காலம் கடந்து ஒலிக்கும் மௌன ராகம்

என்றும் இனியவை

- Advertisement -

நான் பொதுவாக திரைப்படங்களை ஒருமுறைக்கு மேல் பார்ப்பதில்லை. அதை ஒரு நேர விரயமான செயலாகக் கருதுவதுண்டு. ஆனால் எத்தனை முறை பார்த்தும் சலிக்காத சில படங்களும் உண்டு. அவற்றுள் ஒன்றுதான் மௌன ராகம்.

ரேவதியின் துறுதுறு நடிப்பா? இளையராஜாவின் தனித்துவமான பின்னணி இசையா? மணிரத்னத்தின் ஸ்பெஷல் ட்ரீட்மென்டா? எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி எல்லாம் சேர்ந்த கலவையாக இன்றும் எனது ஃபேவரைட் லிஸ்டில் கட்டாயம் மௌன ராகம் இடம்பிடிக்கிறது.

தான் சந்தித்த சில பெண்களின் அனுபவங்கள் கொண்டு ‘திவ்யா’ என்ற தலைப்பில் மணிரத்னம் முதலில் ஒரு சிறுகதையாகத் தான் எழுதியுள்ளார். கொச்சையான தமிழில் எழுதப்பட்ட அந்தக் கதையை பிறகு ஒருநாள் வாசித்த சுஹாசினி, விழுந்து விழுந்து சிரித்தாராம். படத்தில் இடம்பெறும் முதலிரவு காட்சியை ஒட்டி எழுதப்பட்டது அந்தச் சிறுகதை. முதலிரவு அறைக்குப் போகும் முன் தன் அம்மாவிடம், “ரெண்டு நாள் முன்னாடி இப்படி அவர்கிட்ட அனுப்பிச்சிருப்பியா?” என்ற திவ்யாவின் கேள்வி தான் கதையின் கரு. பின்னர் அதனை விரித்து சினிமாவிற்கான கதையாக எழுதியிருக்கிறார் மணிரத்னம்.

படத்திற்கு மிகப்பெரும் பலமே அதன் காஸ்டிங் தான். ரேவதி, மோகன், கார்த்திக் தவிர வேறு நடிகர்களை அந்தக் கதாபாத்திரங்களில் நம்மால் கற்பனை செய்யவும் முடிவதில்லை. திவ்யா பாத்திரத்திற்கு முதலில் நதியா பரிசீலிக்கப்பட்டார் என்ற ஒரு பேச்சு உண்டு. ஆனால் ரேவதியை விடவும் யாரும் அந்த பாத்திரத்திற்கு நியாயம் செய்திருப்பார்களா என்பது சந்தேகமே.

இப்போதெல்லாம் கதாநாயகியை பப்ளியாக காட்டுகிறேன் பேர்வழி என்று லூசுப் பெண்ணாக சித்தரித்து விடுகின்றனர் (ஒருவேளை ஆண்களுக்குப் பெண்களை எப்போதும் அப்படிப் பார்க்கத்தான் விருப்பமோ? சில பெண்களும் அதைப் பார்த்துவிட்டு அந்த நாயகியரின் லூசுத்தனங்களை இமிடேட் செய்வது அதிலும் கொடுமை). ஆனால் புத்திசாலித்தனமும் குறும்பும் மிளிர திவ்யா பாத்திரத்தை வெகு அழகாக வடிவமைத்திருப்பார் மணிரத்தினம். அந்தக் கதாப்பாத்திரத்தைக் கச்சிதமாக பாலன்ஸ் செய்யும் வகையில் மென்மையான முதிர்ந்த கணவனாக சந்திரகுமார். இவர்களுக்கிடையே படபடவென்று சரவெடி போல, சிறிது நேரமே தோன்றினாலும் மனத்தில் ‘நச்’சென உட்கார்ந்து கொள்ளும் மனோகர். அதனதன் தனித்துவம் குலைக்காமல் பாத்திரங்களைச் சிறப்பாகப் படைத்திருப்பார் மணிரத்னம்

ஆரம்பத்தில் எல்லாரையும் போல இந்த மனோகர் பாத்திரமே படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்க வைத்தது. சந்திரகுமார் வரும் காட்சிகள் எனக்குச் சற்று ‘போரி’ங்காகக் கூடத் தோன்றியது. ஆனால் போகப் போக (உண்மையைச் சொன்னால் வயது ஏற ஏற) சந்திரகுமாரின் மெச்சூரிட்டி, மனோகரின் தடாலடியை மெல்ல மெல்ல வென்றுவிட்டது என்று தான் கூற வேண்டும். எண்பதுகளின் கனவு நாயகர்களுள் ஒருவரான மைக் மோகனின் முற்றிலும் வேறுபட்ட நடிப்பை இந்தப் படத்தில் காணலாம். இது போன்ற கணவன் தங்களுக்கும் வேண்டும் என்று அந்தக் காலப் பெண்களை அந்தப் பாத்திரத்தின் மேல் காதல் கொள்ள வைத்ததில் கணிசமான பங்கு மோகனின் நடிப்பிற்கு உண்டு.

“மிஸ்டர் சந்திரமௌலி….”யை மறக்க முடியுமா? இளமை பொங்கும் நடிப்பிலும் துள்ளல் நடையிலும் கார்த்திக் கொள்ளை கொள்ளாத மனங்களே இருக்க முடியாது என்று கூறலாம். ஆனால் வணிகரீதியான காரணங்களுக்காக இடைச் செருகலாக வந்ததுதான் அவரின் பாத்திரம் என்றால் நம்புவதற்குச் சற்று சிரமம் தான். இரண்டு பாத்திரங்கள் மட்டுமே இருந்தால் திரைக்கதையில் தொய்வு ஏற்படலாம் என்ற காரணத்திற்காக சேர்க்கப்பட்டது தான் மனோகர் பாத்திரம். ஆனால் அதுவே படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துவிட்டது.

சொல்ல வந்த விஷயத்தை ‘நறுக்’கென்று ஓரிரு வார்த்தைகளில் கூர்மையாக கடத்தி விடும் மணிரத்னத்தின் வசனங்களுக்கு நான் ஒரு மிகப் பெரிய ரசிகை என்றே கூறலாம். உதாரணத்திற்கு, இன்றளவும் நினைவில் நிற்கும் ஒரு வசனம், “நீங்க தொட்டா கம்பளிப்பூச்சி ஊருற மாதிரி இருக்குது”. பிடிக்காத ஒரு கணவனின் தொடுகையை பொட்டில் அடித்தாற்போல் வெளிப்படுத்தும் வார்த்தைகள். “இந்த வீடு வெறும் செங்கல்லாலும் சிமெண்டாலும் கட்டப்பட்ட ஒரு கட்டடம். இதை வீடா மாத்த வேண்டியது நீதான்.” என்று மோகன் கூற, “எனக்கு செங்கலும் சிமெண்டும் போதும்” என்ற பதிலில் ரேவதியின் நிராகரிப்பு அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கும். பக்கம் பக்கமாக உணர்ச்சி பொங்கும் வசனங்கள் பேசப்பட்ட காலகட்டத்தில் மணிரத்னத்தின் ரத்ன சுருக்கமான இத்தகைய வசனங்கள் படத்திற்கு ஒரு ஃபிரெஷ் ஃபீல் கொடுத்தன.

இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு அம்சம்தான் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு. உள்புறக் காட்சிகளை அத்தனை அழகாக படம் பிடித்திருப்பார். பேக் லைட்டிங் போன்ற புதிய உத்திகளை இந்தப் படத்தில் கையாண்டிருப்பார் ஸ்ரீராம். மோகனின் டெல்லி வீட்டில் ஒவ்வொரு காட்சியும் அவர் கேமராவில் கவிதையாய் விரிந்திருக்கும். கார்த்திக் வரும் சண்டைக்காட்சியில் படப்பிடிப்புக் குழுவினர் இழுக்க, ஒரு போர்வையில் படுத்துக் கொண்டே எடுத்திருக்கிறார். இந்தத் தகவல்கள் படத்தைப் பார்க்கையில் காட்சியின் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டின.

இந்த ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசாமல் மௌன ராகம் படம் பற்றிய எனது அனுபவப் பகிறல் முற்றுப் பெறாது. அது தான் இளையராஜாவின் இசை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாய் அற்புதமான இசையைத் தந்திருப்பார் ராஜா. கதாப்பாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் அவை படத்தோடு இயல்பாய் இடம்பெற்றிருக்கும். எனக்கு மிகவும் நெருக்கமானது, “ஓஹோ மேகம் வந்ததோ” பாடல். “singing in the rain” ஆங்கிலப் பாடலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும். இன்றளவும் எந்தவொரு இளம் பெண்ணாலும் தன்னைப் பொருத்திப் பார்க்கக் கூடிய பாடல். பாடல்களைத் தாண்டி என்னை மிகவும் கவர்ந்தது ராஜாவின் பின்னணி இசை தான். கார்த்திக் வரும் இடங்களில் இளமை கொப்பளிக்கும் இசையும் மோகன் ரேவதி வரும் காட்சிகளில் அவர்கள் இருவருக்கும் இடையேயான பதட்டத்தை காட்டும் விதமான இசையுமாய் அருமையாக பின்னணி அமைத்திருப்பார் இளையராஜா. இன்றும் இசைக் கலைஞர்கள் இந்தப் படத்தின் பின்னணியை பயிற்சி செய்கிறார்கள் என்பதே அதன் பெருமைக்குச் சான்று.

இப்போது பார்க்கையில் படத்தில் வரும் காமெடி காட்சிகள் அலுப்பு தருகின்றன. மேலும் அதுவரை யதார்த்தமாக செல்லும் கதையில் கூடவே இருந்த மனைவியை விட்டுவிட்டு க்ளைமாக்ஸில் ரயிலின் பின்னால் உருண்டு பிறண்டு மோகன் ஓடிச் சென்று ரயிலின் சங்கிலியைப் பிடித்து இழுத்து தூக்கி வருவது செயற்கையாகத் தெரிகிறது. இந்தக் குறைகள் எல்லாம் தாண்டியும் ரசிப்பதற்கு படத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.

முப்பத்தி நான்கு வருடங்கள் கடந்தும் இன்னும் மௌன ராகம் திரைப்படம் குறித்து எங்கோ யாரோ உரையாடிக் கொண்டிருப்பதை கவனிக்கையில் தமிழ் திரைப்பட உலகில் அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ரசிகர்களுக்கும் திரைப்படம் குறித்துப் படிப்பவர்களுக்கும் இந்தப் படம் ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவத்தைத் தந்து கொண்டுதான் இருக்கிறது. படத்தை இதுவரை பார்க்காதவர்கள் கட்டாயம் பார்த்து விடுங்கள். பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களை நீங்களும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

4 COMMENTS

  1. அழகான நினைவலைகள். மௌன ராகம் படம் வருவதற்கு 6 ஆண்டுகள் முன்னால் வந்த மகேந்திரனின் “நெஞ்சத்தை கிள்ளாதே” படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் இது. சுகாசினியின் முதல் படமான நெஞ்சத்தை கிள்ளதே இல் நடிகர் மோகன், மௌன ராகத்தில் நடித்த கதாபாத்திரத்துக்கு நேரெதிர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். காலப்போக்கில், தழுவி எடுக்கப்பட்ட மௌனராகமும், சமீபத்தில் வந்த ராஜா ராணியும் புகழ் பெற்ற அளவுக்கு “நெஞ்சத்தை கிள்ளாதேயும் முதலில் எழுதிய எழுத்தாளர் மகேந்திரனும் புகழ் பெறாமல் போய்விட்டனர். ஒரே ஆறுதலாக “பருவமே புதிய பாடல் பாடு” என்ற இசைஞானியின் பாடல் மட்டும் நிலையான புகழ் பெற்றுவிட்டது.

    • நெஞ்சதைக் கிள்ளாதே யின் தழுவலா என்று தெரியவில்லை. அவருக்குத் தெரிந்த சில பெண்மணிகளின் அனுபவக் பகிரலில் இருந்து இந்தக் கதை உருவானதாக மணிரத்னம் ஒரு உரையாடலில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கதைகளின் one line ஒன்றாக இருந்தாலும் இயக்குனர்களின் touch ஐ பொறுத்து அவை வேறுபட்டவை என்றே தோன்றுகிறது.

      • அழகான ஒரு திரைப்பார்வை இந்து. இப்போதுதான் படிக்க நேரம் கிடைத்தது. மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

        ஒரு நேர்காணலில் ” அக்னி நட்சத்திரம் உண்மைக்கதைதானே ” என்று கேட்டதற்கு ,” இல்லையில்லை.. மௌனராகம் தான் உண்மைக்கதை” என்று மணிரத்னம் கூறியிருந்தார். நெஞ்சத்தைக் கிள்ளாதே வேறு கதை. அதை இதோடு தொடர்புபடுத்தவே முடியாது.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -