நினைவுச் சாரல்

கவிதை

- Advertisement -

நகரத்துக் காற்று அடுக்குமாடியேறி
சமையலறை புகுந்து
இரவு அடுப்பை அணைக்க முயல்கிறது.

அம்மா வீட்டின் நினைவில்
நனைந்து கொண்டே
சமைத்துக் கொண்டிருந்தவள்
அம்மாவோடு கைப்பேசியில் பேசியபோது
‘என்னதான் இருந்தாலும்
நீங்கள் செய்வதுபோலில்லை’
என்றதைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு
காய்ச்சல் வந்துவிடும்
தலை துடைத்துக்கொள்’
என்கிறாள் அம்மா அக்கறையோடு!

பரந்து விரிந்த கிராமத்துத் திண்ணையில்
அம்மா மீனைக் கிள்ளி அலசுகிறாள்.
அழையா விருந்தாளியான
எறும்புக் கூட்டம் ஒரு பக்கம் ..
வேட்டைக்குப் போன
நாய் மோப்பம் பிடித்துக்கொண்டு
மறுபக்கம் …

அனல் பறக்கும் விறகடுப்பில்
மீன் குழம்பைத் தாளித்துக் கொண்டிருக்கும் அப்பா
‘கதைவிட்டதெல்லாம் போதும்
உன் அம்மாவிற்கு சளி பிடித்து விடப்போகுது..
பேசாமப் போய்த் தூங்கு’ என்கிறார்!

கைப்பேசியைத் துண்டிப்பதற்குள்
பெரும்புயலென போர்வை உலகிற்குள்
குட்டிப் பிசாசுகள்
அந்த ராட்சசியைப் பிடித்து இழுக்க ..
அப்பா சொல்வதை
அப்படியே கேட்கும்
பிள்ளை அவள்
கண்களை இறுக்கி மூடிக்கொண்டு
சமத்தாய்த் தூங்கிவிடுகிறாள்!

அப்பா
முற்றத்து சாய்வு நாற்காலியில் படுத்து
வானில் பூத்திருக்கும்
விண்மீனைப் பார்த்து
தொலைவானிற்கு அப்பால்
மகள் தூங்கியாச்சோ என்னவோவென…
அவளின் நினைவுச்சாரல்
அப்பாவை நனைக்கத் தொடங்குகிறது!

ஒருநாளில்
இப்படியும் அப்படியும்
ஓர் உலகவானில்
இங்கும் அங்குமாய்
ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன
ஓரிரு நட்சத்திரங்கள்!!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -