இயற்கையிடம் மன்றாட்டு

மூன்று கவிதைகள்

- Advertisement -

இயற்கையிடம் மன்றாட்டு

இறஞ்சுகிறோம்
பொறுத்தருள்க!
உணவிட்டாய்
நஞ்சூட்டினோம்
அன்பு கொண்டாய்
விரோதித்தோம்
கருணை காட்டினாய்
புறக்கணித்தோம்
உன் உடலை சிதைத்தோம்
உன் உயிரை வதைத்தோம்
எம் ஞானம்
எம் பராக்கிரமம்
எம் கம்பீரம்
உன் கோப பார்வையில்
உருகி மறையக்கூடியது
எம் சந்தோஷம்
எம் கனவுகள்
எம் செயல்கள்
உன்னில் விளைந்தவை.

பஞ்சபூதங்களால்
எம்மை ஆள்கிறாய்
பருவகாலங்களால்
எம்மை வழிநடத்துகிறாய்.

சாந்தம் கொள்…
எம் பிழைகள்
எம் தப்பிதங்கள்
எம் பாவங்கள்
உன் இதயத்திலிருந்து அழித்திடு.

எம் சந்ததி
ஏதும் அறியாதது
இரக்கம் கொள்
மனம் இளகிடு
இயற்கையே
எம்மைக் காத்திட.

??????????????????????????

அன்பில் ஒளிந்திருக்கும் கொலையின் ருசி

அழகோடு அலைகிறாள்
இறக்கி வைக்க தயக்கம்
சுமந்தலைய பயம்
ஒற்றை மான்
தனிமை
உடல் தளும்பும் குளம்
விதைத்தான்
கனவுகள் விளைந்தன
அறுவடை செய்ய திரும்பாத இடத்திற்குப் போனான்
மதம் பிடித்திருக்கிறது
மிருகத்திற்கு என்றால் கட்டிப் போடலாம்
மனிதனுக்கென்றால் என்ன செய்யலாம் ?
அதிகாரம் ரத்தத்தால் எழுதப்படுகிறது
அடிமைத்தனம் பயத்தால் வரையப்படுகிறது
சமத்துவம் விடுதலை வெளி அழிய
தப்பானது அதிகாரம்
கண்மூடித்தனமாய் வெறியாடும்
தந்திர எதிர்ப்பில் நிர்மூலமாகும்
பலி மேடைக்கு இழுத்து வந்திருக்கிறாய்
வெட்டாமல் வியாக்கினம் பேசுகிறாய்
உன் அன்பில்
நதிச் சுழிப்பின் தனிமை தள்ளாடுகிறது
ஒவ்வொரு நொடியும்
கரை சேர காலம் வருமாவென தவிக்கிறது மனது
சித்தர்கள் பலர் வந்தனராம்
சித்துக்கள் கணக்கற்று நிகழ்ந்தனவாம்
சத்தியம் தழைக்கவில்லை
கடலில் மூழ்கியது போல
திணற
அல்லாடும் கணத்தில்
அழகின் புயலில் நான் சிக்கித் தவிக்கிறேன்
குஞ்சுகளைத் தழுவி நிற்கிறது தாய்க்கோழி
அடைக்கலத்தைக் குஞ்சுகள் தாண்ட முயல்கின்றன
அன்பின் வேலி வலுவானது
முத்தங்கள் அருவருப்பானவை அல்ல
அன்பின் செயல்பாடு
நேசத்தின் வெளிப்பாடு
தொட்டால் தீட்டு
பட்டால் பாவம்
விஷ மரம் வேரோடு சாயட்டும்.

??????????????????????????

கட்டுடைக்கும் சொற்படலம்

வார்த்தைக்குள்
வார்த்தை
பொதிந்து
வார்த்தை பண்ணி…
கொதிக்கும்
நிறைவின்மையிலிட்டு
அதை
பொரித்தெடுத்து…
வேதனையைப் பிழிந்து
அதில்
ஊற வைத்து…
மெளனத்தில்
அள்ளிப் போட்டு
உலர வைக்கிறார்கள்

வாசனை பிடித்து வரும்
நாய்கள்..
பூனைகள்..
எலிகள்..
இன்னும் பிற
ஜீவராசிகளுக்கு
பின்பு
பரிமாறுகிறார்கள்.

விக்கிச் செத்தாலோ..
விழுங்கிக் செத்தாலோ..
கவலை கொள்ளாது
புழுத்து நாறிக் கிடக்கும்
பிணங்களுக்கு
மத்தியில்
கனவு கண்டு கொண்டே
கவிதை நெய்கிறார்கள்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -