அன்பின் துகள்களாலான கோட்டையில்
சிதறும் நம் மகிழ்ச்சிக் கற்றைகளுக்கு
மத்தியிலும் நிசப்தமாய் உறங்கும்
அன்றில் பறவைகளின் உண்மை நிமிடங்கள்!
சட்டென புகுந்த காட்டுப் பூனையால்
நீயும் நானும் வெவ்வேறு திசையினில்
பொத்தான்களில் எனது கார்குழலை நீயும்
உனது பிடியில் நெளியும் வளையல்களை நானும்
தேடியலைந்து கண்ணீர் வடிக்கிறோம்.
அல்லும் பகலும் நடுநிசியிலும்கூட
உறக்கமின்றி அல்லாடுகின்றன
நம் நினைவின் பறவைகள்!
நம் உள்ளங்கையையும் சேர்த்து
ருசித்துத் தீர்க்கின்றன வீம்புப் பூச்சிகள்.
கைகளை மெல்லத் திறந்து
உள்ளிருக்கும் சமாதான அரிசியை
அல்லாடும் பட்சிகளுக்கு இரையாக்கி…
அப்பறவைகளுக்கும் நம் மனங்களுக்குமான
பேரமைதிக் கொடியை நாட்டுவதற்காக
சமரெனும் குன்றிலிருந்து
சமரச மலைக்கேறுவோம் வா!