கிழவனும் கடலும்

நூலாசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே

- Advertisement -

ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே

தமிழில்: எம்.எஸ்

பக்கம் 104, விலை ரூ.125

காலச்சுவடு பதிப்பகம்

எர்னெஸ்ட் ஹெமிங்வே இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுபவர். ஏழு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். மாட்டுச் சண்டை, வேட்டையாடுதல், ஆழ்கடல் மீன்பிடிப்பு, போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அதில் கிடைத்த சிலிர்ப்பூட்டும் சாகச நிகழ்வுகளின் பின்னணியில் தனது நாவல், சிறுகதைகளின் களத்தை அமைத்து எழுதினார். 1961ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். எழுதுவது தொடர்பாக அவர் கூறிச் சென்ற வார்த்தைகள் இன்றளவும் ‘ஹெமிங்வே விதிகள்’ என அறியப்படுகின்றன. அவை எழுதத் தொடங்கும் பலருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன.

எஸ்.ராவின் பரிந்துரைகளில் அடிக்கடி இடம்பெறும் ஒரு புத்தகம் தான் கிழவனும் கடலும். கிழவனும் கடலும் நாவல் 1952ம் வருடம் வெளியிடப்பட்டது.  1953ம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றது. ஹெமிங்வேவிற்கு மாபெரும் புகழ் தேடித் தந்த நாவல் இது. 1954ல் ஹெமிங்வேவிற்கு நோபல்பரிசு கிடைத்ததில் இந்நூலின் பங்கு அதிகம். திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. நூல் வெளிவந்து அரை நூற்றாண்டிற்கும் மேலாகிவிட்ட போதும் இந்தப் புத்தகம் உலகம் முழுக்க இன்றும் அதிகம் பேரால் வாசிக்கப்படுகிறது. இன்று வாசிக்கையிலும் நம்மால் கதையோடு ஒன்றிப் போக முடிவதும் அதற்கொரு காரணமாக இருக்கலாம்.

கிழவன் சாந்தியாகோ எண்பத்தி நான்கு நாட்கள் கடலுக்குச் சென்று தொடர்ச்சியாக வெறுங்கையுடன் திரும்புகிறான். ஆகையால் அவனுக்கு உற்ற துணையாயிருந்த சிறுவனும் அவனது பெற்றோரால் வேறு படகிற்கு அனுப்பப்படுகிறான். எப்போதும் போல், அன்றுதான் தனது அதிர்ஷ்ட தினம் எனச் சிறுவனிடம் சொல்லிவிட்டு கடலுக்குச் செல்கிறான் கிழவன். பல மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு தூண்டிலில் பெரிய மார்லின் மீன் சிக்குகிறது. உண்மையில் சிக்கியது மீனா? கிழவனா? என்ற இடத்திலிருந்து கதை வேறு தளத்திற்குத் தாவுகிறது. பரபரப்பாகச் செல்லும் கதை, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று படிப்பவரின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது.

துடுப்பின் அலகுகள் நீரில் அமிழ, படகைத் துறைமுகத்திற்கு வெளியே கிழவன் செலுத்தும்போது நமது பயணமும் தொடங்குகிறது. கிழவனுக்கும் மீனுக்கும் இடையேயான போராட்டம்தான் நாவலின் களம். ஒரு சமயம் அவன் அந்த மீனோடு ஒரு சகோதரனைப் போல வாஞ்சை கொள்கிறான். மற்றொரு சமயம் போரில் எதிர்நிக்கும் பகைவனைப் போல அதனிடம் தன் வலிமையைக் காட்டி எக்களிக்கிறான். எத்தனையோ சவால்களுக்கு மத்தியிலும் அவன் கடலையும் அங்குக் காணக் கிடைக்கும் அழகான காட்சிகளையும் தவற விடவில்லை. தன் படகில் வந்து உட்காரும் சிறிய பறவையுடன் அந்தச் சோதனையான சூழலிலும் அவன் உரையாடல் நடத்தும் இடம் கவித்துவமானது.

ஒரே மூச்சில் முழு நாவலையும் வாசித்து முடிக்கையில் காட்சிகள் நம் உணர்வுடன் கலந்து விடுகின்றன. கடலின் உப்புக் காற்றும் கிழவன் தின்னும் பச்சை மீனின் மணமும் நம் நாசியை நிறைக்கின்றன. மீன் பிடிப்பது குறித்து மிக நுட்பான பல தகவல்கள் நாவல் முழுக்க விரவிக் கிடக்கின்றன. ஹெமிங்வேயின் நுண்ணிய விவரணைகளால் நடப்பவை கண் முன்னே படமாக விரிகின்றன.

புத்தகம் பற்றி யுவன் சந்திரசேகர் குறிப்பிடுவது போல் உணர்ச்சிப் பெருக்கற்ற சொற்களில் உணர்ச்சிமயமான சந்தர்ப்பங்களை எழுதி இருக்கிறார் ஹெமிங்வே. அவரது எளிய நடையும் சிக்கனமான சொற்பிரயோகமும் நம்மை இறுதிவரையில் கட்டிப் போடுகின்றன. எம்.எஸ்ஸின் கச்சிதமான மொழிபெயர்ப்பு நம்மை இலகுவாக கதைக்குள் கொண்டு செலுத்துகிறது.

இந்தப் பதிப்பில் கதையைப் படிக்கும் முன் முன்னுரையைத் தவிர்த்துவிடுதல் நலம். கதை முழுவதும் முன்னுரையில் சொல்லப்படிருக்கிறது. அது கதையை வாசிக்கும் போது சுவாரஸ்யத்திற்குப் பெரும் தடையாக இருக்கக் கூடும்.

இந்நாவலுக்கான சித்திரங்கள் வரையும் பணியை Jonathan Cape பதிப்பகத்தார் Reymond Sheppard மற்றும்  C.F.Tunnicliffe ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளனர். யாருடையது நன்றாக வந்திருக்கிறதோ அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் இருவரின் கோட்டோவியங்களும் மிகச் சிறப்பாக இருந்ததினால் அவை அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டனர். இது ஒரு சுவையான கொசுறுச் செய்தி. எனது நான்கு வயது மகள் அந்தச் சிந்திரங்களைப் பார்த்துவிட்டு அவளே ஆர்வத்துடன் இந்தக் கதையை என்னிடம் கேட்டறிந்தாள்.

நாம் ஒவ்வொருவரும் அந்தக் கிழவனைப் போல வாழ்க்கைக் கடலில் தனித்து விடப்பட்டிருப்போம். மிகவும் சிக்கலான ஒரு சூழ்நிலையில் உற்ற துணைக்காக ஏங்கியிருப்போம். நம் திறமையை உலகுக்கு நிரூபிக்க மார்லின் போன்ற பெரிய மீனைக் கட்டி இழுத்து வரும் முயற்சியில் சுறாக்களுடன் மோதியிருப்போம். அப்போது நாம் காட்டிய அசாதாரண துணிச்சல் நாமே எதிர்பார்த்திராதது. அந்த நிமிடங்களை மறுபடியும் ஒருமுறை நம்மை வாழச் செய்கிறது இந்தக் ‘கிழவனும் கடலும்’.

இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சுட்டவும்.?

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

2 COMMENTS

  1. அருமையான புத்தக முன்னோட்டம். வாழ்த்துக்கள் சகோதரி! உங்கள் எழுத்துக்களை மேன்மேலும் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    • ஊக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -