கவிதை என் காதல்

கவிதை

- Advertisement -

இப்பொழுதெல்லாம்
சொல்லாடலேதுமின்றி
மௌனத்தையே பாடுபொருளாக்கிக் கொள்கிறேன்.
உயிரெழுத்துக்கள் என் வானில்
உலா வருகின்றன.
பகலில் பார்த்த பட்சிகள்
அவைகளின் கொஞ்சல்களை
படிமங்களாக்கச் சொல்லி கெஞ்சுகின்றன.
உவமைகள் என் உறக்கத்தை
உலையில் போட்டுக் கொதிக்கவிடுகின்றன.
குறியீடுகள் எனது குறட்டையை
மென்று தின்று வேடிக்கை பார்க்கின்றன.
உருவகங்களோ என்னை உருட்டி விளையாடுகின்றன.
காணும் காட்சியையெல்லாம்
கவிதையாக்க நினைக்கும் என்னைப்
பகடி பேசி சிரிக்கின்றன
ஆங்காங்கே சுற்றும்
பூனைகளும் நாய்களும்!

உருவகமும் உவமையும் படுத்தும்பாட்டில்
இருண்மைத் தன்மையோடு உணர்ந்தேன்
மெய் மெலிந்து காதல் பசலையே வந்துவிட்டதை..

இப்படித்தான் இந்நாட்களில்
கவிதை மலைப்பாம்பு
என்னை விழுங்குகிறது.
தலையின் நுனி மட்டும்
உள்ளிருந்த வேளையில்
நான் தப்பிக்க முயலவில்லை.
மாறாக உள்ளே போய்விட விரும்புகிறேன்.
அங்கே ஆயிரமாயிரம் கவிதைத் தொகுப்புகள்
குவிந்து கிடக்கின்றன-முதலில்
என் அபிமானக் கவிஞர்களின்
தொகுப்புகளை ஆசைஆசையாய்த் தேடுகிறேன்!

கவிதைக் காதலர்களை எதிர்பார்த்த
மாபெரும் மலைப்பாம்போ
வாயைப் பிளந்துகொண்டு
பச்சை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -