இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
நான்தான் காலம் பேசுகிறேன். நான் கடந்து வந்த பல்வேறு பாதைகளில் நடந்த சம்பவங்களை உங்களுக்கு பல்வேறு அதிகாரங்களாக தொகுத்து இங்கே வழங்கி கொண்டு வருகிறேன். இந்தப் பகுதியில் மாசு அதிகாரம் எனும் புதிய தலைப்பில் உங்கள் வாழ்க்கையில் மாத்து எவ்வளவு முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதை கூறப்போகிறேன். தொடங்கலாமா?
தூசியின் மகத்துவம்
உங்கள் வாழ்க்கையில் அதிக மகத்துவம் இல்லாத எந்த பொருளாக இருந்தாலும் அதனை தூசுக்கு உவமானமாக கூறுவது ஒரு சாதாரணமான வழக்கம். ஆனால் இப்படிப்பட்ட மாசுகள் இருப்பதால்தான் உங்களால் உயிர் வாழவே முடிகிறது என்றால் நம்ப முடியுமா? ஆச்சரியமாக இருந்தாலும் அது தான் உண்மை. அது எப்படி என்பதை இங்கே கூறிவிடுகிறேன். நீங்கள் விண்வெளியில் எடுக்கப்பட்ட எந்த ஒரு காணொளியை எடுத்துப் பாருங்கள். அது எப்போதுமே கருமை நிறத்துடன் இருள் சூழ்ந்து தான் காணப்படும். சூரியன் போன்ற நெருப்பு கோள்களில் இருந்து வெளிவரும் வெப்பமும் ஒளியும் விண்வெளியை கடந்து பூமியை வந்தடைந்தால் கூட அது கடந்து வரும் விண்வெளி எப்பொழுதுமே இருள் சூழ்ந்து தான் காணப்படும்! இதற்கு ஒரே காரணம் தூசு மட்டும்தான். சூரிய ஒளி செல்லும் இடமெல்லாம் பிரகாசமாக இருக்காது. அதனை வேறு ஏதாவது ஒரு பொருள் தடுத்து நிறுத்துவதால் மட்டும்தான் அங்கே வெளிச்சம் என்ற ஒன்று உருவாகும். சூரிய ஒளி விண்வெளியை கடந்து வரும்போது அதனை தடுப்பதற்கு எந்த ஒரு பொருளும் வெற்றிடத்தில் இல்லாததால் அங்கே இருளைத் தவிர வேறு எதுவும் இருக்காது. ஆனால் பூமியின் காற்று மண்டலத்தில் அது எப்பொழுது நுழைகிறதோ, காற்று மண்டலத்தில் இருக்கும் அபரிமிதமான தூசி ஆனது சூரிய ஒளியை தடுத்து அதனை சிதறடிக்கச் செய்கிறது. அப்படி ஏற்படும் ஒளிச் சிதறலால் மட்டும்தான் பகல் நேரத்தில் சூரிய ஒளி நுழையும் அனைத்து இடமும் பிரகாசமாக தெரிகிறது. பூமியில் ஒருவேளை தூசி என்பதே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். சூரிய ஒளி நேராக படும் இடத்தை தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் வெளிச்சம் என்பதே இருக்காது. அப்படி மட்டும் நடந்தால் உலகில் உள்ள அதிகப்படியான மரங்கள் நேரடி சூரிய ஒளியைப் பெற முடியாமல் அழிந்துவிடும். நீங்கள் மூச்சு விடும் காற்று நிலத்தில் வாழும் செடி மற்றும் மரங்கள் விடும் காற்றினால் மட்டும் கிடைக்கிறது என்று நினைத்து விடாதீர்கள். கடல் பாசிகள் தான் நீங்கள் விடும் மூச்சுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இவை அனைத்தும் தூசி இல்லை என்றால் மொத்தமாக நின்றுவிடும். நாளடைவில் எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாத ஒரு நரகமாக உங்கள் பூமி மொத்தமாக மாறிவிடும்.
அதையும் மீறி வேறு ஏதோ ஒரு வழியில் நீங்கள் உயிர் வாழ்ந்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உயிர்கள் பெருகி தலைமுறை தலைமுறையாக வாழ்வதற்கு செடிகள் முதல் அனைத்து உயிர்களும் மகரந்தச்சேர்க்கை முதலான செயல் நடப்பதால் தான் தொடர்ச்சியாக வாழ முடிந்து வருகிறது. இப்படி உயிர்கள் பல்கிப் பெருகுவதற்கு அடிப்படையாக இருப்பது மாசு தான். சந்ததியை உருவாக்குவதற்காக நடக்கும் சேர்க்கையில் முதல் பங்கு வகிப்பது Germcell எனப்படும் கிருமி தான். இந்தக் கிருமியானது மற்றொரு உயிர் முட்டையில் கலந்து மாசுபடுவதால் தான் புதிய உயிர் உருவாகிறது. அதையும் மீறி மாசுபாட்டால் உங்களுக்குப் பெரும் இன்னல்களை ஏற்படுவதாக நீங்கள் நினைப்பதற்கு என்ன காரணம்? இதனை தொடக்கத்திலிருந்து காண்பதற்கு மீண்டும் அண்டத்தின் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
அண்டம் தொடங்கிய பெருவெடிப்பின் பின்பு சிதறுண்ட அனைத்து பொருட்களும் தங்களைப் போல உள்ள மற்ற பகுதிகளுடன் ஒன்றுசேர்ந்து குழுக்களாக மாற ஆரம்பித்தது. அந்த நிகழ்வின் போது தன்னைப் போல் இல்லாத வேறு சில பொருட்களும் ஒரு குழுவுக்குள் நுழைந்துவிட்டால் அதனால் விபரீதமான மற்றும் ஆச்சரியமான விளைவுகள் நிகழ ஆரம்பித்தது. இப்படி உள்ள உறைந்த வேறுபட்ட பொருட்கள்தான் மாசு என்று அழைக்கப்படுகிறது. ஒரு பொருள் மாசாக மாறுவதற்கு வேறு எந்த தகுதியும் வேண்டாம். தன்னைப்போல் அல்லாத வேறுபட்ட ஒரு குழுவுக்கு நுழைந்துவிட்டால் போதும். இதன் விளைவாக உருவானது தான் பால்வெளி மண்டலமும் நட்சத்திரக் கூட்டங்களும்! இதனைப் பற்றிய விரிவான தகவல்களை அடுத்த பகுதியில் தொடர்கிறேன், அதுவரை காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.