பேச்சொலிகள்
பகல் துடித்தோய்ந்து
இருள்கிறது.
அதுவரை மௌனத்திருந்து
பேருந்துகள் அற்ற
நிறுத்த இறுக்கையில்
படுத்திருந்த
அப்போய் கிழவன்
மெல்ல எழுகிறார்.
சோம்பல் முறித்து
விரல்களைச் சொடுக்கி
மீண்டும் புதிதாய்
உற்பத்தியாகியிருக்கும்
நகரின் மீது
மூச்சிழுத்து விடுகிறார்.
பேச்சொலிகள்
அடங்காமல் துடித்திருக்கும்
இருளின் குரல் வளைக்குள்
குதித்தோடுகிறார்.
நகரம்
எப்பொழுதும் போல
மினுமினுத்துக் கொண்டது.