யமுனாவை நீங்கள் பார்த்திருக்கலாம்.
யமுனாவை மதுபானக்கூடத்தில் நடமானமாடக்கூடியவளாகவோ,
மெக்டொனால் மேசையை சுத்தம் செய்பவளாகவோ,
முஸ்தபாவில் காசாளராகவோ,
செல் பெட்ரோலை வாகனங்களுக்கு நிரப்பக்கூடியவளாகவோ,
சக அலுவலகப் பணியாளர்களில் ஒருவராகவோ,
கவிதைகள் படைக்கும் நிகழ்வொன்றிலோ பார்த்திருக்கலாம்…
யமுனா நம்மை நோக்கி சினேகமாகப் புன்னகைத்திருப்பாள்.
கவனமாக ஒதுக்கிக் கடந்து சென்ற ஒருவனாக நானோ நீங்களோ இருந்திருப்போம்..
அந்தப் புன்னகை சக மனிதனின் புன்னகை
அந்தப் புன்னகையில் மனிதனுக்கான அன்பே இருந்திருக்கும்
யமுனா தவிர்க்கப்பட வேண்டியவளல்லள்
யமுனா நேசிப்பினை யாசிப்பவளல்லள்
யமுனாவின் புன்னகையை அந்தத் தருணத்தில் புன்னகையால் எதிர்கொள்ளவே நினைத்திருப்பாள்
யமுனாவிற்காக புன்னகைப்பது அவ்வளவு ஒன்றும் கீழ்மையானதல்ல
யமுனாவை நாளை ஒரு எம்ஆர்டி பயணத்தில் நான் சந்திக்கலாம்
என்னுடைய முகம்நோக்கி வரும் அவளின் புன்னகையைக் கண்கள் கொண்டு எதிர்கொள்வேன்.
நீ நான் அவள் யமுனா
வேண்டியவளல்லள்
யாசிப்பவளல்லள்
கீழ்மையானதல்ல…