ஆசை மச்சான்

கவிதைகள்

ஆசை மச்சான்  

- Advertisement -

கண்ணாலம் கட்டி
ஒரு மண்டலமாச்சு,
ஆசை மச்சான்
கடல் கடந்தும் போயாச்சு.!!

வாயும் புளிக்குது,
மாங்காயும் இனிக்குது
வவுத்துலயோ புழுவோ
பூச்சியோ நெருடுது.

மச்சான் நெனப்ப விட
கடுதாசி கொண்டு வாரவரத்தான்
நித்தம் கண்ணுந் தேடுது.

கடுதாசி முழுக்க
மச்சான் முகம் தான்
வளஞ்சும் நெளிஞ்சும் தெரியுது
மச்சான் சுருள் முடி கனக்கா.!!

எம் பார்வப்பட்ட
உயிரெழுத்து அம்புட்டும்
ஏங் கண்ணுப்பொட்டு நீரால
மெய்யெழுத்தா ஆகிப்போச்சே!!

அம்புலி ஆகாயத்துக்கு
வரும்போது
ஒரு எட்டு வந்து
பாத்துக்க மச்சான்.
அது கனக்கா தான்
நானிருக்கேன்னு
சொல்லிவுடனும்.!!

மச்சான் விட்டு போயி
மாசம் எட்டாச்சி
மார்கழி கோலம் போட்ட கை
இப்போ வவுத்தையே
சுத்தி சுத்தி கோலம் போடுது..

வவுரு முழுக்க
மவராசன் ஒதெக்கிறாக
வூட்டுக்கு கதவு எங்கனன்னு
இங்குட்டும் இல்லன்னு
ஒன் தாத்தன் சொல்லி விட்டிச்சோ!

தம்புடி இடமாச்சும்
சொந்தமாக்கனும் மச்சான்!
ஒன்னுக்கு ரெண்டுக்கு போக
தனியா செவுர எழுப்பி
கதவும் வெக்கனும்
அதுக்கு மட்டும் காசு சேத்துட்டு
வந்துடு மச்சான்.

??????????????????????????

வலசை பறவையாக வாழ்க்கை

நாயகியின் மனமோ கடல் கடந்து
இணையணை நினைத்து.
அவள் அறை சாளரம் வழியே,
தென்றல் அத்துமீறுகிறது.

வலசை பறவையாக வாழ்க்கை
எதையோ தேடி தேடி,
அவர்களுக்கு விடியலும்
தனித் தனியாகவே விடிகிறது.

திருக்குறளின் காமத்துப்பால்
நாயகியே இவள் தானோ!!
ஒட்டகபாலில் தயிர் உறையாது
என்றும் கூட புரியாத நங்கையுமோ!!

வருடத்திற்கு ஒருமுறை
அலங்காரமாய் படிநிரப்பும்
நவராத்திரி திருநாளுக்கு
தயாராகிறாள் சாளரத்து நாயகி.!!

நாயகன் வரும் நாளே
நாயகிக்கு திருநாளாம்.
இம்முறை பத்து நாட்களோ
அதுவும் பத்தாத நாட்களோ.!!!

??????????????????????????

தந்தையதிகாரம்

சற்று முன் பிறந்த
தன் குழந்தையை
வீடியோ காலில் பார்க்க
உதவியது செல்பேசி.
வீரிட்டு அழும் பிஞ்சு குரல் கேட்டு
தந்தை கண் கலங்க!!.
காதலுடன் பார்க்கும் மனைவிக்கு
தர வேண்டிய முத்தத்தை
கைப்பேசி வாங்கிக் கொள்கிறது.
பச்ச உடம்புக்காரி பால் வாசம் ஏனோ!
அலைபேசியில் கிடைக்கவில்லை.
குழந்தையின் ஸ்பரிசத்தை உணர
கைப்பேசி காட்டுவதை தடவுகிறான்.
ஆர்வத்தில் மீண்டும் முத்தமிட
டச் ஸ்கிரீன் கைப்பேசி
உதடுபட்ட வெட்கத்தில்
தொடர்பை துண்டித்தது.
இவன் கண்ணீர் துளிகளோ
ஊடுருவி போக முடியாமல்
கைப்பேசி மேலேயே தவிக்கிறது.
குழந்தை வாசம் வேண்டி..!!

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
குடந்தை அனிதா
குடந்தை அனிதாhttps://minkirukkal.com/author/kundanthaianitha/
கும்பகோணம் பிறந்த ஊர். நகர மேல்நிலைப்பள்ளியில் (கணித மேதை ராமானுஜர் படித்த பள்ளி) பள்ளி படிப்பும். அரசு மகளிர் கல்லூரியில் வணிகமும் பயின்றேன். கல்லூரி நாட்களில் கவிதைகள் நண்பர்களுக்கும் போட்டிகளுக்கும் எழுதிய அனுபவம் உண்டு. திருமணம் ஆனதும் ஓமன் நாட்டில் மஸ்கட் என்னும் ஊரில் கடந்த 30வருடமாக வாழ்ந்து வருகிறேன். ஐந்து வருடமாக மீம் கிரியேட்டர் ஆக முகநூல் பதிவு செய்கிறேன். கடந்த ஆறு மாதமாக தான் முகநூலில் 200 கவிதை வரை பதிவிட்டு வருகிறேன். இனி தான் புத்தக வடிவம் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். தாமதமான வருகை தான் தரமான கவிதைகள் தர காத்திருக்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -