அழுக்குக்கண்ணாடி – 3

- Advertisement -

ஆயிரம் எதிரிகளை வீழ்த்தியவனைவிட மிகப் பெரிய வீரன், மனதில் கட்டுக்கடங்காமல் கணம் தோறும் கொப்பளிக்கும் எண்ணங்களின் எண்ணிக்கையை குறைத்தவன் தான். ஏன்..? மனம் என்பது ஆயிரம் எதிரிகளைவிட மோசமானதா என்ன?

சிங்கத்தோடு ஒப்பிட்டால் இது எளிமையாகப் புரியும். காட்டில் சுதந்திரமாக கட்டுக்கடங்காமல் திரியும் சிங்கத்தோடு நாம் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும்? கற்கால மனிதன் அப்படித்தானே நிம்மதியில்லாமல் பயந்து பயந்து வாழ்ந்திருப்பான. எப்போது வேண்டுமானாலும் அந்தச் சிங்கம் நம்மை வீழ்த்திக் கொன்றுவிடலாம் என்ற அச்ச உணர்வு இறுதிவரை அவனிடமிருந்து போகாது.

ஆனால் சர்க்கஸ் சிங்கமோ பயிற்றுவிக்கப்பட்ட சிங்கம். மாஸ்டர் சாட்டை சுழற்றும்போது சிங்கம் சொன்னதைக் கேட்கிறது. இங்கு சிங்கம் நமக்கு ஆபத்தானதா இல்லையா என்று கேட்டால், அதை நாம் வைத்திருக்கும் இடத்தைப் பொருத்து என்பதே அறிவுப்பூர்வமான பதிலாக இருக்க முடியும். அதே போல்தான், நாம் நம்முடைய மனதை எப்படி வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்தேதான் வாழ்க்கை அமைகிறது.

நம்முடன் எப்போதும் ஒரு எதிரியை வைத்துக்கொண்டே வாழ்ந்தால் எவ்வளவு பதற்றமாக இருக்கும். மனிதன் எப்போதும் ஏதாவதொரு கவலை பதற்றத்தில் இருப்பதன் காரணம் புரிகிறதா? கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்கத்தோடுதான் தினம் தினம் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த சிங்கம் நம் கண்ணுக்குத் தெரியாததால் வெளிப்புறமாக இருக்கும் பொருட்களாலும், மனிதர்களாலும், சூழ்நிலைகளாலும்தான் நிம்மதி இல்லாமல் இருப்பதாக எண்ணிக்கொள்கிறோம். உண்மையில் கண்ணுக்குத் தெரியும் சிங்கத்திடமிருந்தாவது நாம் தப்பித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது, ஆனால் கண்ணுக்குத் தெரியாத மனதை எப்படி கையாள்வது.?

முதலில் மனம் என்று ஒன்று இருப்பதையே மறந்துதானே நாம் எப்போதும் அதை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். அதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது அத்தனை விதமான பிரச்சனைகளும். முதலில் மனம் என்று ஒன்று இருப்பதை நாம் அடையாளம் காண வேண்டும், பிறகு தானே அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.மனதை அடையாளம் காண சிறிது நொடிகளாவது தினமும் கண்களை மூடிப் பழக வேண்டும். எல்லா மதத்திலும் கடவுளை வணங்கும்போது, கண்களை ஏன் மூடுகிறார்கள் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? அதன் அடிப்படை ஆதாரமான காரணம் இதுதான். வெளிப்புறமாகவே நம்மை தொடர்ந்து செலுத்தி, பொருட்களின் பின்னாலும் மனிதர்களின் பின்னாலும் நம்மை அலையவிட்டு, வெகு சாமர்த்தியமாக தன்னை மறைத்துக்கொள்கிறது மனம்.

நாம் ஒரு சில நிமிடங்கள் ஓய்வாக அமரலாம் என்று நினைத்தாலும்கூட மனம் நம்மை இருக்கவிடாது. உடனே செல்போனை எடுத்து யாருடனாவது பேசலாம், ஏதாவது

விளையாடலாம், இல்லை ஏதாவது படம் பார்க்கலாம் என்று சொல்லி, நம்மை விரட்டி விரட்டி வேலை வாங்கி, எளிதாக நம்மை திசைதிருப்பி தன்னை தற்காத்துக்கொள்கிறது மனம். நம் பார்வை தன் மீது பட்டால் ஆபத்து என்று அதற்கு மிக நன்றாகத் தெரியும்.

சர்க்கஸ் கூண்டில் சிங்கத்தின் கட்டளைக்கேற்ப மனிதன் சாகஸங்கள் புரிந்தால் பார்க்க

எவ்வளவு அபத்தமாக இருக்கும். இந்த அபத்த நிலையில்தான் நாம் எப்போதுமே இருக்கிறோம். எல்லோருமே இப்படி இருப்பதால் இதுதான் யதார்த்தம் போலும் என்றும் நினைத்துக்கொள்கிறோம். சரி இப்போது சொல்லுங்கள் கண்ணுக்குத் தெரியாத அந்த சிங்கத்திற்கு அடிமையாக இருக்கப் போகிறோமா இல்லை சாட்டையை கையில்

எடுத்து சுழற்றப்போகிறோமா? மாஸ்டராக மாறுவோம்…. காத்திருங்கள்..

-தொடரும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -