ணம் நெருங்கினேன்

புன்னகையோடு தன் குடையை
புதிராய் பார்த்த என்னிடம் நீட்டினான்

எறும்பாய் வாழ்ந்த போது
எதேச்சையாய் என் பாதம் பற்றி
நதியில் வீழ்ந்தவன்
நதிக்கரையில் சேர்ந்ததாய் சொல்லி
நன்றி கூறி மறைந்து போனான்

எனக்கே தெரியாமல்
எவருக்கோ உதவியது
என் கையில் குடையாய்
எப்படி மாறியதோ அறியேன்!

குத்திக் கிழித்த
கோர மழையிலிருந்து
காத்து இளைப்பாற்றிய
கருப்புக் குடைக்கு
கண்ணீரோடு நன்றி சொன்னேன்

அதே மழை தற்போது
அழகாய் தோன்றியது
அலுப்பே தெரியாமல் போக
அரை நூற்றாண்டு நடந்திருப்பேன்

போதும் என்று தோன்றிய போது
அழுகுரல் கேட்டு
அருகினில் பார்த்தேன்

கன்றுக்குட்டியாய் நான் வாழ்ந்த போது
கிணற்றில் வீழ்ந்த நினைவு வந்தது
கரம் கொடுத்துக் காத்தவந்தான்
கதறுகிறான் என்று கண்டுகொண்டேன்

ஆனந்தமாய் குடையை நீட்டினேன்
அவன் வாங்கிய நொடி – என்
அடைமழை ஒய்ந்தது

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -