அழுக்குக்கண்ணாடி – 8

- Advertisement -

னதில் எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே செய்வதாக நம்மில் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது சரியானதுதானா? ஏனென்றால் மனம் இன்று ஒரு விஷயத்தை நல்லதென்று நம்பும், நாளை அதையே கெட்டது என்றும் மாற்றிச் சொல்லும். மிகவும் விரும்பிய ஒருவரைக்கூட ஒரு கட்டத்தில் ஜென்ம விரோதியாகப் பார்க்கும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப பச்சோந்தியைப் போல் மாறும் தன்மை கொண்ட மனதை ஆதாரமாக வைத்து ஒரு முடிவெடுத்தால் அது எப்படி சரியானதாக இருக்க முடியும். நம்மை தொடர்ச்சியாக ஒரு செயலை செய்ய வைத்து, அதைப் பழக்கமாக்கி ஒவ்வொரு தூண்டுதலின் போதும் நம்மை அந்த வழித்தடத்தில் தர தர வென்று இழுத்துச் சென்று நமக்குப் பிடிக்காத விஷயத்தைக்கூட செய்ய வைத்துவிடும் மனதிடம் முழு அதிகாரமும் இருப்பது எவ்வளவு அபாயகரமான விஷயம். இந்தக் காட்டாற்றில் முழுவதும் அடித்துச் செல்லப்படாமல் தப்பிப்பதற்குத் தான் பண்டைய காலங்களில் நிறைய வழிமுறைகளும், சடங்குகளும் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஏற்றவாறு நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும் வேறுபட்டனவே தவிர அவை அனைத்திற்கும் மனதை அடக்குவதே நோக்கமாக இருந்தன. நாளடைவில் மக்கள் இடம்பெயரத்தொடங்கியதால் ஒருவருக்கொருவர் பின்பற்றும் முறைகளை பிரித்துச் சொல்வதற்குப் பெயர்கள் தேவைப்பட்டன. அவைகளைக் குறிக்க உருவான பொதுப்பெயர்தான் மதம்.

ஆச்சர்யமாக இருக்கிறதா. மதத்திற்கும் மனதிற்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்கிறீர்களா? எல்லா மதங்களின் நோக்கமும் இந்தக் கட்டுப்பாடற்ற மனதின் பிடியில் இருந்து மனிதனை மீட்பது ஒன்றேதான். ஆனால் ஆரம்பித்ததன் நோக்கம் மெல்ல மெல்ல காணாமல் போய் கடைசியில் மனதிற்குச் சாதகமாய் மதங்கள் மாறிப்போனதால்தான் உலகம் முழுக்க இன்று மதங்களின் பெயரால் அனைத்துப் பூசல்களுக்கும் நடக்கின்றன. மனதைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டவை இன்று மனதின் விகாரங்களுக்குத் தீனி போடுவதுதான் வேதனையான நகைமுரண். நிறைய பேர் மதங்களால் சண்டை உருவாவதால் மதங்களே வேண்டாமென்று சொல்வது நெருப்பில் கையைச் சுட்டுக்கொண்டு இனி நெருப்பே பயன்படுத்தக்கூடாது என்று சொல்வது போன்றது.

மனதை நேரடியாக கட்டுப்படுத்துவது மிகக் கடினமென்பதால்தான் சடங்குகள் உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு ஒரு குழந்தை எடுத்தவுடன் பெரிய பெரிய புத்தகங்களைப் படிக்க முடியாது என்பதால்தான் முதலில் அதற்கு அடிப்படையான எழுத்துக்களை பயிற்றுவித்து, பிறகு சிறிய சிறிய சொற்றொடர்களை கற்க வைத்து அதன் பிறகே அதன் கைகளில் புத்தகத்தைத் தருகிறார்கள். ஆசிரியர்கள் இல்லாமல் ஒரு குழந்தை தானாய் படிப்பது என்பது சாத்தியமில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அப்படியே படிக்கத் தெரிந்தாலும்கூட அதன் உட்பொருள்களை உணர்ந்து அதை நமக்குச் சொல்லித் தர அப்போதும் ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். இவ்வாறு ஒரு பள்ளி, கல்லூரி படிப்புக்கே ஆசிரியர் தேவைப்படுகிறாரென்றால், உள்ளேயே அமர்ந்துகொண்டு நம்மை ஆட்டிப்படைத்து சர்வ நாசத்தையும் விளைவித்துக்கொண்டிருக்கும் மனதை அடக்க எப்படிப்பட்ட பயிற்சி வேண்டுமென்று யோசித்துப்பாருங்கள்.

மனதைப் பற்றியும் அதை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதைப் பற்றியும் முறையாகச் சொல்லித்தர, மனதை ஏற்கனவே கட்டுக்குள் நிறுத்தியவரால்தானே முடியும். அப்படித்தான் எல்லா மதங்களிலும் மனதை வென்ற குருமார்கள் உருவானார்கள். உடனே உங்கள் நினைவு போலி சாமியார்களின மீது சென்றால் அதுவும் மனது தன்னைத் தற்காத்துக்கொள்ளச் செய்யும் யுக்தி தான் என்பதை அறியுங்கள். போலி மருத்துவர் இருக்கிறாரென்றால், உண்மையான மருத்துவர்கள் என்ற மூலப் பிரிவு ஒன்று இருப்பதால்தானே அதற்கு நேர் எதிர் பதம் போலிகளைக் குறிக்க உருவானது? அதை விடுத்த அனைத்து மருத்துவர்களையும் போலி என்று ஒதுக்கிவிட முடியுமா? அதுபோலத்தான் இதுவும். ஆதி காலத்தில் மனம் என்பதைப் பற்றி நேரடியாகப் பேசாமல், மனதிற்கு நிறைய சடங்குகளைக் கொடுத்து அதை எப்போதும் தவறான பாதையில் பழக்கப்படாமல் பாதுகாத்தார்கள். ஏனென்றால் எந்த வேலையும் இல்லாமல் இருக்கும் மனதுதான் மிக மிக ஆபத்தானது. அதனால்தான் மனதைப் பயிற்றுவிக்க மிகக் கடுமையான விரத முறைகளில் ஆரம்பித்து, மூன்று வேளை பூஜை, ஐந்து வேளை தொழுகை, வாரம் ஒரு முறை பிரார்த்தனைக் கூட்டம் என்று எல்லா மதங்களிலும் பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்கிறார்கள்.

நாளடைவில் சடங்குகளின் நோக்கம் புரியாமல் போனதன் விளைவாக நிறைய சிக்கல்கள் வர ஆரம்பித்தன. மனம் மெல்ல மதத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆரம்பித்தது. நிறைய பிரிவுகளை உருவாக்கி மனிதர்களைப் பிரித்தது. ஆனால் காலம்தோறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனதை வென்ற ஞானிகள் புதுப் புது வழிகளை தொடர்ந்து விட்டுச் சென்றபடிதான் இருக்கிறார்கள். ஒன்றா இரண்டா இந்த அழுக்குக்கண்ணாடியைத் தேய்த்துச் சுத்தம் செய்ய எத்தனை எத்தனை வழிமுறைகள் இந்த பூமியில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை அடுத்த வாரம் பார்க்கலாம்.

-தொடரும்

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -