கையருகில் வானம்

கவிதை

- Advertisement -

கையருகில் வானம்

அம்மா சோறூட்டும்போது
நிலாவிற்காக முரண்டு பிடிக்கிறாள்
அப்பாவின் செல்ல இளவரசி!

அரூபமான நட்சத்திரங்களையும் தருகிறேனென
அவளைத் தோள்களில் சுமக்கிறார் அப்பா.
எட்டாததற்காக எட்டிக் குதித்து இறைஞ்சதால்
கையருகில் அவ்விசும்பே மனமிறங்கியதும்
இவ்வளவு நட்சத்திரங்களாவென- எள்ளி நகைத்தபடி
கூடையைத் தூக்கி செல்கிறாள் அம்மா !

இதுவரை நிலவைப் பார்க்கவைத்தே உண்டதற்கு
இன்றாவது ஊட்டியே தீர்வேனென மன்றாடுகிறாள்.
முயலை மூன்று கால்களோடு ஓடவிட்டவளே…
‘நிலவை எறும்பு விழுங்கிவிடும்
வாயைத் துடைக்க மறந்துவிடாதே’ என மிழற்றுகிறார் அப்பா!

மறுபக்கம் பரணுக்கும் நாற்காலிக்குமிடையே
சுமையோடு எவ்வி நிற்கிறாள் அம்மா!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -