காடு

கவிதை

- Advertisement -

தலை சிலுப்பி உடல் அசைக்கும் கருங்குருவி
மரக்கிளைகள் நீர் சொட்டின
நதியோட்டம் வீரியம் நிறைந்திருந்தது
காட்டுப் புஷ்பங்கள் சிரிக்கின்றன
பிச்சைப் பாத்திரம் ஏந்திய புத்தன்
குதிரை ஓடிய பாதைகளில் குருதி வாசனை
வறுமை ஆயுதம் தரித்திருக்கிறது
தரித்திரம் மரணத்தை ஏந்தியிருக்கிறது
மடியிலே நெருப்பை வைத்திருக்கிறது உயிர்
உணவு பாத்திரத்தில் மலர்கள் பூத்திருந்தன
நிசப்தம் கிளையோடின
ஈரக் காற்றில் கொக்குகள் நடுங்கின
படகோட்டி துடுப்பை அசைக்கிறான்
கடந்த காலம் பெருஞ்சீற்றமாக கடக்கிறது
நதியின் வேட்கை ததும்புகிறது
இலைகளற்ற மரம்
பசியோடு திரியும் மீன்கொத்தி
வெயில் ரெளத்திரம் கொண்டுள்ளது
வெள்ளைச் சேலை மலையில் தொங்குகிறது
அந்திச் சூரியன் பல் வண்ணங்களை நெய்கிறது
ஓவியமாகிறது நீர் வீழ்ச்சி
காட்டுத் தீ பெருக்கெடுத்துப் பாய்கிறது
காற்று பரபரக்கிறது
காடை முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன
கண்ணீரில் கரையும் உடல்கள் காற்றில் மறைகிறது கற்பூரம் கானல் நீரோ காதல்
இதயம் பூக்கிறது
மேனியெங்கும் வண்ண பூக்கள்
அன்பு சகல பாவங்களை மூடும்
இருளுக்குள் பயணம்
நெஞ்சுக்குள் ஊறும் பயம்
கால்களிலிருந்து வேர்கள் கிளம்புகின்றன
மதுக் கோப்பைகள் நிரம்பி வழிகின்றன
காலம் மண்டையோடுகள் பூண்டு தாண்டவமாடுகிறது
மரண உற்சவம்
செத்துக் கொண்டிருக்கிறது மரம்
பசியோடு குஞ்சுகள்
மெளனமாய் உருகும் மரங்கொத்தி
சாலையில் யாவும் கடந்தசெல்கின்றன
காற்றாய் போயின உறவுகள்_நட்புகள்
நானும் ஒரு நாள்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -