புலியின் நிழலில்

நூலாசிரியர் : நாம்தேவ் நிம்கடே

- Advertisement -

எழுதியவர்: நாம்தேவ் நிம்கடே
தமிழில்: எம்.எஸ்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது இது பற்றிய எந்தவொரு அறிமுகம் அதற்கு முன்னர் எனக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் படிக்கப் படிக்க என்னுள் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நூலகத்தில் இருந்து எடுத்து வந்து படித்துப் பல மாதங்கள் ஆன பின்னும் அவ்வப்போது நிம்கடே வாழ்வில் நடந்த சில சம்பவங்களை மனம் அடிக்கடி அசை போட்டுக் கொண்டே இருக்கிறது.

நாம்தேவ் நிம்கடே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாத்கவுன் என்ற பகுதியில் பிறந்தவர். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். அம்பேத்கருக்கு அடுத்ததாக வெளிநாடு சென்று படித்த தலித் இவர்.

மராத்தியில் நிம்கடே எழுதிய சுயசரிதையை, எம். எஸ் ” புலியின் நிழலில் ” என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் .

14 ம் வயதில் பள்ளி சென்ற நாம்தேவ், தாழ்த்தப்பட்டவன் என்பதாலேயே அங்கு பட்ட அவமானங்கள் எக்கச்சக்கம். பள்ளிக்கு வெளியில் வெயிலில் நின்றபடியேதான் பாடங்களைக் கவனித்திருக்கிறார். எல்லோரும் குடிக்கும் நீரை அருந்தியதால் ஆசிரியரே இவரை நையப் புடைத்திருக்கிறார். நன்றாக படித்த காரணத்திற்காக கூடப்படிக்கும் மாணவர்களால் பல அவமானங்களுக்கு உள்ளாகியுள்ளார். சக மாணவர்கள் இவர் மேல் சிறுநீர் கழிக்கும் சம்பவத்தைப் படிக்கையில் மேற்கொண்டு படிக்க முடியாமல் புத்தகத்தை சில நாட்களுக்கு மூடி வைக்க வேண்டியிருந்தது.

ஆனால் நிம்கடே இந்தச் சம்பவங்களை எந்த ஒரு உணர்ச்சிப் பெருக்குமின்றி யாருக்கோ நடந்ததைப் போல் விவரிக்கிறார். அவர் எழுத்தில் எங்குமே துக்கத்தின் சாயல் தெரியவில்லை. சொல்லப் போனால் பல சம்பவங்களை அவர் பகடி கலந்தே சொல்கிறார். மிகவும் பண்பட்ட மனிதருக்கு மட்டுமே இது சாத்தியம்.

அம்பேத்கருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது கொள்கைகளையே வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து எண்ணற்ற அவமானங்களைக் கடந்து வெளிநாடு சென்று படித்து இந்திய விவசாய ஆய்வு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அளவிற்கு நிம்கடே உயர அவரது விடாமுயற்சியே காரணம். எத்தகைய இரும்புக் கதவுகளையும் தனது இடைவிடாத தட்டலால் திறக்கச் செய்யும் ஆற்றல் அவருக்கு இருந்திருக்கிறது.

ஒரு நாவலுக்கு உண்டான அத்தனை அம்சங்களுடன் மிகவும் விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டிருக்கிறது இந்நூல். புத்தகம் நெடுக பல சுவையான சம்பவங்களை அடுக்கி கொண்டே போகிறார் நிம்கடே. எம். எஸ் ஸின் தேர்ந்த மொழிபெயர்ப்பால் நம்மால் வெகு சுலபமாக புத்தகத்தோடு ஒன்றிப் போக முடிகிறது.

இத்தனை சிரமங்களுக்கு இடையே வாழ்வில் உயர்ந்து காட்டிய நாம்தேவின் கதை உண்மையில் படிக்கும் எவரையும் சிலிர்க்கச் செய்யும். உத்வேகம் கொள்ளச் செய்யும். பல தடைகள் தாண்டி சாதிக்கும் திடத்தைக் கட்டாயம் அளிக்கும்.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -