க/பெ ரணசிங்கம்

சினிமா விமர்சனம்

- Advertisement -

க/பெ ரணசிங்கம் – கணவர் பெயர் ரணசிங்கம் 

வெளிநாடு செல்வது தான் கனவு. வெளிநாடு சென்றால் தான் வாழ்க்கை. வானுயர பறந்து செல்லும் விமானத்தின் ஓசை காதுகளுக்குள் நுழையும் போதெல்லாம் அதில் ஏறிக் கடலைத் தாண்டி அங்கே கொட்டிக்கிடக்கும் பணத்தை அள்ளிவர மனம் துடித்துக்கொண்டே தானிருக்கும். அக்கறைக்கு இக்கறை பச்சை என்பதைப் போல் பட்டி தொட்டிகளில் இருந்து பார்க்கும் போது வெளிநாடுகள் முழுவதும் வெள்ளைப் பணம் கொட்டிக்கிடப்பது போல் தான் தோன்றும். 

படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி வெளிநாடு சென்றால் எப்படியாவது பிழைத்துக்கொள்ளலாம். வயல்காட்டை விற்றாவது பொண்டாட்டி தாலியை அடமானம் வைத்தாவது ஏஜண்டுகளுக்கு அழுதுவிட்டு எப்படியாவது வெளிநாட்டிற்கு போய்விட வேண்டும். 

அம்மாவோ, அக்காவோ, அத்தானோ, தங்கையோ, தந்தையோ, மனைவியோ அவர்கள் வேண்டுவதெல்லாம் “இவனுக்கு அந்த பாஸ்போர்ட்டும் விசாவும் கிடைச்சுட்டுன்னா. வெளிநாட்ல போயி நல்லா பொழைச்சுக்கிடுவான்”.

படத்தைப் பற்றி பேசாமல் இவன் ஏன் இதைப்பற்றி பேசுகிறான் என்று பார்க்கிறீர்களா?

மேலே சொன்ன அம்மாவோ, அக்காவோ, அத்தானோ, தங்கையோ, தந்தையோ, மனைவியோ நீங்களாக இருந்தால் இந்தப் படத்தைப் பார்த்த பின் உங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் முன் பலமுறை யோசிப்பீர்கள். அதுவும் வளைகுடா நாடுகள் என்றால் அனுப்பவே மாட்டீர்கள். 

வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பல பெண்கள் அனுபவிக்கும் சித்திரவதைகளை யூட்டிப்பில் பார்க்கலாம். குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைப் பெண்கள். வளைகுடா நாடுகளில் இருந்து வீட்டு வேலை செய்துவிட்டு இலங்கைக்குத் திரும்பி வரும் பல பெண்களின் உடலில் ஏராளமான ஊசிகளும் ஆணிகளும் அடிக்கப்பட்டிருக்குமாம். யூடியூபில் ஒரு பெண்ணின் உடலில் மட்டும் அறையப்பட்டிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆணிகளை கண்டு அதிர்ந்துவிட்டேன். அவள் முதலாளி ஒரு தவறு செய்தால் உடலில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு ஆணி அடித்துவிடுவாராம். அமைதியாக அடக்க ஒடுக்கமாக ஆணியைத் தாங்கிக்கொண்டு இருந்துவிட வேண்டும் இல்லை திருட்டுப் பட்டம் தான். வளைகுடா நாடுகளின் தண்டனைகள் நாம் அறிந்ததே. எல்லா வீடுகளிலும் இப்படித்தான் நடத்துவார்கள் என்பதில்லை ஆனால் இப்படிப்பட்ட குரூர முதலாளியிடம் சிக்கிக்கொண்ட யாரோ ஒரு சகோதரிக்காக இந்த கணம் என் மனம் கனக்கிறது. யூடியூபில் தேடிப்பாருங்கள். இப்படி எத்தனையோ பெண்கள் ஆணிகளை சுமந்துகொண்டு இலங்கை திரும்பி அறுவைசிகிச்சை செய்து ஆணிகளை வெளியே எடுக்கும் வீடியோக்கள் கிடைக்கும்.

இந்தப்படம் நான் மேலே சொல்லியுள்ள எதைப்பற்றியதும் அல்ல. ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தபோது இவை எல்லாம் என் நினைவலைகளை நிறைத்தன. 

படத்தைப்பற்றிப் பார்ப்போம். படத்தின் இரண்டாவது காட்சியிலேயே ரணசிங்கம் இறந்துவிட்டதாக செய்தி வருகிறது. அவர் இறந்தது வளைகுடா நாடொன்றில். அங்கிருந்து அவர் பிணத்தை தன்னுடைய ஊருக்குக்கொண்டு வர அவர் மனைவி அரியனாட்சி செய்யும் போராட்டங்களே படம்.

இது என்ன பெரிய கஷ்டமா? அங்கே இருந்து பிணத்தைப் பெட்டியில் அடைத்து விமானத்தில் ஏற்றிவிட்டால் வந்துவிடப்போகிறது. வேறு எதுவும் பிரச்சனை என்றால் ஏதாவது ஒரு அமைச்சர் ஒரு ட்வீட் போடுவார் உடனே ஏற்பாடுகள் மளமளவென நடந்து பிணத்தைக் கொண்டு வந்துவிடுவார்கள். இது என்ன பிரமாதம்? சமீபத்தில் கூட எத்தனை பிணங்கள் வந்திருக்கின்றன என்று நினைக்கிறீர்களா?

நீங்கள் நினைப்பது சரி தான். ஆனால் எல்லோர் விசயத்திலும் அப்படி நடந்துவிடுவதில்லை. அதற்கான சில விதிமுறைகள் இருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் சென்று வேலை பார்த்து இறந்தவர்களின் எண்ணிக்கை 38,000க்கும் மேல். அதில் பாதிப்பேரின் உடல்கள் நாடு திரும்பவில்லை என்ற செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தப் பின்னணியில் தான் இந்தப் படத்தை இயக்கித் தந்திருக்கிறார் இயக்குனர் விருமாண்டி.

பிளாஷ்பேக்கில் காதல் கதை தொடங்குகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் ஒரு குறும்பான துள்ளலுடன் கூடிய கிராமத்துக் காதலை அழகாகக் காட்டியிருக்கிறார் விருமாண்டி. படத்தின் மகிழ்ச்சியான பகுதி என்றால் அது இந்தக் காதல் காட்சிகள் மட்டுமே.

அதன் பின் அரியனாட்சியான ஐஸ்வர்யா ராஜேஷின் போராட்டம் துவங்கிவிடுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் வெகு நேர்த்தியாக படமாக்கப்பட்டிருக்கின்றன. வசனங்கள் அனைத்தும் சிறப்பு. தங்கையாக வரும் பாவானி ஸ்ரீ அழுது கத்தி வரும் காட்சி புல்லரிக்க வைத்துவிடுகிறது. அந்த ஒரு காட்சியே இத்தனை நாள்களில் வெளிநாடுகளில் இறந்துபோன அத்தனை பேருக்குமான சோகத்தை நம்முள் திணித்துவிடுகிறது. மாமனாராக வரும் வேல இராமமூர்த்தி, கலெக்டராக வரும் ரங்கராஜ் பாண்டே, ரணசிங்கத்தின் தாய், தந்தை, ஏஜண்டாக வரும் பாய் என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடிப்பும் தத்ரூபமாக இருந்தது.

வெளிநாட்டில் இருந்து பிணத்தை மீட்டு வருவது என்ற கருவைச் சுமந்துகொண்டு நாட்டின் பல சமகாலப் பிரச்சனைகளைப் பேசுகிறது படம். 

குறிப்பாக தண்ணீர்ப் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, கார்பரேட்களால் விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கிராமங்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படும் பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம். இப்படி பல பிரச்சனைகளைப் பேசுகிறது. நகரத்தில் ஏசி அறையில் அமர்ந்துகொண்டு ‘இந்த சீமைக் கருவேலை மரங்களை அழிச்சுட்டாலே போதும் நாட்ல விவசாயம் செழிச்சுரும். தண்ணிப் பஞ்சம் தீந்துரும்’ என்று நம்மில் பலர் பேசிக்கொண்டிருக்கும்போது. படத்தின் ஒரு காட்சியில் ‘இந்த சீமைக் கருவேலை மரங்களைப் பூரா அழிச்சுட்டா நாங்க சோத்துக்கு என்ன பண்றது’ என்று ஒரு பாட்டி கேட்கும் கேள்வி நம்மை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது.

பஞ்ச காலத்தில் மக்கள் விறகு வெட்டிப் பிழைப்பதற்காக வெள்ளைக்காரன் தூவி விட்ட இந்த நச்சு விதைகள் இன்னுமும் பலரின் பசியை ஆற்றிக்கொண்டிருக்கின்றன எனும்போது. அவற்றை அழிப்பதற்கு என்ன தான் வழி? எனும் விடை காண முடியாத கேள்வியே தொக்கி நிற்கிறது.

பட விமர்சனம் எழுதத்தான் தொடங்கினேன் ஆனால் அதைத் தாண்டி இந்தப் படம் முழுவதும் பல சமூகப் பிரச்சனைகளைப் பேசியுள்ளதால் அவற்றையும் சேர்த்து எழுத வேண்டியது அவசியமாகிறது. 

படத்தின் பல காட்சிகள் என்னை கண்ணீர் சிந்த வைத்துவிட்டன. வெளிநாட்டில் வேலை செய்வதாலோ என்னவோ ரணசிங்கத்தை என் சொந்த அண்ணன் போலவே பாவித்துவிட்டேன். ஒரு அளவிற்கு மேல் இந்தப்படம் என்னை உள்ளிழுத்துவிட்டதால் அந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு விமர்சனம் செய்வது சிரமமாகத் தான் உள்ளது.

இந்தப் படத்தில் குறையாக நான் பார்த்தது அரசு அதிகாரிகள் அனைவரும் பாலீசாக நடந்துகொள்வதாக காண்பித்ததைத் தான். மருந்துக்கு பொய்யாகக் கூட எந்த அரசு அதிகாரியும் மரியாதையாகப் பேசி நான் பார்த்ததேயில்லை. உங்களிடம் இருக்க வேண்டியது இருந்து கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் தான் கிடைக்க வேண்டியது கிடைக்கும். அப்போதும் சாதாரண பாமரனாக இருந்தால் மரியாதை கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். கையெழுத்து வேண்டுமானால் கிடைக்கும். 

அதே போல் படத்தில் எத்தனையோ அரசு அதிகாரிகள் வந்தாலும் அத்தனை பேரின் சாதியையும் குறிப்பிடாமல் அந்த கடுப்படிக்கும் அரசு அதிகாரியின் சாதியை மட்டும் வெளிப்படையாக தெரியும் படி வைத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. சமூக பிரச்சனைகளைப் பேசும் போதெல்லாம் குறிப்பிட்ட சாதியைக் குறிவைத்து தாக்கி வெறுப்பரசியல் பேசியே ஆக வேண்டும் என்று ஏதாவது கட்டயாம் இருக்கிறதா? கதைக்குத் தேவையில்லை எனும்போது அதைத் தவிர்த்திருக்கலாம். 

என்ன தான் பாலிசாக பேசும் நல்ல நல்ல அதிகாரிகளாக இருந்தாலும் படத்தின் இறுதிக் காட்சியில் அவர்கள் பித்தலாட்டங்கள் அம்பலப்படுத்தப்பட்டு அவர்களின் முகத்திரை கிழிகிறது.

பாடல்கள் படத்தின் விறுவிறுப்பிற்கு எந்த குந்தகமும் விளைவிக்காமல் அமைதியாக படத்தோடு படமாக சென்றுவிடுகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை சிறப்பு. அந்த கிராமத்து மக்களோடு சேர்ந்த இசை கிராமத்தின் மொத்த சோகத்தையும் அப்படியே நம்முள் இறக்கிவைத்துவிடுகிறது.

சமூக சிந்தனையுள்ள ஒவ்வொரு இளைஞனும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம். உங்கள் கணவனையோ, அண்ணனையோ, மகனையோ வெளிநாட்டு கூலி வேலைக்கு அனுப்பிவிட்டு ஊரில் காத்திருப்பவராக இருந்தால் தயவுசெய்து படத்தைப் பார்க்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள். இதயம் பலிகீனமானவர்களாக இருந்தால் தவிர்த்துவிடுங்கள்.

க/பெ ரணசிங்கம் – அரியனாட்சியின் அறப்போராட்டம். படத்திற்கு கொற்றவை என்று பெயர் வைத்திருந்தால் இன்னுமும் பொருத்தமாக இருந்திருக்கும்.

படம் முடிந்த பின் “செத்தாலும் சொந்த ஊர்ல சாகனும்” என்கிற அந்த வசனம் மட்டும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

நன்றி

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

4 COMMENTS

  1. Hello Jeyakumar.
    Movie and your review, both are awesome and every person who thinks to go to abroad need to see the movie and ur review.
    Congratulations.

  2. Hi Jeykumar.. Perfect Review .. Trying to Make Light flash on Righ angels of this movie is Awesome … Weldone??

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -