முகங்கள்

ஆசான்

- Advertisement -

 “நான் கொடைக்கானல் கான்வென்ட்ல வேலை பார்த்தப்போ மனிஷா  கொய்ராலா எல்லாம் என் ஸ்டுடென்ட் தான். அங்க எல்லாம் ஸ்டுடென்ட்ஸ் எப்படி இருப்பாங்க தெரியுமா! சார் மோர்ன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க மாட்டாங்க. மிஸ்டர் இவர்… மிஸ்டர் அவர்னு பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. நீங்களும் தான் இருக்கீங்களே…. சாரு சாருன்னு எங்க பார்த்தாலும் ஓடி வந்து குட் மார்னிங்… குட் ஆப்டர்நூன்…. குட் ஈவினிங்…. ன்னு கொளைறது. கொஞ்சமாவது திருந்துங்கையா… “

எனக்கு எட்டு ஒன்பதாம் வகுப்பு அறிவியலும் பதினொன்று பனிரெண்டாம் வகுப்பு விலங்கியலும் எடுத்த  ஆசிரியர் ஒவ்வொரு வருடமும் சொல்லும் கதை தான் இது. ‘ப’னாவைக் கவிழ்த்துப்போட்டது போல் மீசை. அதற்கு கீழ் மாறாத புன்னகை. சிவந்த நிறம். ஐந்தரை அடி உயரம். மடிப்புக் கலையாத சட்டை பேன்ட். படிய வாரிய தலை. பார்த்தவுடன் இவர் வாத்தியார் என்று சொல்லிவிடலாம். அமைதியின் சொரூபமான முகம். கொஞ்சமும் கள்ளமோ வஞ்சமோ அந்த முகத்தில் காணமுடியாது. அந்த முகம் போலவே அவர் குணமும். மிக நல்ல மனிதர். அவரிடம் படித்த எந்த ஒரு மாணவனும் அவரிடம் குறை என்று எதையும் சொல்லிவிட மாட்டான்.

அப்படிப்பட்ட அந்த நல்ல வாத்தியார் நான் மேற்சொன்ன அந்தக் கதையை ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு தருணத்தில் சொல்லிக்கொண்டே வருவார் நாங்களும் “சார் ஏற்கனவே சொல்லியாச்சு சார்…” என்று ஞாபகமூட்டிக்கொண்டே வருவோம். எங்களிடம் சொல்லும் அதே கதையை எங்களுக்கு முன் சென்றவர்களிடமும் கூறியிருப்பார். பின் வந்தவர்களிடமும் கூறினார். எங்களுக்கு முன் சென்றவர்கள் முதல் நாங்கள் வரை நல்லவர்களாக அமைந்துவிட்டதால் பிரச்சனை இல்லை. எங்களுக்கு அடுத்த வந்த ஒரு சேட்டைக்காரக் கோஷ்டி மேற்சொன்னக் கதையைக் கேட்டுவிட்டு அவர் வரும்போது போகும்போதெல்லாம் மிஸ்டர் சந்திரமௌலி… மிஸ்டர் சந்திரமௌலி… என்பது போல் விரட்டி விரட்டி அவர் பெயருடன் மிஸ்டர் போட்டு அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். சரி பள்ளிக்குள் என்றால் பரவாயில்லை வெளியில், பேருந்தில், அவர் வீட்டுப்பக்கம் வசிப்பவர்கள் அவ்வப்போது அவ்வழியாக செல்லும்போது போது என தொடர்ந்து மிஸ்டர் போட்டு அழைக்க நம்ம வாத்தியார் வெறுத்துப்போய் “அடப்பாவிகளா ஒரு பேச்சுக்கு சொன்னா என்னை இந்த விரட்டு விரட்டுறீங்களே டா… தயவு செஞ்சு அந்தக் கதையை உங்க மனசுல இருந்து அழிச்சுருங்க டா… என் அம்மா கூட இப்ப எல்லாம் என்னை பெயர் சொல்லி கூப்பிடுறது இல்லை டா…” என்று மனசு நொந்து அழுகாத குறையாக சொல்லி மறுபடி சாராகவே மாறினார்.

கொஞ்சம் பாவம்தான். மிக நல்லவராக இருந்ததால் வந்த வினை. இதே வேறு ஒரு வாத்தியாரிடம் இப்படி விளையாடி இருந்தால் அவரின் பிரம்பு வகுப்பில் இருந்த அத்தனை பேர் பின்னாடியும் விளையாடியிருக்கும். அதற்காக இவர் ஒன்றும் அடிக்கவே அடிக்காத வாத்தியாரும் இல்லை. காட்டுத்தனமாக அவரவர் மனைவி மீது இருக்கும் கோபத்தை எல்லாம் மாணவர்களிடம் தீர்த்துக்கொள்ளும் கொடூரன் இல்லை. ஸ்கேலுக்கும் வலிக்காமல் கைக்கும் வலிக்காமல் அடிப்பார். 

மற்ற வாத்தியார்களிடம் அடிவாங்கி அடிவாங்கி காய்த்துப் போன என்னைப் போன்ற ‘மர’க்கையர்களுக்கு அவர் அடிப்பதெல்லாம் வலிப்பதே இல்லை. “யார்டா ஹோம்வொர்க் பண்ணல?” என்றால் முதல் ஆளாக எழுந்து நிற்பது நானாகத் தான் இருப்பேன். எத்தனை அடி அடித்தாலும் நீட்டிய கையை மடக்காமல் நிற்பேன். “போய்த்தொல டா என் கை வலிக்கிது” என்று இன்னும் ரெண்டு தட்டு தட்டி அனுப்பிவிடுவார். 

ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர்கள் வேலை செய்பவர்கள் என அனைவரும் ஆண்கள். பெற்றோர் ஆசிரியர்கள் சந்திப்பிற்கு கூட அப்பாவைத் தான் அழைத்து  வர வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறுவார்கள். பெண்வாடையே அண்டாத பள்ளிக்கூடம். “மாதவிடாய் சுழற்சி” பற்றிய பாடம் வந்தபோது எங்கள் அனைவருக்கும் ஏதோ ஒன்றை புதிதாக அறிந்துகொள்ளப்போகிறோம் அதுவும் பெண்களைப்பற்றி என்று ஒரு குதூகல மனப்பான்மையில் காத்துக்கொண்டிருந்தோம். எதையும் தெளிவாக நடத்தும் வாத்தியார். இவரிடம் கூச்சமே இல்லாமல் என்ன கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாம். 

வாத்தியார் வகுப்பிற்குள் வந்தார்  “மாதவிடாய் சுழற்சி” என்று கரும்பலகையில் எழுதினார். புத்தகத்தைத் திறக்கவேயில்லை. பொதுவாக மாதவிடாய் என்றால் என்ன? என்ற கேள்வியை எங்களை நோக்கி வீசினார். நாங்கள் ஒவ்வொருவரும் “பெரிய புள்ளையாகுறது” “சடங்கு ஆகுறது” “இரத்தம் வரும்” “அப்பறம் தான் புள்ளை பொறக்கும்”அப்படி இப்படின்னு ஏதேதோ சொல்லிக்கொண்டே வந்தோம். ஒவ்வொருவன் பதில் சொல்லும் போதும் வகுப்பிற்குள் ‘கொல்’ என்ற சிரிப்புச் சத்தம் எழுந்து அடங்கும். பதில்களை கேட்டு முடித்த பின் எங்கள் எண்ணங்களை அறிந்துகொண்டார் அவர். 

மாதவிடாய் என்பதில் கேலி செய்வதற்கோ கிண்டல் செய்வதற்கோ வெட்கப்படுவதற்கோ இல்லை, தீட்டு என்று வீட்டை விட்டு ஒதுக்கிவைப்பதற்கோ ஒன்றுமேயில்லை. நீங்கள் அனைவரும் ஒன்றுக்கு போவது போல் அதுவும் ஒரு இயற்கை சுழற்சி என்று தொடங்கி மாதவிடாய் காலங்களில் பெண்கள் படும் அவஸ்தைகளை மட்டுமே அந்த வகுப்பு முழுவதும் கூறினார். நாப்கினின் அவசியம் அது இல்லாமல் துணி பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சனைகள் என எல்லாம் கூறினார். கிராமங்களில் தீட்டு என்று கூறி பெண்கள் பயன்படுத்தும் துணிகளை வீட்டிற்குள் கூட வைக்காமல் வெளியே குப்பை போல் ஓரத்தில் போட்டு வைத்திருப்பதால் அதற்குள் விஷப்பூச்சிகள் குடியேறி அவற்றால் கூட தீங்கு விளையும் என்று அவர் கூறிய போது “சார் இந்த அட்வைஸ் எல்லாம் பொண்ணுகளுக்குச் சொல்லாம எங்களுக்குச் சொல்லி என்ன பயன்?” என்ற கேள்வி எழுந்தது. “இதை நான் உங்களுக்காகச் சொல்லல நீங்க உங்க வீட்ல இருக்க பெண்களுக்குச் சொல்லி புரியவைக்கணும். அந்த சமயத்துல உங்க வீட்டு பொண்ணுக உதவி கேட்டா தயங்காம செய்யணும். அதுக்காகத் தான் சொல்றேன்” என்றார்.

உண்மையில் அந்த வகுப்பு முடிந்த போது எங்களில் பலருக்கு மாதவிடாய் பற்றி இருந்த எண்ணம் மாறி இருந்தது. ஒரு ஆசிரியரால் என்ன செய்துவிட முடியும்? என்றால் ஒரேயொரு வகுப்பில் எழுபது மாணவர்களின் மனதில் இருந்த அழுக்கைத் துடைத்துவிட முடியும் என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு சான்று.

கேள்வி கேட்பவர்களை விரோதிகள் போல பார்க்கும் வாத்தியார்களுக்கு மத்தியில் “சுய இன்பம் செய்வது தவறா?” என்று கேளிவிக்கு கூட பொறுமையாக ஒரு பதின்பருவத்து மாணவனுக்கு என்ன தேவையோ அதை அளவாகவும் எந்த ஒரு ஆபாசமும் இல்லாமல் சொல்லி விளக்கியவர் அவர்.

பாடத்தோடு சேர்த்து வாழ்க்கைப் பாடத்தையும் சேர்த்துக் கற்பித்தவர். பல தருணங்களில் அவர் சொன்ன பல சிறு சிறு குறிப்புகள் இன்றளவும்  என் வாழ்க்கையில் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.

நம் வாழ்க்கையின் முக்கியமான பருவமான இளமைப்பருவத்தில் நாம் அதிகம் பார்ப்பது ஆசிரியர்களைத் தான் அப்படி என்னைக் கவர்ந்த சில ஆசிரியர்களில் மிக முக்கியமானவர் இவர். படிப்பை விட ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் தான் மிக முக்கியம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வாழ்ந்தும் காட்டுபவர்.

பச்சை மையில் கையெழுத்து என்று போனாலே ஒரு கையெழுத்துக்கு இவ்வளவு உனக்கு எத்தனை கையெழுத்து வேண்டும் என்று தான் தெரிந்தவர்கள் கூட கேட்டார்கள். பள்ளி முடித்து கல்லூரிக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க சான்றிதழ்களின் நகல்களில் ‘அட்டஸ்டேசன்’ வாங்க வேண்டும். ஒரு கட்டு நகல்களைத் தூக்கிக்கொண்டு நேராக இவரிடம் சென்றேன். ஆளில்லாத ஒரு வகுப்பறைக்குள் சென்று அமர்ந்து பொறுமையாக அனைத்திலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். கிட்டத்தட்ட எண்பது கையெழுத்துகள். பரீட்சைப் பேப்பர் திருத்துவது போல ஒவ்வொன்றையும் பொறுமையாகப் பார்த்து பார்த்து போட்டார். கையை உதறிக்கொண்டு “கை வலிக்கிதுடா சாமி எத்தனை?” என்று முடித்தார். ஒரு பைசா கூட செலவில்லை. “ஒரு டீ வாங்கி குடுடா” என்றார். “சார் நானே இன்னும் படிச்சு முடிக்கல என்கிட்ட போய் டீ கேட்க்குறீங்க? நீங்க வாங்கிக் கொடுங்க” என்றேன். “அடப்பாவி” என்று முதுகில் ரெண்டு போடு போட்டார். நேர்மையான மனிதன். அன்று கையெழுத்தை வாங்கிக்கொண்டு அவரிடமிருந்து விடைபெற்றேன். அதன் பின் அவரை இன்று வரை நேரில் சந்திக்கவில்லை என்றாலும் இன்றுவரை அந்த புன்னகை மாற முகம் மனதைவிட்டு அகலவில்லை.

முகங்களின் தரிசனம் தொடரும்….

முகங்கள் – 3

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

முகங்கள்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

5 COMMENTS

  1. அருமை….படிக்கும் ஒவ்வொருவருக்கு தன் பள்ளி நினைவுகள் நிழலாடிச் செல்லும்..அந்த இனிமையான நினைவுகளில் திழைத்தேன்…நன்றி

  2. ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே.. அதுவொன்றுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றிக்கடனாக இருக்கமுடியும். என் இயற்பியல் ஆசிரியர் செர்பின்அருள் அவர்களை நினைவூட்டுகிறது இந்தப்பதிவு என்னிடம் ஒரு நண்பனைப்போல் பழகியவர். இன்று சில நல்லபழக்கவழக்கங்கள்(அரசியல் தவிர்த்து) என்னிடம் தோன்றக் காரணம் அவர்தான்.

    • நன்றி மோகன்… இந்தத் தொடரில் யார் பெயரையும் குறிப்பிடக்கூடாது என்று எனக்கு நானே ஒரு விதியை வைத்துக்கொண்டுள்ளதால் பெயரைத் தவிர்த்துள்ளேன்… வேறு ஒரு சிறுகதையில் அவர் பெயரை அப்படியே போட்டும் எழுதியுள்ளேன்… நம் இளமைப்பருவத்தில் வந்து போன பல ஆசிரியர்களின் தாக்கம் நம்மிடம் நிச்சயம் இருக்கும்… இன்னும் நிறைய ஆசிரியர்களைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்…

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -