அழுக்குக்கண்ணாடி – 9

- Advertisement -

மனதைச் சுத்தம் செய்யும் வழிமுறைகள்தான் நாளடைவில் மதம் என்று பெயர் பெற்றது. மனிதன் தனிமையைக் கண்டு எப்போதும் பயந்திருக்கிறான். குழுவாக செயல்படும்போது அவன் பாதுகாப்பை உணர்கிறான். அந்தக் குழு மனநிலையில் நல்லெண்ணங்களை வார்த்தெடுக்க இந்த வழிமுறைகள் பெரிதும் உதவின. உதாரணமாக தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவன் எப்படி இருந்தாலும், கூட்டமாக ஓர் இடத்தில் சேரும்போது நல்ல எண்ணங்களைக் குறிக்கும் வகையான செயல்முறைகள் ஏற்படுத்தப்பட்டன. அவ்வாறான இடங்களே கோயில்களாகவும், மடாலயங்களாகவும் உருவாகின. எவ்வளவு அழுக்கான மனமாக இருந்தாலும், கோவிலுக்குள் நுழையும்போது சிறிது நேரம் அந்தத் தவறான எண்ணங்களை தள்ளிப்போடுகிறது. ஏனென்றால் கோவில் என்றால் புனிதம் என்ற எண்ணத்தை மீண்டும் மீண்டும் புகுத்தி பழக்கப்படுத்தியதால் அது தன்னால் அவ்வாறு செய்கிறது. இதை தினமும் இருந்த இடத்திலிருந்தே செய்ய முடியாதா? கோவில் வேண்டுமா? என்று கேட்டால் நிச்சயம் முடியும். அவ்வாறு செய்வதற்குப் பெயர்தான் தியானம். ஆனாலும் தியானம் செய்யும் அளவிற்குப் பக்குவப்படாத மனங்கள் தான் அதிகபட்சமாக இருப்பதால் கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை உருவாக்கினர். அனைவரும் வீட்டில் இருந்த படியே கல்வி கற்க முடியுமென்றாலும், பள்ளிக்குச் செல்வதைப் போன்றதுதான் அது. கண்களைமூடி அமரச் சொன்னால் புதிதாக முயற்சிப்பவர்களுக்கு ஒரு நிமிடம் தாக்குப்பிடிப்பதே மிகக் கடினமாக இருக்கும். அதனால் மனதைப் பயிற்றுவிக்க கோவில்கள் பிரத்யேகமாக ஒரே போன்று உருவாக்கப்பட்டன. எப்படிப் பள்ளியில் படிக்கும்போது ஒரே அடையாளத்தைக் குறிக்கும் வகையில சீருடைகள் உருவாக்கப்பட்டனவோ அதே உளவியல்தான். சீருடை அணியும்போது நம் மனம் தானாக பள்ளியின் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறதல்லவா, அது ஏன்..?

மனதிடம் எதையும் நேரடியாகச் சொல்வதை விட ஒரு இடத்தையோ, பொருளையோ, நிறத்தையோ பதிய வைத்து அதில் விதிமுறைகளை இணைக்கும் போது எளிதாக உள்வாங்கிக்கொண்டு நடைமுறைப்படுத்துகிறது. இதில் வாசனைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். ஊதுபத்தி, கற்பூரம், பூக்கள் போன்றவற்றை கோவிலில் தொடர்ந்து பயன்படுத்தும்போது, மனது தானாக அந்த வாசனையை தெய்வீகத்தோடு இணைத்துக்கொள்கிறது. அந்த வாசனையை எப்போது எங்கே நுகர நேர்ந்தாலும் உடனே மனதின் பரபரப்புகள் சற்று நேரம் அடங்குகிறது. கோவில் என்ற இடம் இப்படித்தான் இருக்கும், அந்த இடத்தில் இருக்கும் போது நல்லதை மட்டுமே நினைக்க வேண்டுமென்ற விதிமுறைகளை வைத்ததன் மூலம் அங்கு செல்லும்போது தன்னையும் அறியாமல் ஓர் அமைதி ஏற்படுவதை மனம் உணர்கிறது. இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் அந்த வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட மனம் மட்டுமே அதில் அமைதியடையும். விஷயம் இங்கே கோவிலில் இல்லை, அந்த மனதின் நம்பிக்கையிலும், பழக்கத்திலுமே இருக்கிறது. ஏனென்றால் கோவில்கள் உருவானதன் நோக்கமே அதை பழக்கப்படுத்தி நம் கட்டுப்பாட்டில் வைப்பதற்குத்தானே. 

மதங்களை, கடவுளை ஏற்காதவர்கள்கூட இதை எளிமையாகப் பயிற்சி செய்து பார்க்கலாம். உங்கள் வீட்டின் ஒரு சிறிய பகுதியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அங்கே அமரும்போதெல்லாம் உங்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படுவதாக கற்பனை செய்து பாருங்கள். ஆரம்பத்தில் மிக அபத்தமாகத் தெரிந்தாலும், சில நாட்களில் உங்களையும் அறியாமல் அந்த இடத்தில் அமரும்போதெல்லாம் பேரமைதியை உணர்வீர்கள். ஏனென்றால் நீங்கள் தொடர்ந்து அந்த இடத்தை மனதின் உணர்வுகளோடு (மகிழ்ச்சி, அமைதி) இணைத்து பழக்கப்படுத்திவிட்டதால் அங்கே அமர்ந்த உடனே நீங்கள் பழக்கப்படுத்தப்பட்ட உணர்வு மேலோங்குகிறது. ஒவ்வொருவரும் இவ்வாறு தனித் தனியாக தனக்குத் தோன்றியதை பின்பற்றி மனதை வசப்படுத்துவது என்பது பெரும் குழப்பத்தை உண்டாக்குமன்பதால், பொதுவான வழிமுறைகளோடு அதை பெருவாரியான மக்கள்  ஏற்றுக்கொள்ளக்கூடிய மதங்களாக உருவாக்கப்பட்டன.

கண்களை மூடித் தியானம் செய்ய வேண்டுமென்று நேரடியாகச் சொன்னால் யாருமே பின்பற்ற முடியாத மிகக் கடுமையான வழிமுறையாக இருக்குமென்பதால் தான் கோவில்கள், வழிபாடு, பூஜை இவையெல்லாம் உருவாக்கப்பட்டன. தியானம் என்பது வெறுமனே கண்களை மூடி எண்ணங்களை எந்த மதிப்பீடுகளும் செய்யாமல் பார்ப்பதன் மூலம், தான் வேறு தன் எண்ணங்கள் வேறு என்பதை உணர்வது. இந்த ஆதாரமான உணர்வின் மூலம் பிரச்சனைகள் என்று தான் எண்ணியதெல்லாம் வெறும் எண்ணங்கள்தானே தவிர 99 சதவீதம் உண்மையில்லை என்பதை அறியும் போது மனிதனுக்கு மிகப்பெரிய விடுதலை உணர்வு ஏற்படும். தியானத்தில் எண்ணங்கள் அழிகிறது. ஆனால் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைகளோ எண்ணங்களைத் தூண்டுவதாக இருக்கிறது. தர்க்க ரீதியாகப் பார்த்தால் தியான முறை மட்டுமே எண்ணங்களை அழிக்கும் ஒரே வழிமுறையாக உலகம் முழுக்க இருந்திருக்க வேண்டும். வேறு எந்த உருவ வழிபாடும் வந்திருக்கக்கூடாது. ஆனால் மனதை தந்திரமாக மட்டுமே வீழ்த்த முடியுமென்பதை முன்னோர்கள் அறிந்திருந்தார்கள்.

தியானம் போன்ற ஆயுதத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள, எப்போதும் புதையலைச் சுற்றும் நாகம் போல் நம்மைச் சுற்றி சுற்றி விஷத்தைக் கக்கியபடியே இருக்கிறது மனம். அந்த விஷத்தை முறித்தாலொழிய புதையலை அடைவது சாத்தியமில்லாதது. புதையல் என்று இங்கே நான் குறிப்பிடுவது மனம் திரை போட்டு மறைத்திருக்கும் உண்மையான “நாம்”. அப்படியென்றால் அந்த மனமென்ற நாகம் கக்கும் விஷம்தான் எது..? அதற்குப் பெயர்தான் “EGO”….

-தொடரும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2 COMMENTS

  1. //தியானம் போன்ற ஆயுதத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள, எப்போதும் புதையலைச் சுற்றும் நாகம் போல் நம்மைச் சுற்றி சுற்றி விஷத்தைக் கக்கியபடியே இருக்கிறது மனம். // உண்மை தான் மனத்தை அடக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல… ஒரு நிமிடம் தியானத்தில் உட்கார்வதென்பதே பெரிய சாதனையாகத் தான் இருக்கிறது… 🙂
    

    • மனது தந்திரமாய் ஏதேதோ காரணம் சொல்லி சில நொடிகளில் கலைத்துவிடும். உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு நன்றி.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -