இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
நான்தான் காலம் பேசுகிறேன். அசை அதிகாரத்தில் அசைவுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை பற்றி சென்ற பகுதியில் கூறினேன். ஆனால் அது மட்டும் இல்லாமல் உங்களால் அறியப்பட்ட அனைத்து வரலாறும் அசைவுகளால் தான் ஏற்படுகிறது என்று நம்ப முடிகிறதா? அதைப் பற்றித்தான் இங்கே விளக்கப் போகிறேன்.
அசையும் வரலாறு
அண்டத்தில் நடந்த பெரு வெடிப்புக்கு பின்பு நடந்த அசைவுகளின் பின் விளைவாகத்தான் பல்வேறு உலகங்கள் உருவானது என்றும் அங்கே உயிர்கள் உண்டானது என்றும் உங்களுக்கு நன்றாக தெரியும். சூரிய குடும்பத்தில் பூமி என்ற கிரகம் உண்டான உடன் அங்கே முதலில் தோன்றிய உயிரினம் மனிதன் கிடையாது. சூரியனில் இருந்து நேரடியாக சக்தி பெறக்கூடிய கடல் பாசிகள் மற்றும் மரம் செடி கொடிகள் தோன்றின. இவற்றுக்கு நேரடியாக சூரியனிலிருந்து உணவு கிடைப்பதனால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் கூட சூரியனை நோக்கி (அதாவது மேல் நோக்கி) நகர முயன்று கொண்டே வந்தது. அதன் காரணமாகத்தான் செடி மேல் நோக்கி வளர்கிறது. பின்பு செடிகள் மற்றும் மற்ற உயிரினங்களை உணவாக உண்டு வாழக்கூடிய நிலையான உருவம் இல்லாத சொற்பமான செல்களை உடைய அமீபா(Amoeba) போன்ற சிற்றுயிர்கள் தோன்றியது. இந்த உயிர்கள் தோன்றிய உடன் வளர்ச்சி அடைவதற்காக உணவைத் தேடிக் கொண்டு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதற்கு தனது உடலை அசைக்க வேண்டியதாக இருந்தது. அவ்வாறு செய்யும் பொழுது ஏற்படும் நகர்வு தான் உங்கள் மொத்த உலகத்தின் வரலாறு.
உணவிற்காக அசைய ஆரம்பித்த சிற்றுயிர்கள் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்து பெரிய உருவிலான மிருகங்கள் ஆகவும் மாறியது. இந்த மிருகங்கள் அனைத்தும் தங்களை தற்காத்துக்கொள்ள நிகழ்த்தும் நகர்வுக்குப் பெயர்தான் “புலம்பெயர்தல்”. ஆம். புலம்பெயர்தல் எனும் வார்த்தை ஆதிகாலம் தொட்டு அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையான வரலாறாக விளங்குகிறது. தொடக்கத்தில் உயிர்கள் அனைத்தும் தனித்தனியாக தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்த பொழுது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு வடிகாலாக ஒரு குழுவாக வாழ்ந்து மொத்தமாக புலம்பெயரும் வழக்கத்தை கண்டுபிடித்தன.
பறவைகள், மீன்கள், மிருகங்கள் என அனேக உயிரினங்களும் புலம் பெயர்வதால் பல்வேறு நன்மைகளை அடைகின்றன. தற்காப்பு என்பது முதன்மையாக இருந்தாலும் புலம் பெயர்வதால் உயிர்களின் பரிணாம வளர்ச்சி வேகமாக நடக்கிறது. புலம் பெயர்வதால் உயிர்களுக்கு மட்டுமல்லாது உயிரற்ற பொருள்களுக்கும் கூட வரலாறு உருவாகும். அது எப்படி? உலகில் பல லட்சம் வருடங்களுக்கு முன்னால் இமய மலை என்ற ஒரு மலை கிடையவே கிடையாது. இந்திய துணைக்கண்டம் ஆனது ஆசியாவுடன் ஒட்டி இல்லாமல் ஒரு தனி துண்டாக தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க கண்டங்களின் ஒன்றிணைந்து இருந்தது. பின்பு சிறிது சிறிதாக அசைத்து ஆசிய கண்டத்தை நோக்கி நகர்ந்து அதனுடனே ஒட்டிக்கொண்டது. இவ்வாறு ஒட்டிக்கொள்ளும் பொழுது ஏற்பட்ட அழுத்தத்தால் இடைப்பட்ட பகுதியில் இருந்த கடல் பகுதி மேலெழும்பி உலகிலேயே உயரமான மலையாக மாறியது. இதுதான் இமயமலையின் வரலாறு.
அதுபோலவே அமீபா போன்ற சிற்றுயிர்கள் வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்து விதவிதமான உணவுகளை சுவைக்க ஆரம்பித்தது. அவை சாப்பிடும் உணவு மற்றும் அதன் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் பொருத்து அதன் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் அது வேறு ஒரு புதிய உயிராக மாற ஆரம்பித்தது. இப்படித்தான் மனிதன் உட்பட உலகிலுள்ள அனைத்து உயிர்களும் உண்டானது. கடலுக்குள்ளேயே வாழ முடிந்த சிற்றுயிர் மீனாக மாறியது. அதுபோலவே தரையில் வாழ முடிந்த உயிர்கள் இரண்டு மற்றும் நான்கு கால் பிராணிகள் ஆக மாறியது. இது தான் பூமியில் உள்ள உயிர்களின் தொடக்க வரலாறு. இதற்கு முழு காரணமும் சிற்றுயிர்களின் அசைவு தான்.
தங்களது இனத்தை பெருக்குவதற்காகக் கூட சில பிராணிகள் புலம் பெயர்ந்து செல்கின்றன. பனிப் பிரதேசங்களில் வாழும் பென்குயின் வருடா வருடம் தங்களுடைய இனத்தை அபிவிருத்தி செய்வதற்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் கடந்து மிதமான வெப்பம் உடைய இடங்களுக்கு புலம்பெயரும். ஒரு பெரும் கூட்டமாக இணைந்து புலம்பெயர்ந்த பின்பு தங்களுக்கு என்று குடும்பத்தை உருவாக்கி முட்டையிட்டு, அடைகாத்து குட்டிகளை உருவாக்கும். ஒரு பென்குயின் வாழ்வதற்கு பனிப் பிரதேசங்கள் எதுவாக இருந்தாலும் முட்டையிடுவதற்கு வெப்பப் பிரதேசங்களில் தான் ஒத்து வரும். இது போன்று புலம்பெயராமல் வாழ்ந்தால் பென்குயின் எனும் இனமே இப்பொழுது அழிந்து போயிருக்கும். நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் செல்லும் பெண்குயினுக்கு இத்தனைக்கும் பறக்கவும், வேகமாக நடக்கவும் கூட முடியாது.
அசைவின் நவீன வரலாறு
அசைவுகளால் ஏற்பட்ட ஆதி வரலாறு உங்களுக்கு எளிமையாக புரிந்திருக்கலாம். ஆனால் மனிதர்களுடன் அதற்கு ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி என்பது மிகவும் அபரிமிதமானது. ஒரு சிறிய எடுத்துக்காட்டை கூறினால் நீங்கள் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். சுமார் 500 வருடங்களுக்கு முன்னால் பிரிட்டன் பேரரசில் கொடூரமான குற்றம் புரிந்தவர்களை தனது நாட்டுக்குள் வைத்துக் கொள்ளாமல் நாடு கடத்துவது என்பது வழக்கமாக இருந்தது. தங்கள் நாட்டின் அருகில் இருந்தால் மீண்டும் உள்ளே வந்து கலகம் புரிவார்கள் என்ற அச்சத்தால் அரசாங்கம் அவர்களை மிகவும் தொலைவான இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் மிகத்தொலைவில் உள்ள தீவில் அவர்களை கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். அப்படி தனித்து விடப்பட்ட மக்கள் ஒன்றுகூடி அந்த தீவையே ஒரு தனி நாடாக மாற்றி விட்ட அதிசயமும் புலம் பெயர்ந்ததால் தான் ஏற்பட்டது. அப்படி உருவான நாட்டுக்குப் பெயர்தான் ஆஸ்திரேலியா!. மனிதன் புலம்பெயர்வதனால் ஏற்பட்ட பல்வேறு சுவையான விஷயங்களை இன்னும் விளக்கமாக அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.