பெருமாள் மொழிய களிறு எறிந்த

வரலாற்று சிறுகதைப் போட்டி - 2022

- Advertisement -

சோழப்பேரரசின் புகழ் ஓங்குக!  மாமன்னர் வாழ்க!! இளவரசர் வாழ்க!!!  

     கையில் அரசுச்சின்னம் பொறித்த கொடியுடன் குதிரையில் அமர்ந்தவாறு  உரக்கக் கூவிக்கொண்டே படைவீரர்கள் ஊற்றத்தூர் நகரத் தெருக்களைச் சுற்றி வந்தனர். வீதிகள் எங்கும் மாவிலைத் தோரணங்கள், மலர் அலங்காரங்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தஞ்சையிலிருந்து வந்திருந்த அதிகாரிகளும், உள்ளூர் அதிகாரிகளும் படைவீரர்களும் மிடுக்காகத் தெருக்களில் அங்குமிங்கும் நடைபோட்டுக் கொண்டிருந்தனர். வணிகர்களும் பெருந்தனக்காரர்களும், பொது மக்களும் தத்தமக்குரிய ஆடை அலங்காரங்களுடனும் மகிழ்ச்சியுடனும் தெருக்களில் உலவிக்கொண்டிந்தனர். தோகுமணிநாயனார் ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் சிறப்புடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

      “இவ்வூர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் ஐயா. தோகுமணிநாயனார் ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக நமது இளவரசரே இன்று இந்நகரத்திற்கு நேரில் எழுந்தருள உள்ளார். இந்தச் சிறப்பு யாருக்குக் கிடைக்கும்.” தஞசையிலிருந்து வந்த்திருந்த அதிகாரி ஒருவர் மற்றொரு அதிகாரியிடம் சொல்லிக்கொண்டே நடந்தார்.

     “ நிச்சயமாக “ ஆமோதித்துக்கொண்டே உடன் நடந்தார் மற்றொரு அதிகாரி.        

     கோவிலின் உ:ள்ளே உத்தமசோழ மண்டபத்தின் ஒரு தூணில் சாய்ந்தவாறு தன் மகனுடன் அமர்ந்திருந்தாள் ஒரு பெண்மணி. கடந்து சென்றவர்கள் அவளை மிக மரியாதையுடன் பார்த்துச் சென்றனர். சிறுவன் தன்போக்கில் அமைதியாகக்  கோவிலின் பரபரப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப்பெண், எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நினைவலைகள் அவளைக் கடந்த காலத்திற்குள்  இழுத்துச் சென்றிருந்தது.

     வீட்டுத் தோட்டத்தில் மகன் விளையாடிக் கொண்டிருக்க, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த அருவி, ஆம் அதுதான் அவள் பெயர்,  தனது மணாளன். எபோதோ தன்னிடம் பகிர்ந்தவற்றை, மனதில் அசை போட்டுகொண்டிருந்தாள். .

     ” என் முன்னோர்கள், யானை, வேங்கை, சிறுத்தை, ஆ, உள்ளிட்ட  ஏராளமான விலங்குகள் பெருமளவில் வாழ்ந்த விச்சிமலை மற்றும் அதனை ஒட்டிய அடர்ந்த காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்களாவர்; ஆதிகாலம் முதலே மலைகளிலும் அடர்ந்த காடுகளிலும் சுற்றித்திரிந்து சுதந்திரமாக வாழ்ந்து வந்திருந்த அவர்கள் இயற்கையாகவே காடுகளையும் விலங்குகளையும் பற்றிய பூரண அறிவு  பெற்றவர்கள்; சோழநாட்டுப் படையை  வலிமையானதாக மாற்ற வேண்டும் எனவும் அதன் ஒரு பகுதியாக யானைப்படையில் அதிக எண்ணிக்கையில் யானைகளைச் சேர்க்க வேண்டும் எனவும் சோழ அரசர்கள்  விரும்பினர்; ஆனால் யானைகள் அதிகம் வாழும் சேரநாட்டில் இருந்து யானைகளை வரவழைப்பதும் பழக்குவதும் நடைமுறையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது; சோழநாட்டின் மேற்கு எல்லையாக விளங்குவது பரந்து விரிந்த விச்சிமலையும் அவற்றை ஒட்டிய  பெரும் பரப்பிலான அடர்ந்த காடுகளும்; காட்டினை ஒட்டிய சில பகுதிகள்  சோழநாட்டின் ஆட்சிப் பகுதியாகவும் இருந்தன; எனவே விச்சிமலைக் காடுகளில் வாழ்ந்து வரும் யானைகளைப் பிடித்து வந்து பயிற்சி அளிக்கலாம் என்றும் தவிர, அக்காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் யானைகளைப் பற்றிய அறிவு நிரம்பியவர்களாகவும் தேர்ந்த வில்லாளிகளாகவும் உள்ளவர்கள் என்பதால், அவர்களையும் காடுகளிலிருந்து பிடித்து வந்து படையில் சேர்த்துக் கொள்வது பயனளிப்பதாக அமையும் என்றும்  கருதினர்.

     அதன்படி, விச்சிமலக் காடுகளில் வாழ்ந்த பெரும்பாலான யானைகளும் பழங்குடி மக்களும் கட்டாயமாகப் பிடித்து வரப்பட்டு படைகளில் சேர்க்கப்பட்டனர்; ஆரம்பத்தில் முரண்பட்டாலும், யானைகளும் பழங்குடியினரும் பின்னர் பணிந்தனர்; அரசர்கள் எதிர்பார்த்தது போலவே படை வலிமையானது; இப்படித்தான் என் பாட்டனார் காட்டிலிருந்து தஞ்சைக்குப் பெயர்க்கப்பட்டார்; படையில் யானை பராமரிப்பாளராகவும் வில்லாளியகவும் செயல்பட்டார்;  அவரது மகன் அதாவது எனது தந்தை யானைப்படைப் பிரிவில் பயிற்சியாளராகவும் வில்லாளியாகவும் பணியாற்றினார்; போர்க்களங்களில் அவர் நிகழ்த்திய வீரதீர செயல்களைப் பாராட்டி நமது சக்கவர்த்தி அவருக்குப் பட்டயங்களும் பரிசுகளும் வழங்கியுள்ளார்; நான் யானைப்படையின் தலைமைப் பயிற்சியாளனாகவும் படைத் தலைவனாகவும் உள்ளேன்; காடுகள் பற்றியும் யானைகள் உள்ளிட்ட விலங்குகள் பற்றியும் பூரண அறிவு அதாவது அவற்றின் மொழி உட்பட அனைத்தும் எங்களது குருதியில் கலந்தவை; அவை வம்சாவளியாகத் தொடர்பவை.

.   ” இளவரசர் இராஜேந்திரருக்கு யானைகள் மீது கொள்ளைப்பிரியம். யானைப்படை மீது தனிப்பட்ட அக்கரை காட்டுகிறார்; யானைகளை மனிதர்களாகப் பாவித்து அவைகளுடன் பேசுவார்; அவைகளுக்குப் பயிற்சியும் அளிப்பார்; அவைகளும் அவருக்குக் கட்டுப்பட்டு காலாட்படை வீர்ர்கள்போல அணிவகுத்து நின்று மரியாதை செய்கின்றன.

      படைத்தலைவன் என்றாலும் நான் ஒரு சாதாரண அதிகாரி மட்டுமே;  ஆனாலும்கூட இளவரசர் என்மீது அதிக மதிப்பு வைத்து ஒரு சகோதரனைப்போல பாசம் காட்டுகிறார்”.

     தனது முன்னோர்கள் குறித்தும் இளவரசர் குறித்தும், தன் கணவன்  பல நேரங்களில் துண்டு துண்டாகச் சொன்ன செய்திகளை ஒரு தொகுப்பாக ஒருங்கிணைத்து அவளது மனம் அசைபோட்டது.

     தலையை உயர்த்தி மகன் அருகிலேயே இருக்கிறானா என்று பார்த்துவிட்டு மீண்டும் நினைவலைகளில் மூழ்கினாள் .

     அன்றொரு நாள் – விடியல் நேரம்,

     ”அருவி” என மனைவியை அழைத்தான்.  பாசறைக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த சந்திரன்,  பதிலில்லை. குரலை சற்று உயர்த்தி மீண்டும்.

     ” அருவி “ என அழைத்துக்கொண்டே அவளருகே வந்தவன்,

     ”எனக்கு முன்பாக எழுந்து நான் பாசறைக்குச் செல்ல என்னை ஆயத்தப்படுத்துவாயே இன்று என்னவாயிற்று உனக்கு?.  நான் போருக்குச் செல்வது குறித்துக் கவலை கொள்கிறாயா?” என்றான் ஆதரவான குரலில்.

     சட்டென்று எழுந்தவள்,  

    “கவலையா? எனக்கா? வீரமிக்க சோழப்பேரரசின் குடிமகளான  நான். ஏன் போரைப் பற்றிக் கவலை கொள்ளவேண்டும்? “   கேள்வி  அவள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதை  உணர்த்தியது.

    “பின் ஏன் நான் கூப்பிடுவதுகூடத் தெரியாமல், சிந்தை இழந்திருந்தாய்?” சீண்டினான்.

    “ நம் மகன் இரத்தினசேனன், சோழர் படைத்தளபதியாகப் பொறுப்பேற்கும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு களித்துக் கொண்டிருந்தேன், அதற்குள் என்னைக் கலைத்துவிட்டீர்கள் ” சிணுங்கினாள்.

     “ என் கண்மணியே,” பரிவுடன் விளித்து அவள் தலையைக் கோதியவன்,        ” நமது மகனுக்குப் பத்து வயதுதானே ஆகிறது; அவன் இப்போதுதானே கல்வியும் போர்க்கலையும் கற்கத் துவங்கியிருக்கிறான்; அதற்குள் அவனைப் படைத் தளபதியாக்கி விட்டாயே? ”

    “ ஏன் ஆகக்கூடாதா? அவன் யார்? போர்க்களங்கள் பல கண்டு எதிரிகளை பந்தாடி வீரச்செயல்கள் புரிந்து சோழ சக்கரவர்த்தியிடமிருந்து பட்டயங்களையும் விருதுகளையும் பெற்ற வாணரின் பெயரன்; எதிரிகளைக் குலைநடுங்கச் செய்யும் பெருமைக்குரிய யானைப்படையின் தலைவர் நீங்கள், நமது மாமன்னரால்   ‘அரையன்’ பட்டம் வழங்கப்பட்டவர்;  இந்த வீரமரபில் உதித்த நம் மகன் படைத்தளபதி ஆகமட்டானா? ஆகக்கூடாதா? “  என்றாள் சற்று உரத்த குரலில்.

    “ அமைதி கொள், இப்போதே ஏன் அவனது எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காண்கிறாய். இரத்தினசேனன் வளர்ந்து பெரியவனாகட்டும், கல்வியும் போர்ப் பயிற்சிகளும் முழுமை பெறட்டும், அதற்குப்பின் அவன் படையில் சேர்ந்து போர்க் களங்களைக் காணவேண்டும், படிப்படியாகத் தானே உயர்நிலைக்கு வர முடியும். காலம்தானே எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. காலம் அவனுக்கு நல்வழி காட்டும் என்ற நம்பிக்கையுடன் காத்திரு, வீண் கனவுகளில் நம்பிக்கை வைக்காதே, நாம் வணங்கும் ’காடுகிழாள்’  அவனுக்குத் துணைபுரிவாள்.“

     “ ஊற்றத்தூர் சென்று பல காலமாகிவிட்டது. போர்க்களத்திலிருந்து திரும்பிய பின்னர் நாம் ஊற்றத்தூர் சென்று நம் குல தெய்வமான ’காடுகிழாளை’யும்  அவ்வூரில் கோவில் கொண்டு அருள் வழங்கும் தோகுமணி நாயனாரையும் தரிசிப்பதுடன் அவ்வூரிலுள்ள நம் உறவினர்களையும் சந்தித்து நலம் விசாரித்து வருவோம்”. பிறந்த மண்மீதான பாசம், சந்திரனை நெகிழ்ச்சியுடன் பேசவைத்தது. .

      “ எப்போது படை புறப்படப்போகிறது? நம் சக்கரவர்த்தியும் படையுடன் வருகிறாரா? “  வினவினாள். சோழச் சக்கரவர்த்தி மேலைச்சாளுக்கிய நாட்டின் மீது போர் தொடுக்க முடிவு செய்திருப்பதையும், அதற்காகப் படைகள்  முழுவீச்சில் தயார் செய்யப்பட்டு வருவதையும் தலைநகர் தஞ்சையில் வாழும் மக்கள் நன்கு அறிவர். 

     “ இல்லை, அவருக்குத் தஞ்சையில் முக்கிய அலுவல்கள் உள்ளனவாம். இளவரசர் தலைமையில்தான் படை புறப்படுகிறது, ”.

       யானையின் பிளிறல் போல ஒரு சத்தம் மிகச் சன்னமாகவும் தொலை தூரத்திலும் கேட்டது. 

     “  ஆகா! யானை வருகிறது!! அம்மையே எழுந்திருங்கள் நம் இளவரசர் வந்து கொண்டிருக்கிறார்” மகிழ்ச்சித் துள்ளலோடு உரத்த குரலில் கூவிக்கொண்டே வாசல் நோக்கி ஓடினான் இரத்தினசேனன். மகனின் குரல் கேட்டு கண்விழித்த அருவி, வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

       “ நம் காதுகளுக்கு சத்தம் எதுவும் கேட்கவில்லை, ஆனால் ஒரு சிறுவன் தான் கேட்ட சிறு ஓசையை வைத்து வருவது யானை என்றும் அதில் அமர்ந்திருப்பவர் நம் இளவரசர் என்றும் எப்படி அறிந்துகொண்டான்? வியப்பாக இருக்கிறது.”  அதிகாரி ஒருவர் மற்றொரு அதிகாரியிடம். .

       ”ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? இச்சிறுவன்,  சுருதிமான் நக்கன் சந்திரரின் மகன்  என்பதை நீர் அறிவீர்தானே. யானைகள் குறித்த பூரணஅறிவு பெற்ற பரம்பரை அல்லவா அவர்களுடையது? இச்சிறுவனிடம் யானைகளைப் பற்றிய கூரறிவு  இருப்பதில் வியப்பில்லையே. நமது மாமன்னர் மற்றும் இளவரசர் தலைமையில் நடந்த  போர்களங்களில் சந்திரன்  காட்டிய வீரத்தையும் நிகழ்த்திய சாகசங்களையும் அவரது விசுவாசத்தையும் பாராட்டித்தானே அவருக்கு “அரையன்” என்ற பட்டம் மாமன்னரால் வழங்கப்பட்டுள்ளது., சந்திரரின் அபாரத்திறமை மீது கொண்டிருக்கும் மதிப்பு  காரணமாகத்தானே இளவரசரே நேரில் மரியாதை  செலுத்த இங்கு வருகை தருகிறார் “. முதலாமவர்.

        தன் பரிவாரங்கள் புடைசூழ ஊர் எல்லைக்கு வந்துசேர்ந்த இளவரசர் இராஜேந்திர சோழரை, ஊர்மக்கள் ஒன்று திரண்டு நின்று, வின்முட்டும் தங்களது உணர்வுமயமான வாழ்த்தொலிகள்  மூலம் வரவேற்றனர்.  மெய்கீர்த்தி பாடப்பட்டது. யானை மீது கம்பீரமாக அமர்ந்திருந்த இளவரசர், புன்னகையுடன் கையை உயர்த்தினார், மக்களின் வரவேற்பை ஆமோதிக்கும் பாவனையுடன். தேவரடியார்களான ஆடலரசிகள் நாட்டியம் ஆடிக்கொண்டும், இசைக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டும் முன்னே செல்ல, இளவரசரது பரிவாரம் அவர்களைத் தொடர ஊரார் பின்னே நடந்தனர், கோவிலை நோக்கி.

      கோவிலின் நுழைவாயிலில் சிவாச்சாரியர்கள் பூரணகும்ப மரியாதை செலுத்தி  இளவரசரை கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

     கருவறை முன்பாக இளவரசர் நிற்கிறார், ஒதுவார் நாவுக்கரசர் பதிகத்தை இசையுடன் கலந்து பாடிக்கொண்டிருக்கிறார். இறைமூர்த்தத்திற்கு முன்னர் வைக்கப்பட்டிருந்த நந்தா விளக்குகள் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்ததன… ஒரு விளக்கின் தீபஒளியின் மீது கண்களைச் செலுத்திய இளவரசர் அதில் ஈர்க்கப்பட்டு அதையே உற்றுப்பார்க்கத் தொடங்கினார். தீபஒளி ஒரு நெருப்புப் பந்தாக உருமாறி இளவரசரை ’மான்யக்கேடம்’ போர்க்களத்திற்கு இழுத்துச் சென்றது.

        சோழநாட்டை அழிக்கக் கங்கணம் கட்டிகொண்டு ஒயாது தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான், மேலச்சாளுக்கிய நாட்டின் அரசனான சத்தியாசிரியன். அவனை அழித்தொழிக்கவே சோழநாட்டின் பெரும்படை இளவரசர் இராஜேந்திரர் தலைமையில் அவன் நாட்டிற்கே வந்துள்ளது.  துங்கபத்திரை நதிக்கு அப்பாலிருந்தது மேலைச்சாளுக்கிய நாட்டின் முக்கிய நகரமான ’மான்யக்கேடம்’.  

     மான்யக்கேடத்தில்  சத்தியாசிரியன் தலைமையில் மேலைச்சாளுக்கியப் படை, சோழர்களது படையை எதிர்கொள்ள ஆயத்தமாக அணிவகுத்து நின்றிருந்தது  தூரத்தில் இருந்தவாறே எதிரிப் படைகளை நோட்டமிட்டு அவர்களது படை வலிமையையும் போர்க்கள வியூகங்களையும் மதிப்பிட்டுக் கொண்டிருந்தார். இளவரசர். யானைப்படைத் தலைவனான சந்திரனும் எதிரிப்படையின் அணிவகுப்பைப் பார்த்தான். எதிரிப்படையில் முதல் அணியாக நின்ற யானைப் படையைத் தாக்குவதற்குரிய வியூகங்களை துரிதமாகத் தன்மனதில் வகுத்துக் கொண்டிருந்தான்.

    “ சந்திரா “ இளவரசரது குரல் கேட்டுத் திரும்பிய சந்திரன், தான் அமர்ந்திருந்த யானையை இளவரசர் அமர்ந்திருந்த யானைக்கு அருகில் கொண்டு சென்று, கைகட்டி வாய் பொத்தினான்.

    “ என்ன வியூகம் யோசித்திருக்கிறாய் சொல்”

     எதிரிப்படை குறித்த தனது மதிப்பீட்டினையும், நமது யானைப்படை மூலமாகத்  நுட்பமான தாக்குதல் நடத்தி  எதிரிப்படைகளுக்கு கடும் சேதம் விளைவிப்பதற்காகத், தன் மனதில் உதித்திருந்த யோசனைகளையும் அடுக்கினான்.

    “ அருமையாக வியூகம் வகுத்துள்ளாய். ஆனால் அது போதாது.  நான் கூறும் திருத்தங்களையும் சேர்த்துக்கொள் ”  என்றவர், அவற்றை விளக்கிவிட்டு, “ நீ சென்று யானைகளுக்கும் உன் வீரர்களுக்கும் தக்கவாறு உத்திரவு அளித்து அவர்களை விரைவாகத் தயார்ப்படுத்து. நான் அதற்குள் மற்ற படைத்தலைவர்களை அழைத்து நமது வியூகங்களை விளக்கி அவர்களையும் தயார்படுத்தி விடுகிறேன். இன்னும் அரை நாழிகையில். நாம்தான் முதலில் முன்னேறிப் போரைத் துவக்கப்போகிறோம்,” உற்சாகமாகக் கட்டளையிட்டார் இளவரசர். 

       சிறிது நேரத்தில் சோழப்படை தாக்குதலை ஆரம்பித்தது. முதல் நடவடிக்கையாக பிரம்மாண்டமான நெருப்புப்பந்துகள் சோழப்படையினரின் பொறிகளிருந்து எதிரி நாட்டின் யானைபடையை நோக்கிச் சீறிப்பாய்ந்தன.  இரண்டு படைகளுக்குமான இடைவெளி, காற்று வீசும் திசை, நெருப்புப் பந்துகளது கனம், ஆகியவற்றை நுட்பமாகக் கணக்கிட்டு, எதிரி யானைகளின் அணிவகுப்பின் பல பகுதிகளிலும் விழுமாறு பெரும் பந்தங்கள் தொடர்ந்து வீசப்பட்டன. நெருப்புப் பந்தங்களைக் கண்ட யானைகள் மிரண்டு  பிளிறி  நிலை தடுமாறின. பாகன்கள் அவற்றை ஆற்றுப்படுத்தினர். ஆனாலும் சிறிய இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் நெருப்புப்பந்துகள் நாலாபுறங்களிலும் வந்து விழுந்ததால் யானைகள் பாகன்களுக்குக் கட்டுப்படாமல் மிரட்சியுடன் சிதறி முன்னும் பின்னும் ஓடத் தொடங்கின. 

       ” சந்திரா உன் படைகளுடன் விரைந்து முன்னேறி சத்தியாசிரியனின் யானைகளையும் வீர்ர்களையும் தாக்கு இதுதான் சரியான தருணம்.”

       இளவரசர் உத்திரவு கிடைத்தவுடன் எதிரிப்படையை நோக்கி, புயலென சீறிப் பாய்ந்தான் சந்திரன். சோழநாட்டு யானைகள் மீதிருந்த வில்லாளிகள் எதிரிநாட்டு யானைகளை வழிநடத்திய வீர்ர்கள் மீது  கனமான அம்புகளைச் சரமாரியாக எய்தனர். வீர்ர்கள் பிடித்திருந்த  பெரிய தற்காப்புக் கேடயங்கள் பிய்த்துக் கொண்டு சென்றன. அடுத்தடுத்து பறந்து வநத அம்புகள் அவர்கள் அணிந்திருந்த கவசங்களைத் துளைத்தன. மேலும் மேலும் அம்புகள் பாய்ந்தன. பல வீர்ர்கள் சுருண்டு வீழ்ந்தனர். அதே நேரத்தில், யானைகளில் அமர்ந்திருந்த,  வேல் வீசுவதில் வல்லமை பெற்ற சோழவீரர்கள், எதிரி யானைகளின் மீது  வேல்களை அழுத்தமாகவும் வேகமாகவும் வீசினர். அவை அந்த யானைகளின் மத்தகங்களிலும் உடல்பகுதிகளிலும் பொருத்தப்பட்டிருந்த கவசங்களைச் சேதப்படுத்தின. தொடர்ந்து வீசப்பட்ட வேல்கள் யானைகளின் மத்தகங்களிலும் உடலிலும் பாய்ந்தன. பெருத்த பிளிறலுடன் பல யானைகள் மண்ணில் சாய்ந்தன. தப்பித்த யானைகளை சோழவீர்ர்கள் நீண்ட வெட்டறுவாள் போன்ற பேராயுதங்களால் வெட்டி வீழ்த்தினர். .எராளமான யானைகளும் அவற்றின் மீதமர்ந்து போர்புரிந்த வீர்ர்களும் சாய்ந்ததால் போர் துவங்கிய அரை நாழிகைக்குள்ளேயே மேலைச்சாளுக்கிய நாட்டின் யானைப்படை பெருத்த சேதங்களுடன்  நிர்மூலமானது.

        தனது குதிரை மீதமர்ந்து களத்தில் நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்த  சத்தியாசிரியன் கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தான்.. தங்களது அனுபவம் வாய்ந்த மற்றும் தீரமிக்க  யானைப்படையை சோழப் படையினர் வெகு எளிதாக நிர்மூலம் செய்துவிட்டதை எண்ணிக் குமைந்தான்,  போரைத் தொடர்வது பாதுகாப்பானதல்ல என்று கருதி தனது படைகளைப் பின்வாங்க உத்திரவிடலாமா என்று யோசித்தான். ஆனாலும், தங்களது யானைப்படையை நிர்மூலமாக்கிய சோழநாட்டு யானைப்படைத் தலைவனைக் கொல்லாமல் இன்றைய போரை முடிக்கக்கூடாது என முடிவெடுத்தவன், தனது படைத்தலைவர்களை அழைத்து பின்வாங்கத் தாயராகுமாறு கூறிவிட்டு, கனத்த  வேல் ஒன்றினைக் கையில்  உறுதியாகப்பற்றியவாறே தனது குதிரையை, முன்னேறி வரும் சந்திரனை நோக்கி வேகமாகச் செலுத்தியவன்,. குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் நின்றான். யானை மீதமர்ந்து தன் வீர்ர்களுக்கு கட்டளையிட்டுக் கொண்டும், சிதறிய மேலைச்சாளுக்கியப் படைகளை மூர்க்கமாகத் தாக்கிக் கொண்டும் முன்னேறி வந்து கொண்டிருந்த  சந்திரனை நோக்கிக் குறிபார்த்த சத்தியாசிரியன், வலிமையான வேகத்துடன் வேலினை வீசினான். வேல் சரியாக சந்திரனின் நடுமார்பில் பாய்ந்தது, இரத்தம் பீய்ச்சியடித்தது, சந்திரன் சரிந்தான். அதே வேளையில் சத்தியாசிரியன் தனது படைகளைப் பின் வாங்க உத்திரவிட்டான்.  போர் நிறுத்தத்திற்கான இசை ஒலிக்கப்பட்டது.

     வேலால் தாக்கப்பட்ட்ட சந்திரன் சரிவதைக்கண்ட சோழ வீரர்கள் விரைவாக ஓடிச்சென்று அவனைத் தாங்கிப் பிடித்தனர். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்த கொடூரத்தை தூரத்திலிருந்துக் கவனித்துக் கொண்டிருந்த இளவரசர் இராஜேந்திரர் பதற்றத்துடன் சந்திரன் விழுந்த இடம் நோக்கி விரைந்தார். அதற்குள் அவன் உயிர் பிரிந்திருந்தது. அதிர்ந்த இளவரசர் வெறிகொண்டு கர்ஜித்தார்

     “ சத்தியாசிரியா! பழிவாங்காமல் விடமாட்டேன். நீயும் உன் படைகளும் எங்கே ஓடி ஒளிந்தாலும்  துரத்திவந்து உன்னை வெல்வேன் உன் படையை அழிப்பேன், உன் ஊர்களைக் கொளுத்துவேன் “ ஆவேசத்துடன் கத்தினார். சொன்னவாறே துரத்திச் சென்று சத்தியாசிரியனின் படைகளை அழித்ததுடன் அந்நாட்டில் பெரும் அழிவுகளையும் ஏற்படுத்தினார்.

     போர்முடிந்தவுடன், சந்திரன் ஆன்மா சாந்தியடைய வேண்டி ஊற்றத்தூர்   தோகுமணி நாயனார் ஆலயத்திற்கு அரசு சார்பில் நிவந்தங்கள் அளித்து  சிறப்பு வழிபாடு நடத்திட, ஆணையிட்டதுடன் அச்சிறப்பு வழிபாட்டின் போது தானே நேரில் வந்து அஞ்சலி செலுத்த உள்ளதாகவும்  அறிவித்தார் இளவரசர்.

     ”டாண்..டாண் “பூசையின் போது ஒலிக்கப்படும் கோவில்மணி ஓசை இளவரசரைத் தன் நினைவுக்கு மீட்டது. நிமிர்ந்து பார்த்தார், சிவாச்சாரியார் மூலவருக்கு தீபாரதனை காட்டிக்கொண்டிருந்தார்.  சந்திரனின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமென மனமுருக வேண்டினார் இளவரசர்.

     அரசு சார்பில் வைக்கப்பட்ட  நந்தா விளக்குகளைத் தினசரி இரவுபகல் எரியச் செய்யும் பொறுப்பு சிவாச்சாரியார்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விளக்குகளை எரிக்கத் தேவைப்படும் நெய் வாங்கப்படும் செலவுக்கான  நிரந்தர முதலீட்டு ஏற்பாடாக பொற்கழஞ்சுகள் அரசுக் கருவூலகத்திலிருந்து  வழங்கப்பட்டிருந்தன.

    ” பெருமாள் மொழிய களிறு எறிந்த” அதாவது,  மான்யக்கேடம் போர்க்களத்தில் இளவரசர் ஆணையிட  எதிரிகளின் யானைப்படையை நிர்மூலமாக்கிய, சுருதிமான் நக்கன் சந்திரன் ஆன்ம சாந்திக்காக  சோழப்பேரரசு சார்பில் ஊற்ற்த்தூர் தோகுமணி நாயனார் கோவிலுக்கு நிவந்தங்கள் வழங்கி இராஜேந்திரசோழர் பிறப்பித்த ஆணை, உத்தமசோழ மண்டபத்தில்  ஒரு கல்வெட்டாகப்  பொறிக்கப்பட்டது.   

     பூசை முடிந்து வந்த இளவரசர், அருவியை அழைத்து வரச்செய்தார். கைகூப்பியவாறே  மகனுடன் தன் முன்னே நின்ற அருவியை நோக்கி,

     ”தாயே, படைவீர்ர்களது தியாகம்தான் சோழப்பேரரசின். அடித்தளம். போர்க்களங்களில் அவர்கள் சிந்தும் செங்குருதிதான் சோழநாடு என்ற பெருந்தீபத்தை  சுடர்விட்டு எரியச்செய்யும் ஆகுதி. போரில் வீரமரணம் அடையும் வீர்ர்களது குடும்பத்தைக் காப்பாற்றுவது அரசின் தலையாயகடமை. அதை அரசு நிறைவேற்றும். சந்திரன் தனித்துவங்கள் பல கொண்ட தீரன் மட்டுமல்ல, எனது அன்பிற்குரியவனும் கூட, என் சகோதரனைப் போன்றவன். அவனது தியாகத்திற்கும் வீரத்திற்கும் ஈடு இணை இல்லை. அவனுக்கு இணையான ஒரு பெருவீரனை இனி சோழநாடு எப்போது காணப்போகிறது என்பதுத் தெரியவில்லை. சந்திரனுக்கு வழங்கப்பட்ட வீட்டிலேயே நீங்கள் தொடர்ந்து தங்கிக்கொள்ளலாம். இரத்தினசேனனின் கல்வியும் போர்ப்பயிற்சியும் தொடரட்டும் அரசு உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துத்தரும்.” என்றவர், கோவிலின் வாசலை நோக்கி நடந்தார்.

      நுழைவுவாயிலுக்கு முன்னே, ஐந்து யானைகள் போர் அலங்காரத்துடன் நின்றிருந்தன. பாகன்களும் படைவீரர்களும் ஒதுங்கி நின்றனர். யானைகளின் முன்னே வந்து நின்ற இளவரசர், போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த அவர்களது தலைவனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட உள்ளதை அவற்றின்  மொழியிலேயே விவரித்தார். அவைகள் தலையை அசைத்தன. பின்னர் கட்டளையிடத் தொடங்கினார். முதல்கட்டளை பறந்தது, உடனே ஐந்து யானைகளும் ஒரே நேரத்தில் பின்னங்கால்களில் நின்று கொண்டு, முன்னங்கால்களைப் பூமியிலிருந்துத் தூக்கியும் தும்பிக்கையை மேல்நோக்கி உயர்த்தியும் நின்றன.  அடுத்தக் கட்டளை வந்தது, யானைகள் ஒரே நேரத்தில் வேகமாக ஆனால் ஒரே சீராகப் பிளிறின, தொடர்ந்த கட்டளைகளால் மேலும் இருமுறை அதேபோல பிளிறின. அடுத்த கட்டளையில் அவை தும்பிக்கையைத் தாழ்த்தியும் முன்னங்கால்களைத் தரையில் ஊன்றியும் இயல்பு நிலைக்குத் திரும்பின. யானைகள் செலுத்திய வீரவணக்கத்தை நேரில் கண்ட ஊர்மக்கள் பிரமித்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக இளவரசரே நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதும், அவரே ஒரு படைத்தலைவனாக நின்று வீரவணக்கம் செலுத்துவதற்குரிய கட்டளைகளை யானைகளுக்குப் பிறபித்ததும், அவர்களை உச்சபட்ச பிரமிப்பில் ஆழ்த்தியது. நக்கன் சந்திரன் மீது இளவரசர் வைத்திருந்த  பாசமும் பரிவும் அவர்களுக்குப் புரிந்தது.

      அதிகாரிகளிடம் புறப்படுவதற்குரிய கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த இளவரசர், ஒரு சிறுவன் யானைமொழியில் பேசும் குரல் கேட்டுத் திரும்பினார் அங்கே

      ”நான் பெருவீர்ரான சுருதிமான் நக்கன் சந்திரரின் மகன்”, என்று யானைகளிடம் அவற்றின் மொழியிலேயேத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இரத்தினசேனன், தொடர்ந்தான்,

    ” நீங்கள் என் தந்தைக்கு செலுத்திய வீரவணக்கத்திற்கு என் தாயார் மற்றும் என் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் என் சகோதரர்களைப் போன்றவர்கள்; என் தந்தை உங்களைப் பற்றியும் உங்களது  திறமைகளைப் பற்றியும் என்னிடம் நிறையச் செய்திகளைக் கதைகளாகச் சொல்லியுள்ளார் நானும், என் பாட்டனார், தந்தை மற்றும், உங்களைப் போன்று சோழ அரசின் விசுவாசிதான், நான் இப்போதே உங்களுடன் இணைய விரும்புகிறேன். ஆனாலும் படைகளில் சேரும் அளவிற்கு நான் இன்னும் உரிய வயதையும் பயிற்சிகளையும் பெற்றிருக்கவில்லை. நான் தகுதி பெற்றவுடன் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன். நாம் சோழப் பேரரசின் புகழை மேலும் மேலும் உயர்த்துவோம்” என்று கூறியதுடன் யானைகளுக்கு, படைவீர்ர்கள் வைப்பது போன்ற ஒரு வணக்கத்தினையும் வைத்தான். யானைகள் உற்சாகமாய்த் தலையசைத்து மகிழ்சியை வெளிக்காட்டின. பார்த்த அத்தனை பேரும், இளவரசர் மற்றும் அருவி உட்பட, அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.

      ” இதோ சோழ அரசின் எதிர்காலப் படைத்தளபதி கிடைத்துவிட்டான். மீண்டும் வந்துவிட்டான் சந்திரன் “ ஆனந்தக் கூச்சலிட்ட இளவரசர், அதிகாரிகளைப் பார்த்து,

     ” சந்திரனைப் போலவே இவனிடமும்  தனித்திறமைகள் உள்ளன. இவனுக்கு நானே முன்னின்று போர்ப்பயிற்சிகள் அளித்து  ஒப்பற்ற  வீரனாக்குகிறேன். சந்திர சூரியர் உள்ளவரை இப்பூமியில்  சந்திரனின் புகழ்  நிலைக்கட்டும்”  என்றார். .    

          அரசப் பரிவாரம் தஞ்சையை நோக்கிப் புறப்பட்டது, தங்களின் எதிர்காலத் தளபதியையும் உடன் அழைத்துக்கொண்டு.

ஜெயபால் இரத்தினம்
ஜெயபால் இரத்தினம்
கதை ஆசிரியர் தமிழ்நாடு அரசின் உள்ளாட்சித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலர் ஆவார். ஓய்வுக்காலப் பணியாக கடந்த பத்தாண்டு காலமாக, வரலாற்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். ஆறு ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டு அதன் அடிப்படையில் “ தமிழக வரலாற்றில் பெரம்பலூர்” என்னும் தலைப்பில் பெரம்பலூர் மாவட்ட வரலாற்று ஆய்வு நூலினை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வரவேற்பினைப் பெற்ற இந்நூல், 2018ம் ஆண்டில் வெளிவந்த சிறந்த வரலாற்று நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் பாராட்டும், பரிசும், பணமுடிப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர், ” தமிழ்த்தாத்தா உ.வே.சா.வும் பெரம்பலூரும் “ என்றத் தலைப்பில் மற்றொரு நூல் எழுதி வெளியிட்டுள்ளார். தொடர்ந்து நூல்கள் எழுதி வருகிறார். இவர் எழுதிய பல கட்டுரைகள் ”தி இந்து தமிழ் திசை” நாளிதழிலும், ”பேசும் புதிய சக்தி” மாத இதழிலும் வெளிவந்துள்ளன.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -