அடிமையின் காதல்

நூலாசிரியர்:ரா.கி.ரங்கராஜன்

- Advertisement -

நீண்ட ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு புத்தகத்தைப் பற்றிய விமர்சனம். அதுவும் ஒரு வரலாற்றுப் புதினம். ரா.கி.ரங்கராஜன் அவர்களின் ” அடிமையின் காதல்”. அடிமையாகிய நமது நாயகிக்கும், நாயகனுக்கும் இடையேயான காதலே “அடிமையின் காதல்”.

வரலாற்றுப் புதினம் என்றவுடன் கல்கியின் காதலியாக அவருடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. நமது பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவனை நினைவு படுத்தும் ஒரு கதாப்பாத்திரம் தான், இந்தக் கதையின் நாயகன் “காஞ்சிபுரத்தான் “. ஆம், பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. காஞ்சிபுரத்திலிருந்து வந்ததால் காஞ்சிபுரத்தான் ஆகின்றார். வந்தயத்தேவன் போல் அடிக்கடி ஏதாவது செய்து ஆபத்தில் மாட்டிக் கொள்கிறார். ஆனால் அதை மிக லாவகமாக சமாளிக்கவும் செய்கிறார். கதை முழுவதும் காஞ்சிபுரத்தானைச் சுற்றியே நகர்கிறது. காஞ்சிபுரத்தான் வீட்டிலிருந்து கிளம்பியது முதல் அவன் செல்லும் இடங்கள் அவன் சந்திக்கும் மனிதர்கள் அவர்களால் ஏற்படும் விளைவுகளும் பங்கங்களுமாக நகர்கிறது கதை.

கதை நடக்கும் காலம் 17-ஆம் நூற்றாண்டு என்பதால் அதனை ஒட்டிய வரலாற்று நிகழ்வுகளும் ஆங்காங்கே காண முடிகிறது. ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள் மற்றும் நாயக்கர்கள் இவர்களைப் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளை அறிந்து கொள்ள முடிகிறது. அதில் ஒன்று “மூக்கறு போர்”. மதுரை மற்றும் மைசூரைச் சார்த்த நாயக்கர்களிடையே நடந்த போர். இதை அந்தப் போரில் கலந்து கொண்ட ஒரு முதியவரின் மூலம் எடுத்துரைக்கிறார். மூக்கறு போரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள், இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://ta.wikipedia.org/wiki/மூக்கறு_போர்

நான் சுற்றித் திரிந்த சென்னை எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது வியப்பாக உள்ளது. அடுத்த முறை அதே விதிகளுக்கு நான் செல்லும் போது இந்த கதையில் நடக்கும் சம்பவங்கள் கண்டிப்பாக நினைவாடும். அது மட்டுமல்ல வந்தாரை வாழ வைக்கும் நமது சிங்காரச் சென்னையை அடிமைகளை விற்கும் சந்தையாக நினைத்துப் பார்ப்பது கடினமே. வெள்ளையர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு இடம் கொடுத்து, ஆதரவளித்து, பின் அவர்களைப் பார்த்து பயந்து நடுங்கிய நம்மவர்களும் தான். அடிமைகளை வெள்ளையர்களுக்குப் பரிசளிப்பதும் அவர்கள் நம் அடிமைகளை நாடு கடத்துவதும் சாதரணமாக நடந்தேறியிருக்கிறது. வெள்ளையர்களுக்கு சாமரம் வீசுவதிலிருந்து சப்பரம் தூக்குவது வரை இந்த அடிமைகள் தான். அடிமைகள் எஜமானர்களுக்கு அடிபணிய மறுத்தாலோ அல்லது எதிர்த்தாலோ அவர்களுக்குக் கிடைப்பது கசையடி தண்டனை. ஆண் என்றோ பெண் என்றோ பாகுபாடுகள் கிடையாது. நமது காஞ்சிபுரத்தான் அடிமையாகிய  கதாநாயகியைப் பார்ப்பதே அப்படியான ஒரு கசையடி விடுதியில் தான்.

சரி நாம் கதைக்கு வருவோம். கதையில் நமது நாயகி முகலாயப் பேரரசரின் பாதுகையை வணங்க மறுத்து விடுவார். அதற்காக நடைபெறும் போரில் செஞ்சிக் கோட்டை வரலாற்றையும் இணைத்துக் கூறியிருக்கிறார் ஆசிரியர். செஞ்சியின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும். http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=91

சரி, இந்த வரலாற்றுக்கும் அடிமையின் காதலுக்கும் என்ன தொடர்பு? அது தான் கதையில் வரும் திருப்பம். கதை எப்பொழுதெல்லாம் சுபமாக உள்ளதென்று நாம் நினைக்கிறோமோ அப்பொழுதெல்லாம் கதையில் எதிர்பாராத ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கலாம். அதுபோல் ஒன்று தான் நமது அடிமைக் கதாநாயகி யார் என்பது. நாயகியை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றும் நாயகன், நாயகி பெரிய இடத்துப் பெண் என்று தெரிந்ததும் சத்தமில்லாமல் விலகுகிறார். இருந்தும் நாயகிக்கு ஒரு ஆபத்து என்றதும் ஓடோடி வந்து நிழல்போல் காக்கிறார். இறுதியில் அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்றி விட்டு, நாயகன் காஞ்சிபுரத்திற்கே திரும்புகிறார். நாயகி? கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

புவனேஸ்வரி
புவனேஸ்வரிhttps://ennathuligal826330077.wordpress.com/
இவரின் சொந்த ஊர் திருவில்லிபுத்தூர் பக்கம். சென்னையில் வாசம். புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் உடையவர். சமீபமாக வலைப்பதிவுகளும், புத்தகங்களுக்கு விமர்சனமும் எழுதிவருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -