அழகிய கனவே

மூன்று கவிதைகள்...

- Advertisement -

அழகிய கனவே

துண்டு மேகம்
இலக்கற்று அலைகிறது
தலைசாய்க்க இடமில்லை
கையாலாகாதத் தனத்துடன் கண்ணீர் வடிக்கிறோம்
இதிகாசகாலத்திலும்… இப்போதும்…
இனியும் எத்தனை நாள் தொடரும் உங்கள் பயம்?
ஒரு சின்ன பட்டாம்பூச்சி
ஆயிரம் மலர்க் கனவுகள்
தீயிலிட்டு வேடிக்கை பார்க்கிறது அதிகாரப்பிசாசு
போட்டிகளை வேடிக்கை பார்க்கிறேன்
பலர் அழுகின்றனர் சிலர் பரிசு பெறுகின்றனர்
வீட்டுக்குத் திரும்புகிறேன்
சப்தமிடும் சருகுகள்
சலனமற்ற மரம்
தவளைக்கூச்சல்
யாத்ரீகனை பின் தொடராதீர்கள்
அவன் போக்கிலே விட்டுவிடுங்கள்
அவனாவது சந்தோஷமாய் இருக்கட்டும்
வெண்பனிக்குள் உன்னைப் பார்த்தேன்
வண்ண மேகமாய் உலாவினாய்
அருகில் வருவதற்குள் கண்விட்டு மறைந்தாய்
அழகான கனவாய் வந்தாய்
விடிகாலையில் எங்கு போனாய்?
இரவுவந்தால் ஓடி வருகிறாய்
கருகிவிட்டாய்
கண்ணீர் சிந்தமாட்டோம்
காரணிகளை வேரறுப்போம்வேரறுப்போம்
நல்லதோர் வீணை
புழுதியில் எறிந்து விட்டார்கள்
நலங்கெடுத்தவர்களை இன்னும் சகிப்பீர்களோ?

??????????????????????????

சருகும் துளிரை உற்பவிக்கும்

விடுதலை வேட்கை
போராடத் தூண்டுகிறது
நுகத்தடிகளை முறிக்க வலிவு தருகிறது
நந்தனை எரித்த நெருப்பு
இனி யாரையும் எரிக்காமல் அணைப்போம்
எதிர்ப்பது போராட்டம்
சகிப்பது அடிமைத்தனம்
அடிபணிய நாங்கள் மிலேச்சர்களல்ல
தடை
உடை
கிடைக்கும் விடை
பாழ் நிலத்தின் வழியே பயணிக்கிறேன்
ஆதுரத்துடன் என்னை உற்று நோக்குகிறது
ஏதும் உதவமுடியாத அதன் இயலாமை வெக்கையாய் கமழ்கிறது
தலையில் பெருஞ்சுமை
தூரம் இழுத்துச்செல்கிறது
சாவகாசமாய் வெற்றிலை மென்றபடி அமரமுடியவில்லை
சில மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள்
சில மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டாதவர்கள்
வேண்டுதலும் வேண்டாமையும் அவரவருக்குரியது
மனிதனை நேசிப்பவன்
இயற்கையை நேசிப்பான்
வாழ்க்கையை நேசிப்பான்.

??????????????????????????

உயிர்த்திரியில் ஒளிரும் பாடல்

நிலாவை மொய்க்கின்றன
பட்டாம்பூச்சிகள்
புதிய வெண்மலர்
ஆளற்ற வீடு
ஆறாத ரணம்
வலி மொய்க்கும் புரையோடிய புண்
வெள்ளைச்சட்டைகாரன் மனசு தூய்மையானதல்ல
கறுப்புச்சட்டைக்காரன் உள்ளம் அழுக்கானதல்ல
நிறங்களை வைத்து மனசை எடை போடாதே
பிக்குகளை பார்க்கையில் சிரிப்பு வருகிறது
அவர்களின் தோற்றத்திற்காக அல்ல
எதையோ தேடித்திரியும் அவரின் பாவனைகளுக்காக
மிடிமையும் அச்சமும் இல்லை
உண்மைகள் சொல்வோம்
தீமைகளை முழக்கமிட்டு துரத்துவோம்
பெண் பூவல்ல
பெருமழை
பெருக்கெடுத்தால் ஊழி
அதிகாரங்களுக்கு எதிராய் கிளர்வோம்
அடிபணிய மிருகமல்ல
ஆர்த்தெழும் கடல் நாம்
போராடுகிற மனிதன் தான் வாழ்வை நேசிக்கிறான்
வலிகளையும் வேதனைகளையும் எதிர் கொள்கிறான்
கனவுகளுக்குள் ஒளிந்து கொள்வதில்லை
ஆன்மா கண்கட்டு
அடுத்த ஜன்மம் மனப்பூட்டு
ஏய்ப்பவரின் புதைசேறு

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -