“என்னடா ரமேஷ் எங்கம்மா சுட்ட இட்லி மாதிரி பூரிச்சி இருப்பனு பார்த்தா, உங்கம்மா சுடும் சப்பாத்தி மாதிரி விறைப்பா இருக்க?” குணா மகனை கிண்டல் செய்தவாறே குளியலறையிலிருந்து வந்தார்.
“அடப் போங்கப்பா, இன்னிக்கு எனக்கு தலை தீபாவளி. ஆனால் அம்மா என்னை மாமியார் வீட்டுக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க” நமுத்துப்போன பட்டாசாய் ரமேஷ் பதிலளித்தான்.
“ஓய்வறியா குழப்பவாதியாச்சே உங்கம்மா. என்ன காரணம் சொன்னாள்?” குணா தன் வழுக்கை தலையிலிருந்த 4 முடிகளுக்கு வலியில்லாமல் தலையை துவட்டியபடி கேட்டார்.
“தலை தீபாவளிக்கு மச்சான் கையால தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கனும், மாமா கையால புதுத்துணி வாங்கி போட்டுக்கனும் அம்மா கட்டாயப்படுத்தினதாலே என் மனைவி கோச்சுக்கிட்டு பாப்கார்ன் சாப்டுனு இருக்கா”
கோச்சுக்கிட்டு பாப்கார்ன்னா? ஆகா நம்ம பையனுக்கும் மனைவியா மனைல உட்கார்ந்தது தீனிப்பண்டாரம் போல என்று நினைத்தவாறே குணா “டேய் உங்கம்மா எழுந்தவுடனே பாப்கார்ன் இல்லைனா என்னை வறுத்துடுவா. அதனால உன் பொண்டாட்டிய அளவா கோவப்படச்சொல்லு” என்று பதறினார்.
“அப்பா ! சமூக இடைவெளி வேண்டும்னு அம்மா என்னை மாமியார் வீட்டுக்கு அனுப்பல. ஆனால் மச்சான் கையால எண்ணெய், மாமானார் கையால புதுத்துணி எப்படி வாங்குறது. புது பிரச்சனையா இருக்கு. சுத்தமா புரியல” என்று குழம்பினான் ரமேஷ்
“இருடா ! உங்க அம்மா ஒரு பிரச்சனையை உருவாக்குறானா அவ ஏதோ திட்டம் போட்டிருக்கானு நினைக்கிறேன். யாரோ கதவை தட்டுறாங்க. போய் பாரு” என்று கூறிவிட்டு உடையை உடுத்த சென்றார் குணா.
“டேய் ஜூமியா ! தீபாவளி பரிசு கொடுக்க வந்தியா? பொட்டி பெரிசா இருக்கு?” என்று ஆச்சரியத்தோடு ஜூமியனை கேட்டார்.
“ இல்லைங்க சார். ரமேஷ் தலை தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கனும்னு அபிராமி அம்மா சொல்லியிருந்தாங்க. அதான் வந்தேன்” என்றவாறே தான் கொண்டுவந்த பெட்டிகளை திறந்தான்.
“என்னடா ஜூமியா? உன்னை தம்பியாக தத்தெடுத்து மாமன் முறையில் என் பையனுக்கு சீர் செய்ய சொன்னாளா?” என்று கேள்விகளை அடுக்கினார் குணா.
“ஹி ஹி. அந்த பாக்கியம் எனக்கில்லை. அம்மாவிடம் ஒரு யோசனை சொன்னேன். உடனே அவங்க அதுக்கு சரினு சொல்லிட்டாங்க. அதான் உடனே செயல் படுத்திட்டேன்” என்று நெளிந்தான் ஜூமியன்.
“டேய் நீ யோசனை சொல்லி அவ ஒத்துக்கிட்டானா, அது கண்டிப்பா என் பணத்துக்கு வேட்டு வைக்குற வேலையா தானே இருக்கும். என்னனு சொல்லு” என்று மடக்கினார் குணா.
“உங்க பையனுக்கு மச்சான் கையால தலைக்கு எண்ணெய் ஊத்தி, மாமா கையால புது துணி வாங்குறதுக்கு நான் ஏற்பாடு செஞ்சிட்டேன்.” என்று பீடிகை போட்டான் ஜூமியன்
“கார் எடுத்துனு இவன் அவங்க வீட்டுக்கு போனா போச்சி. நீ எதுக்கு?” என்ற குணாவிடம் “இதுக்குத் தான் சார் நான் உங்க கிட்ட பேசுறதே இல்லை. அம்மாக்கு புரியுறதுல பாதி அளவு கூட உங்களுக்கு புரியாது” என்று குரலை உயர்த்தி ஜூமியன் ஏன் சொல்லுறான் என்று குழம்பிய குணாவிற்கு பதில் கிடைத்தது.
“வாங்க ஜூமியன். என் பையன் குளிக்க எல்லா ஏற்பாடும் ஆச்சா? சம்பந்தி வீட்ல எல்லாம் ரெடி தானே?” என்று கேட்டவாறே அபிராமி வந்தாள்.
“ இப்ப உங்க திட்டம் என்னனு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன் !!!” என்று குணாவும் ரமேஷும் ஒன்றா கத்தினர்.
“அது ஒன்னுமில்லைங்க. ஜூமியன் நமக்காக ஒரு Robotவை மலிவா 2000$ வாடகைக்கு கொண்டு வந்திருக்காரு. அது நம்ம பையனுக்கு எண்ணெய் தேய்த்து, புது துணி கொடுக்கும்” என்று பெருமையாக சொன்னாள் அபிராமி.
“ஏண்டி, Robot எண்ணெய் தேய்த்து, புது துணி கொடுத்தா அது அவன் மச்சானும் மாமாவும் செஞ்ச மாதிரி ஆகுமா? கிறுக்குத்தனமா இருக்கு” என்ற குணாவை நமுத்துப்போன பட்டாசாய் பார்த்தாள் அபிராமி
“சார், இங்கே தான் என் அறிவை உபயோகப்படுத்தினேன். இந்த Robotவை முதல்ல உங்க சம்பந்திவீட்டுக்கு அனுப்பி அவங்க கை ரேகையை வாங்கிட்டேன். அப்படியே 1 லிட்டர் எண்ணெய் மற்றும் புது துணியும் வாங்கி வரவெச்சிட்டேன்.” என்ற ஜூமியனிடம்
“டேய் !!! இதுக்கு ஏண்டா Robot. கொரியர்லேயே செஞ்சியிருக்கலாமே” என்று மடக்கினார் குணா
“சார் நிலால இன்னும் பாட்டி வடை சுட்டுனு இருக்காங்கனு நம்புற உங்களுக்கு புரியாது” என்ற ஜூமியனிடம் “அப்ப நிலால பாட்டி அங்கே வடை சுடலையா? அப்ப அது என்ன இட்லியா?” என்று உளறினார் குணா
“சார், இப்ப ஜூம்ல உங்க சம்பந்தி வீட்ல எல்லோரும் இணைவாங்க. மச்சான் அங்கே இருந்து பொத்தான் அமுக்குனா இங்கே Robot எண்ணெய் கிண்ணத்துல இருக்குற எண்ணெயை உங்க பையன் தலைல ஊற்றும்.” என்று விளக்கினான் ஜூமியன்.
“டேய் இதை நானே ஊத்துவேனே. அதுக்கு ஏண்டா Robot? அதுக்கு வேற வேலை இல்லையா?” என்று கிண்டலாக கேட்டார் குணா
“சார், இந்த Robot அவங்க கைரேகையை பதிவு செஞ்சி வெச்சிருக்கு. இப்ப எண்ணெய் கிண்ணத்தை அது தூக்கும்போது அந்த கைரேகையை கிண்ணத்தில் பதிய வைக்கும். பாரம்பரிய வழக்கப்படி மச்சான் கையால எண்ணெய் வெச்ச மாதிரி ஆகிடும்”
அதே நேரம் அபிராமி கணினியில் ஜூம் செயலியை துவக்கினாள். சம்பந்தி வீட்டார் பேந்த பேந்த முழித்தபடி அதில் தெரிந்தனர்.
“தம்பி நீங்க இந்த நாற்காலில அசையா உட்காருங்க. பயப்படாதீங்க. ஜூம் மச்சான் இப்ப நீங்க உங்க திரைல தெரியுற பொத்தானை அமுக்குங்க அவ்வளவு தான்” என்று ஜூமியன் வழிமொழிந்தான்.
திரையில் தெரிந்த மச்சான் ரமேஷை பாவமாய் பார்த்துக்கொண்டே பொத்தானை அமுக்கினான். அதே சமயம் மாமனார் அவரும் அவரின் பொத்தானை அமுக்கினார்.
தொம். க்ரிக் க்ரிக் க்ரிக் என்று Robot சத்தம் எழுப்பியவாறே எண்ணெய் கிண்ணத்தை கையில் எடுத்தது. ரமேஷ் அருகே மெதுவாக சென்று அவன் தலைக்கு மேல் கிண்ணத்தை பிடித்து கிண்ணத்தில் லேசர் நெருப்பு மூலம் கைரேகை பதிய வைக்க ஆரம்பித்தது.
அனைவரும் கண்கொட்டாமல் அந்த அரிய காட்சியை பார்க்க தயாராகினர். எண்ணெய் கொதிக்கும் வாசத்தால் ஏற்பட்ட தும்மலை அடக்கமுடியாமல் குணா தும்மினார்.
டமால் டுமில் என்று சத்தம் போட்டப்படி Robot கொதிக்கும் எண்ணெயை சுவரில் வீசியது. அதில் சில துளிகள் குணாவின் தலையில் பட்டு அவரின் 4 முடிகளில் ஒன்றை தீய்த்தது.
“ஐயோ, தும்மல் சத்தம் கேட்டா இந்த Robotக்கு வெறி வந்துடும். இன்னொரு தும்மல் சத்தம் கேட்டா தான் அடங்கும்” என்று அலறியபடி ஜூமியன் ஓடினான்.
மெதுவாக Robot புது துணிகளில் இருந்த வேட்டியை எடுத்து தன் இடுப்பில் கட்டிக்கொண்டு, துண்டை ஜூமியன் கழுத்தில் போட்டு தரையில் அவனை தர தரவென இழுத்துக்கொண்டு வெளியில் சென்றது.
அதே சமயம் அபிராமியும் மருமகளும் கோபித்துக்கொண்டு பாப்கார்ன் தேடினர்.
மாலை பட்டாசு வெடிப்பதில் என்ன பஞ்சாயத்து வருமோ என குணாவும் ரமேஷும் திகிலில் உறைந்தனர்.
– தொடரும் இந்த ஜூம் கலாட்டா….
இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்