நனைக்காத காலுக்கு கடலோடு என்றும் உறவேது நினையாத மனதுக்கு உலகோடு என்றும் உறவேது?நட்பேது?
பொதுநோக்காகச் சிந்தித்துப் பார்க்கிறேன்.
கடந்த காலங்களில் ஒருவர் இறந்து விட்டால் சில நாள் பேச்சோடு சமுதாயம் மறந்துவிடும்.
ஆனால் தற்போதெல்லாம் யார் இறந்தபோதும் ஒரு பெருங்கூட்டம் செல்கிறது. பிரபலங்கள் எனில் ஊடக உலாவாக செய்திகள். நிரந்தரமான சில மொழிவளம் மிக்க சொற்கள் உதிர்த்துச் செல்வது வாடிக்கையாகி விட்டது.
மாண்டவருக்கு மணிமண்டபம் கட்டி மன்றத்தில் தென்றலென தமிழ் சொல்லெடுத்து மனித மனங்களைத் தழுவிச் செல்லும் வியாபார உலகமாக திரிபுற்று வருகிறது.
இதைவிட வேடிக்கை இறந்தவர் உறவும் இல்லை, அறிந்தவரும் இல்லை, இருந்தாலும் மாயசாயம் பூசி போலி உறவு கொண்டாடும் நீசத்துவம் பெருகி வருகிறது.
மாண்டவர் மண்ணோடும் காற்றோடும் கலந்து விடுதால், வாழும் மனிதருக்கு எவ்விதத்திலும் அவரின் திறமைக்கு சவால் விடுப்பதில்லை என்பதால் கொண்டாடுகிறார்கள் போலும்.
அதுவும் நான் நினைப்பது வியாபாரச் சந்தையில் பந்தையக் குதிரையாக ஓடுபவருக்கு ஏதோ ஒருவகையில் பயன் பெற்றுத் தருமோ என்ற சிறுமதியின் சலசலப்பினில் தானோ…
தற்காலத்துச் சுற்றமும் நட்பும் எவரையும் நெஞ்சாரக் கொண்டாடி மகிழ்வதில்லை.
அதன் அடிநாதம் சுநாதமாக இல்லை. மாறாக எதிர்மறை எண்ணங்கள் நிறைத்தேப் பழகுவதால் தானோ…
எனதறிவிற்கு முன் எவரும் பறக்கும் தூசெனத் துச்சமாக நினைப்பது.
அனைத்தும் என்னால் தானே…
எனது உழைப்பின் பிழைப்பில் திளைப்போர் எத்தனை பேர்
என செருக்கின் தருக்கில் இறுமாந்து போவதால் தானோ..
தென்புலத்தாருக்கு நீர்கடன் மட்டும் தானா அவர்களை நினைவு கூர்தல் என்ன தண்டிக்கப்பட வேண்டிய குற்றமா?
இல்லை.
அவர்களின் அடிச்சுவடு தொட்டு பாடம் கற்கலாம். அற்புதமே..
ஆனால் நம்மோடு எதிர்கால வரலாறாக வாழ்ந்து கொண்டிருப் பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க மறக்கும் நிலை தேர்வான மறதி நிலை தானோ… ஆனால் நிலை மாறி வந்தால் சமுதாயம் என்றும் நிகழ்வில் வற்றாயிருப்பைப் பெறும் என்பதே திண்ணம்.
புத்தனும் போதிமரமும் இங்கே உல்லாசப் பயணம் செல்ல ஏற்ற இடம் என சிந்திப்பதால்..
விடுபட்டுச் செல்லும் அம்புகளுக்குத் தெரியாது அது செய்யப் போகும் சாதல் சரித்திரம் என்னவென்று…
உலகியல் மெச்சத்தக்க மென்மையும் மேன்மையும் பெற திருந்துவோம்!!
திருத்துவோம்!!
வாழ்ந்திடுவோம்!!