அம்மா ஒரு கொலை செய்தாள்

கதையாசிரியர் : அம்பை

- Advertisement -

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர் அம்பை. தனது அதிரடியான எழுத்தால் பெண்ணிய எழுத்தில் பெரிய பாய்ச்சல் செய்தவர். பெண்களின் நிலை அதிகம் முன்னேறிவிட்ட இந்தக் காலகட்டத்திலும் பலர் பேசத் தயங்கும் விஷயங்களை வெகு காலம் முன்பே தன் படைப்பில் அவர் பேசியிருக்கிறார் என்பது பிரம்மிக்க வைக்கிறது.

“அம்மா கொலை செய்தாள்” என்ற இந்தச் சிறுகதையில், ஆண்டாண்டு காலமாய்ப் பெண்கள் ‘இது இயற்கையே’ என வெளித்தோற்றத்திற்குச் சுலபமாய் ஏற்றுக் கொள்ளும் ஒன்றை, ஒரு சிறுமியின் மன ஆழத்திற்கு நம்மை இட்டுச் சென்று அங்கே மெல்லிய உணர்வுகள் கூறு போடப்படும் பயங்கரக் காட்சியை நம் கண்ணில் நிறுத்துகிறார்.

கதை ஒரு பதின் பருவச் சிறுமியின் மன ஓட்டத்தின் வாயிலாகவே நகர்த்தப்படுகிறது. பெரும்பான்மையானவர்களைப் போலவே அவளுக்கும் அம்மா என்பவள் ஒரு ஆதர்ஷ நாயகி. பரிபூர்ணத்துவம் கொண்ட காளியின் மறுஉரு. பேரழகி. அவளின் நினைவுத் துகள்களில் இருந்து பல சம்பவங்களைக் கோர்த்து அந்த அம்மாவின் பிம்பம் சிறுகச் சிறுகக் கட்டமைக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் வழி அவள் அம்மாவின் மேல் வைத்திருக்கும் அபிமானத்தை அல்லது பித்தை வெளிக்கொணர்ந்து அவள் உணர்வுகளுக்கு உயிரளிக்கிறார் அம்பை.

தான் பருவம் எய்தி விட்டோம் எனத் தெரிய வரும் நேரத்தில் அந்தச் சிறுமியின் மனத்தில் எழும் பயங்களும் கொந்தளிப்புகளும் தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளன.

//அந்தச் சமயத்தில் உலக சரித்திரத்தில் எனக்கு ஒருத்திக்கு மட்டுமே அந்தத் துக்கம் சம்பவித்தது போல் படுகிறது//

என்று அவள் குமுறும் இடம் அவளுக்கு மட்டும் வாய்த்தது அல்ல.

அடுக்கடுக்கான சம்பவங்களை முன்னிறுத்தி கதாப்பாத்திரங்களின் தன்மையை நம் மனத்தில் முன்னிறுத்துகிறார் அம்பை. வார்த்தைகள் ஒவ்வொன்றும் கூரிய வாளாய்க் கோடு கிழித்துச் செல்கின்றன. எந்தவொரு அலங்காரமும் இன்றி அவரின் எழுத்து நிதர்சனங்களை உடைத்துச் சொல்கிறது.

அம்மாவின் சின்ன அணைப்பில் ஒரு சொல்லில் தனது குழப்பங்களுக்கு விடை கண்டுவிடலாம் என ஆவலாய் எதிர்பார்த்திருக்கும் அந்த மொட்டு அம்மாவிடமிருந்து வரும் எதிர்பாராத எதிர்வினையால் நொடியில் கருகிப் போகிறது. அம்மாவின் பிம்பங்கள் உடைந்து சிதறும் அந்தக் கணத்தை,

//அந்த நெருப்பில் அவள் மேல் போர்த்தியிருந்த தேவ ஸ்வரூபம் அவிழ்ந்து விழ நிர்வாணமான வெறும் மனித அம்மாவாய் அவள் படுகிறாள்//

என்று பொட்டிலடித்தாற் போல் கூறி உண்மையைத் துகிலுரிக்கிறார் அம்பை.

கதை 1971ம் ஆண்டு எழுதப் பட்டிருந்தாலும் இன்றும் படிப்பவரின் உணர்வலைகளை எழும்பச் செய்யும் திறம் பெற்றிருக்கிறது. அம்பை கையாண்டிருக்கும் தனித்துவமான நடையே கதையை இந்தக் கால வாசிப்பிற்கும் உகந்ததாய் அமைத்திருக்கிறது. சில கதைகள் படித்த முடித்த அடுத்த நொடி நம் நினைவுகளில் இருந்து நீங்கி விடுவன. சில கதைகள், பல நாட்களுக்கு நம் தூக்கத்தைக் காவு வாங்குபவை. அப்படியான அசுரத்தனம் கொண்ட ஒரு இலக்கியப் படைப்பே அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்”. தமிழ்ச் சிறுகதை உலகிலும் வாசகர் நெஞ்சங்களிலும் இந்தக் கதைக்கும் என்றுமே ஒரு தனி இடம் உண்டு என்பது திண்ணம்.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -