நாகம்

குறுங்கதை

- Advertisement -

“அதுவரைக்கும் அந்தச் சீனன் வீட்டுக்கு வேலைக்குப் போயேன்? ரெண்டு மாசம் போன… நிண்டுட்ட…நாந்தான் சேர்த்துவிட்டேன்னு அவன் என்கிட்ட மூஞ்சி காட்டறான்…”

புலம்பியபடி வந்த அம்மாளு லெபாய் கம்பத்து நாகம்மா கோவிலை வந்தடைந்ததும் வாடகை கார் கதவைத் திறந்து துள்ளிக் குதித்து இறங்கினாள். வழக்கமாகப் பேசும்போது வார்த்தைகளை நிதானமாக அடுக்கி பேசுபவள் சட்டென இப்பொழுது வேறுமாதிரி நடந்துகொள்ளத் துவங்கினாள். சேகர் கோவிலுக்குள் வரப் பிடிக்காமல் வெளியில் இருந்த சிமெந்து தடுப்பில் அமர்ந்து கொண்டார். சேகரின் பெரிய மகள் சுகுனாவும் பக்கத்து வீட்டு அம்மாளும்தான் உள்ளே போனார்கள். அம்மாளு பத்து வருடப் பழக்கம் என்பதால் சேகரின் பிள்ளைகளுடன் நெருக்கமான உறவு கொண்டவள். அவள் நடத்திய பக்தி பிரசங்கமெல்லாம் சேகரும் சுகுனாவும் பலமுறை கேட்டு ஓய்ந்தவை. தீர்வெனச் சொல்லி வரும் பலரிடம் ஒரு சடங்கு பற்றி மேலதிகமான வியாக்கியானங்கள் இருக்கவே செய்தன.

“இந்த நாகம்மா சும்மா இல்ல, சேகரு. தாய் நாகம்… பல வருஷமா பதுங்கியிருக்கா… பாய்ஞ்சானா கெட்டத அழிக்காம விடமாட்டா… நாகதோஷம்லாம் இல்லாம போய்டும்… எப்பேற்பட்ட முன்னோர்கள் சாபமா இருந்தாலும் ஒரு தடவ போய் அந்த அம்மாவோட சன்னிதானத்துல கால் வச்சா போதும்… எவ்ள முயற்சி செஞ்சிட்ட… இதயும் செஞ்சி பாரேன்…”

சேகரின் கண்களில் உயிரில்லாமல் அம்மாளு சொன்ன வார்த்தைகளையே கேட்டுக் கொண்டிருந்தார். கடந்த வாரம் பெரியம்மா வந்து சொல்லி ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்ததால் சேகர் மறுக்க முயற்சித்தார்.

“நீ காணிக்க ஒன்னும் வைக்க வேணாம்… உன் கஷ்த்தம் எனக்குத் தெரியும்… என் சார்புல சுகுனாவுக்கு நான் செஞ்சதா இருக்கட்டும்… நீ வா போலாம்…” என விடாபிடியாய் இருவரையும் அம்மாளு இழுத்து வந்தாள். ஒரு தடித்த மரத்தண்டில் அடர்ந்து வளர்ந்திருந்த புற்றைச் சுற்றி சிறு கொட்டாய்ப் போல எழுப்பியிருந்தார்கள். சுற்றிலும் வேப்பிலைகள் கட்டப்பட்டிருந்தன. நின்று கொண்டே கொட்டாயின் தகறக் கூரையைப் பார்க்கும் அளவிற்குப் புற்றின் உயரத்துக்குத் தோதாக அமைந்திருந்தது. கொட்டாய்க்கு எதிரே நான்கைந்து பேர் அமர்ந்து கொள்ள சிமெந்து தரையும் தெரிந்தது. இரண்டு மஞ்சள் குண்டு பல்ப் மட்டும் கொட்டாய்க்கு உள்ளேயும் வெளியேயும் எரிந்து கொண்டிருந்தன. உள்ளே போனதும் அம்மாளு அக்காள் முகம் மாறியது. கண்களை உருட்டியபடி மூச்சிரைக்கத் துவங்கினாள்.

புற்றின் மீது குங்குமம் தூவி சிவப்பேறியிருந்தது. புற்றுக்கு அடியில் முட்டைகளும் பால் டப்பாக்களும் நிறைந்திருந்தன. “ஆத்தா… உன் பிள்ள வந்திருக்கா… அவளோட குறையத் தீர்த்து ஒரு கல்யாணம் செஞ்சி வச்சிரும்மா…” எனச் சத்தமாகக் கூவிக் கொண்டே அம்மாளு மண்டியிட்டு இரு கைகளையும் உயர்த்தினாள். சுகுனாவிற்குச் சங்கடமாக இருந்தது. அருகில் யாரும் தெரிகிறார்களா எனச் சுற்றிலும் கவனித்தாள். கோவிலை விட்டுச் சற்றே தள்ளியிருந்த வீட்டின் முன்விளக்குப் போடப்பட்டது.

“யாரு தாயீ? அம்மாளு கொரலு மாதிரி இருக்கு?”
அந்த வீட்டிலிருந்து கோவிலுக்கு வர ஒரு சிறிய நடைப்பாதை இருப்பதைச் சுகுனா அப்பொழுதுதான் பார்த்தாள். முட்டிவரைக்குமான பூச்செடிகள் வளர்ந்து அப்பாதையின் இரு மருங்கையும் மூடியிருந்தன. பாட்டி சிலிப்பரை வாசலில் கழற்றி வைத்துவிட்டுக் கொட்டாய்க்குள் சென்றாள். சங்கிலியில் கட்டித் தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடி குடுவையின் எண்ணெய்க்கு மேல் மிதந்து கொண்டிருந்த திரியைத் தேடி நிமிர்த்தித் தீபத்தைப் பற்ற வைத்தார். பின்னர், ஒரு தட்டில் சூடமேற்றி குங்குமத்துடன் வந்து சுகுனாவின் நெற்றியில் பூசினார்.

“ஆசீர்வாதம் பண்ணும்மா… பிள்ளைக்கு நாப்பது வயசாகுது… ஒரு நல்ல வரனும் வரமாட்டுது…” என அம்மாளு மீண்டும் தேம்பும் குரலில் கெஞ்சினாள். சுகுனா ஒன்றுமே பேசவில்லை. முகத்திலும் எந்தப் பாவனையும் காட்டாமல் வெறுமனே நின்றிருந்தாள்.

பாட்டி கண்களை மூடிவிட்டு உணர்ச்சிவசப்படத் தொடங்கினார். அவருடைய தோள்கள் குலுங்கின. அம்மாளுவும் மண்டியிட்டப்படி புற்றின் முன்னே கைகளை ஏந்தியிருந்தாள். பாட்டி கையில் தாங்கியிருந்த தட்டின் ஓரத்தில் எரிந்து கொண்டிருந்த தீபத்தின் காட்டம் இரவு குளிருக்குச் சற்றே சமாதானமாக உணர்ந்தாள் சுகுனா. ஒரு நடனம் போல தீபம் அவள் முன்னே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. சுற்றி நிகழ்பவை தீயின் முன்னே சூன்யமாகிவிட சுகுனாவின் மனத்தில் இருந்த வெறுமையும் சலிப்பும் மேலெழுந்து பொங்கிக் கொண்டிருந்தன.

அம்மாளு நாக்கின் நுனியை மேல்வாயில் வைத்து அழுத்தி எச்சிலை உறிஞ்சி சத்தம் எழுப்பினாள். கைகள் இரண்டையும் தலைக்கு மேலாகக் கொண்டு போய் இருபக்கமும் அசைந்தாள். ஒரு நாகம் நெளிவது போல அவளுடைய சைகைகள் தெரிந்தன. சட்டென மீண்டும் எழுந்து நின்று கட்டைவிரலை சுகுனாவின் நெற்றியில் வைத்தாள். அம்மாளுவின் கண்கள் பிரகாசமாய் ஒளிர்ந்தன.

“அடுத்த புரட்டாசில உனக்குக் கல்யாணம்…” எனச் சொல்லிவிட்டு அம்மாளு நொடிப்பொழுதில் மீண்டும் நினைவுக்குத் திரும்பியவளாக நிதானமானாள்.

இருவரும் கோவிலைவிட்டு வெளியே வந்தார்கள். சேகர் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டைச் சாக்கடையில் தூக்கிவீசிவிட்டு எழுந்தார்.

“சேகரு… ஒரு வேண்டுதல போட்டாச்சு. அம்மாவே வந்து வாக்குக் கொடுத்துட்டா… இனிமே பாரு…” என அம்மாளு உற்சாகத்துடன் இருந்தாள். துடுக்குடன் விரைந்து ஆவேசமாக நடந்தாள்.

“சுகுனா, அப்புறம் என்ன கவல? அடுத்த வாரம் அவன் வீட்டுக்கு வேலைக்குப் போறீயா? பல்ல கடிச்சிக்கிட்டு ஒரு நாலு மாசம் சமாளிச்சிக்கிட்டா வாரத்துக்கு நாநூறு வெள்ளி எவன் தருவான்? பொழைக்கத் தெரிஞ்சிக்கப் பிள்ள… போனத்தடவ மாதிரித்தான்…” என சேகருக்குக் கேட்காமல் அம்மாளு கிசுகிசுத்தாள்.

சுகுனா அமைதியாக இருந்தாள். அவளின் உடல் சிலிர்த்தது. அம்மாளுவின் கண்களில் தெரிந்த நாகம் சீண்டுவதற்குத் தயாராக இருந்தது.

-கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

1 COMMENT

  1. என்னதான் இவ்வுலகம் நவீனத்துவத்தின் கீழிருந்தாலும் மனித மனம் கொஞ்சம் விஷத்தன்மையுடன்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.மனிதன் தனக்குத்தானே கட்டவிழ்த்துக் கொள்ளும் பழக்க வழக்கங்களுக்கு மூடநம்பிக்கை எனும் பொய்யான திரையிட்டுக் கொள்கிறான்.

    சுகுணாவின் நலனில் அக்கறைக் கொள்பவளாக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளும் அம்மாளுவின் செயல்பாடுகள் அனைத்தும் சுயநலமிக்கது.மனிதன் தான் தோற்றுவிட்டதாக இறுதிக் கட்ட பிடிமானத்தில் மனம் சற்று தளர்ந்து விடுகிறான்.தெளிவான சிந்தனையில்லாத சேகரின் மெத்தனப் போக்கு அழிவுக்கான ஆரம்பம்தான்.நம் மனம் தளர்ந்து விடும் போது வாய் பேச மறுத்து விடுகிறது.தன் நிழலை மறந்து அடுத்தவர் நிழலில் சென்று விடுகிறது.இதுவே அடுத்த கட்ட தீயநகர்வுக்கு வழியைத் திறந்து விடுகிறது..

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -