ராஜதந்திரம்

மூன்று கவிதைகள்

- Advertisement -

ராஜதந்திரம் 

வஞ்சகமானது
எதிர்க்க  திராணியற்றது
நாசகாரர்களின்  கோழைத்தன  வலைவிரிப்பு
தினமும்  பார்க்கிறேன்
தலைக்கு  மேலாக  கடந்து  போகின்றன
எந்த  மேகமும்  என்னைப்  பார்த்ததா  ? எனத்  தெரியவில்லை
ஆயுதம்  தரித்திருக்கிறீர்கள்
யுத்தம்செய்ய  கிளம்புகிறீர்கள்
மக்களுக்காகவா?  ஆள்வோருக்காகவா?
முன்னும்  பின்னும்  நகர்கிறேன்
பின்னும்  முன்னும்  நகர்கிறேன்
அக்கம் பக்கங்கள்  நெருக்குகின்றன
இலையின்  நுனியில்  புழுவாய்  ஊர்கிறேன்
தின்னும்  இசைவு  பார்த்து  சிட்டுக்குருவி
வேட்டைக்காரன்  பதுங்குகிறான்
முட்களால்  துரத்தப்படுகிறது  என்  காலம்
முட்களின்  மேல்  ஓடுகிறேன்
முட்களை  மீறி  பறந்து  செல்ல  வேண்டும்
பல  கவலைகளால்  வேதனை
பல  வேதனைகளால்  வலிகள்
பல  வலிகளால்  பரிணமித்திருக்கிறது  பெருந்  துக்கம்.

??????????????????????????

காதலின் பரிசு

பேரன்பின்  நந்தவனம்
தீராத  முத்தங்கள்

குளத்தில்  கல்  எறிந்தேன்

உடைந்து  சிதறின
காலச்  சில்லுகள்

ஒரு  பூவுக்கு  சிறகுகள்  முளைத்தன
ஒருஆணுக்கும் ஒரு  பெண்ணுக்கும்  இடையே  பறந்தது
உதடுகளில்  முத்தங்களாய்  இனிப்புக்  கூடுகள்

முத்தத்திற்குள்  சத்தம்
சத்தத்திற்குள்  யுத்தம்
யுத்தத்திற்குள்  முத்தம்

பேரன்பின்  பெருவனம்
எதைப்  பறிப்பது?  எதை  விடுவது?
இதயம்  கொள்ளும்  மட்டும்  வசப்படுத்தினேன்.
பூக்கள்  கண்  கொள்ளாமல்  பூத்திருக்கின்றன
கையளவு  பறிக்க  முயல்கிறேன்
இதழ்களில்  ததும்பிய  மது  வெள்ளம்  மூழ்கடிக்க  முனைகிறது

நதி  நிரம்பி  ஓடுகிறது
அள்ளி  அள்ளிக்  குடிக்கிறேன்
தாகம்  கரை  புரள்கிறது.
குறை  காண்கிறோம்
நிறை  கொள்வதில்லை
குறை  நிறை  யாவும்  மனதின்  திரை

இரை  தேடுகிறோம்
இறை  தேடவில்லை
மறை  தான்  இறை.

??????????????????????????

கேள்விகளால் திணறும் உலகம்

ஜனனம்  போகிறது
மரணம்  வருகிறது
திகைப்பாய்  உலகம்.
வசந்தம்  வருகிறது
பூக்கள்  பாடுகின்றன
கூண்டுக்குள்  பறவை  அழுகிறது.
இருதயத்திற்குள்  அன்பு  வசிக்கிறது
இருதயத்தால்  அன்பை  காணமுடியும்
இருதயம்   அன்பை  இழந்தால்  இருதயமாகாது
காற்றாய் அலைந்து  திரிந்தேன்
நிலமெல்லாம் 
ஒரு  சாத்தான்  போனது
ஒரு  சாத்தான்  வரவேற்றது
கடவுளைக்  கொன்ற  பூமியில்  சாத்தான்களின்  மாநாடு .ஒன்றை  மறைத்தால்  மற்றொன்று  வெளி  வரும்
மற்றொன்றை  ஒளித்தால்  இன்னொன்று  தெரிய  வரும்
இன்னொன்றை  ரகசியப்படுத்தினால்  மொத்தமும்  அறியப்படும்
ஒன்றை  மறைத்தால்  மற்றொன்று  வெளி  வரும்
மற்றொன்றை  ஒளித்தால்  இன்னொன்று  தெரிய  வரும்
இன்னொன்றை  ரகசியப்படுத்தினால்  மொத்தமும்  அறியப்படும்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -