காக்காய் பார்லிமெண்ட்

கதையாசிரியர்: மகாகவி பாரதியார்

- Advertisement -

பொதுவாக பாரதியார் என்றாலே முறுக்கிய மீசை, முண்டாசு, கொப்பளிக்கும் நெருப்புக் கவிதைகள் என்று மட்டுமே உணர்ந்திருந்த எனக்கு இந்த “காக்காய் பார்லிமென்ட்” சிறுகதை அவரின் மீசைக்குப் பின் மறைந்திருக்கும் குறும்புக்காரரைக் காண்பித்தது. அதிகாரவர்க்கத்திற்கு எதிராக தன்னுடைய பகடிகளால் சாட்டையை எடுத்துச் சுழற்றியிருக்கிறார்.

நாராயண பரம ஹம்ஸர் என்பவர் கதை சொல்லியான பாரதியைக் காண வருகிறார். வருகையின் நோக்கம் பாரதிக்கு பறவைகளின் மொழியைக் கற்றுத்தருவது. முதல் பாடமாக காக்கைகளின் மொழியைக் கற்றுத்தருகிறார். 

‘கா’ என்றால் ‘சோறு வேண்டும்’ என்றர்த்தம். ‘கக்கா’ என்றால் ‘என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே’ என்றர்த்தம். ‘காக்கா’ என்றால் ‘எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே’ என்றர்த்தம்.

இப்படியாக காக்கை பாஷையைக் கற்று முடித்த கதைசொல்லி அதைச் சோதிக்க தன் வீட்டு மாடிக்குச் செல்கிறார். அங்கே நாற்பது காக்கைகள் இருக்கின்றன. இந்த இடத்தை பாரதியார் எழுதும் போது “அங்கே நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கிறது” என்று எழுதிவிட்டு அடுத்த வரியில், “உட்கார்ந்திருக்கின்றன” என்று தானே வரவேண்டும் என்று சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும் ஆனால் அதில் பயனில்லை ஏனென்றால் நான் சொன்னது சரிதான் அதை நான் போகர் இலக்கணத்தில் படித்திருக்கிறேன். அதை நீ எப்போது படித்தாய் என்று கேட்பீர்கள் அதை சொல்ல இப்போது எனக்கு நேரமில்லை என்று நழுவி கதையைத் தொடர்கிறார்.

பன்மை வரும்போது “உட்கார்ந்திருக்கின்றன” என்பது தானே சரி? பாரதிக்கு இது தெரியாமல் இருந்திருக்குமா? மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் அடித்துக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் யாரையோ சாடியே இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறார். இப்போது இந்தச் சண்டையில் புதிதாய் நுழைந்திருக்கும் நவீனம் பின்நவீனம் எல்லாவற்றிகும் சேர்த்து அன்றே குத்திய கும்மாங்குத்து தான் அது. ஆனாலும் சண்டை ஓய்ந்தபாடில்லை.

சரி நாம் கதைக்கு வருவோம். அந்த காக்கைகளில் ராஜா மந்திரியெல்லாம் இருக்கிறார்கள். அதில் ஒரு காக்கை, தான் சந்தித்த ஒரு ருஷ்ய கொக்கைப் பற்றியும் அங்கே ஜார் மன்னர்களுக்கு எதிரான புரட்சியைப் பற்றியும் சொல்கிறது. இதைக் கேட்ட ராஜகாகம் இதே போலத்தான் நம்நாட்டிலும் சாமானிய மக்கள் உழைக்க அரசர்கள் சொத்து சேர்க்கிறார்கள். ஆதலால் இனிமேல் ராஜகாகமாகிய நான் எங்கும் சென்று கல்லெறி வாங்க மாட்டேன் நீங்கள் சம்பாதிப்பதில் ஆறில் ஒரு பங்கு எனக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆணையிடுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மந்திரிக்காகம் எல்லாம் சரிதான் நீங்கள் ஒன்றை சிந்திக்காமல் விட்டுவிட்டீர்கள் என்று ஞாயம் கேட்பது போல் தொடங்கி எல்லாக் காக்கைகளிடமிருந்தும் பன்னிரண்டில் ஒரு பாகம் வசூலித்து அதை மந்திரிமார்களான எங்களின் செலவுக்கு வழங்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறது.

நூறு வருடங்களுக்கு முந்தய இந்தக்கதையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நக்கலும் நையாண்டியும் சீண்டலும் நிறைந்த நகைச்சுவைக் கதைபோலத் தெரிந்தாலும், அடித்தட்டு மக்களின் அவலங்களையும் கண்ணீரையும் இயலாமையும் அதிகாரவர்க்கத்தினரின் நரித்தனத்தையும் அப்படியே எடுத்துக்காட்டுகிறது.

என்னதான் நகைச்சுவைக் கதையாக இருந்தாலும் பாட்டன் பாரதி கதையை எழுதிய போது கண்ணீர் மல்கவே எழுதி முடித்திருப்பார். இக்கதை இன்றும் அப்படியே பொருந்திப்போவது தான் வேதனையின் உச்சம்.

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -