பெருகும் கண்ணீருக்குள்
தலை நிமிராமல்
உயிரின் ஓசையில்
நீ தேடிக்கொண்டிருப்பது
அப்போதைக்குத் தலைவருடும் கையைத்தான்
உன்னுடைய வானத்தின்கீழ்
புரண்டு படுக்கும்போது
உனக்கான புன்னகையை
மூடிய உள்ளங்கைக்குள்
யாரிங்கு திறந்து பார்க்கிறார் ?
கவனித்துக்கொண்டே இரு
உனக்குள்ளிருக்கும் ஒரு திறப்பைச்
சில நாளில் புரிந்துகொள்ளலாம்
மரணத்தை நீ வெல்லப்போவதில்லை
கொதித்துக் கொண்டிருப்பதால்
நீ காத்திருக்கிறாய்
காத்திருப்பதாலேயே
நீ அடங்கிப்போகிறாய்
தேநீரைத் தயாரிப்பதற்கு யோசி
வீடுவரைக்கும் யாரவது வரலாம்
தேவையைப் புரிந்துகொள்
உன்னை மகிழ்த்து
முகம்தெரிந்த ஒருவரில்
கையை நீட்டக் காத்திருப்பது யமுனாவாக இருக்கலாம்
ஒரு தேநீரைத் தயாரிப்பதற்கு முன்
நினைவின் அலைகளாக
எப்படியும் பலமுறை வந்து எட்டிப்பார்த்து விடுவதும்
யமுனாவாக இருக்கலாம்
இருளைப் பார்ப்பது
கடலைப் பார்ப்பது
யானையைப் பார்ப்பது
ரயிலைப் பார்ப்பதுபோல
எனக்கு நீ யமுனா.