இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
நான்தான் காலம் பேசுகிறேன். எனது பார்வையில் நான் கண்ட பல்வேறு வரலாற்றுச் சுவடுகளை பல்வேறு அதிகாரங்களில் உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன். இன்று ஒரு புதிய அதிகாரத்தில் எனது பார்வையில் காற்றைப் பற்றி பேசப்போகிறேன். கண்ணுக்கே தெரியாத காற்றுக்குள் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கிறது தெரியுமா? உங்களது மொத்த பரிணாம வளர்ச்சியும் கூட காற்றின் திசைகள் ஆல் தீர்மானிக்கப்படுகிறது எப்படி என்பதைப் பற்றியும் இங்கு நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். பகுதிக்குள் செல்லலாம் வாருங்கள்.
காற்றும் கடலும்
உலகில் நீங்கள் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு முக்கியமான காரணமாக பயணங்கள் இருந்தது என்று கூறினால் மிகையாகாது. ஒரு இனக்குழு ஒரு நிலப் பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு புலம்பெயர்வதற்கு ஆயிரம் ஆயிரம் காலங்கள் பிடித்தது. இதற்கு காரணம் மனிதன் ஒவ்வொரு இடமாக நடந்து தான் சென்றான். அந்த நிலையில் மனிதனுடைய உடல் உழைப்பில்லாமல் தானாகவே நகர்ந்து செல்வதற்கு ஒரு ஊர்தி இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்? நான் கூறுவது தற்போது நீங்கள் பயன்படுத்தும் மின்சாரம் அல்லது எண்ணெயில் செல்லும் வாகனங்கள் இல்லை. அதற்கு முன்பு மனிதன் கண்டுபிடித்த தானியங்கி வாகனத்தை பற்றி பேசுகிறேன். கடலில் மிதக்கும் மரங்களை ஒன்றாக கட்டி கட்டுமரமாக செய்து கடலில் மிதக்க விட்டால், அது ஒரே இடத்தில் நகராமல் இருக்கும். மிஞ்சிப்போனால் அலையடித்து கடற்கரையில் வந்து மோதி நிற்கும். ஆனால் மனிதன் தன்னுடைய அபரிமிதமான மூளையால் கடற்கரையில் அடிக்கும் காற்று ஒரே திசையில் மட்டுமே வீசுவதை கவனிக்க ஆரம்பித்தான். அப்படிப்பட்ட ஒரே திசையில் வீசும் காற்றை படகுக்கு துடுப்பாக மாற்ற வேண்டி படகின் மேல் பகுதியில் ஒரு பெரிய காத்தாடி போன்ற இறக்கையை உருவாக்கி காற்றின் சக்தியால் வேறு எந்த ஒரு முதலீடும் இல்லாமல் கண்டம் விட்டு கண்டம் செல்ல ஆரம்பித்தான். மனிதன் புலம்பெயரும் நிகழ்ச்சி மிகவும் மெதுவாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் காற்று எனப்படும் ஒரு துடுப்பை கண்டுபிடித்தவுடன் ஆயிர வருட மாற்றங்கள் எல்லாம் மாதங்களில் நிகழ ஆரம்பித்தது!
சுருக்கமாகச் சொல்லப்போனால் நீங்கள் இன்று வாழும் நவீன வாழ்க்கை என்பது காற்று என்னும் அடிப்படை கட்டமைப்பு இருந்ததனால் தான் சாத்தியமானது. ஆனால் காற்று என்றால் என்ன? உங்கள் வாழ்க்கை எனும் வலைப்பின்னலில் அதன் பங்களிப்பு தான் என்ன? இதனை தெரிந்து கொள்வதற்கு நாம் காற்றின் பிறப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். வழக்கம் போல பெரு வெடிப்பிலிருந்து தொடங்கலாமா? பெருவெடிப்பின் பின்பு ஏற்பட்ட சிதறலில் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் உருவானது என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த பொருட்களில் சிலது மிகவும் இலகுவாக குறைந்த எடை கொண்டதாகவும் மற்ற பொருட்கள் எடை அதிகமாகவும் இருந்தது. எடை அதிகமாக இருந்த பொருட்கள் கொல்ல அளவிலும் சற்று கடினமாகவே இருந்தது. இந்த கனமான பொருட்கள் அனைத்தும் ஒன்று கூட்டி ஒரு கோளம் போன்ற வடிவு கொண்டு நகர ஆரம்பித்தவுடன் அதற்கு இயற்கையிலேயே ஈர்ப்புவிசை உண்டானது. ஒரு பெரிய காந்தத்தை எடுத்து மண்ணில் தேய்த்தால் சிறுசிறு இரும்புத் துண்டுகள் அதன் ஈர்ப்பு விசையால் வந்து ஒட்டிக்கொள்ளும். அதுபோலவே, கோளம் ஆனது வரும்போது தன்னை சுற்றியுள்ள சிறுசிறு எடை குறைவான பொருட்களை தன்னுடன் இழுத்து கொண்டது. அப்படிப்பட்ட பொருட்கள் தான் காற்று என்று உங்களால் அழைக்கப்படுகிறது. ஈர்ப்பு விசை அதிகமில்லாத கோள்களால் தன்னுடைய மேற்பரப்பில் காற்றை தக்கவைத்துக்கொள்ள முடியாது. பூமியைச் சுற்றி வரும் நிலவே அதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாகும். ஈர்ப்பு விசை அதிகம் உள்ள கோள்களால் காற்று தக்கவைத்துக் கொள்ளப்பட்டாலும், சிறிதுசிறிதாக காற்று அந்த கிரகத்தின் வரலாற்றையே மாற்றி இருக்கிறது. சூரியன் எனும் நட்சத்திரம் எரிவது அங்கு உள்ள காற்றின் துணை கொண்டுதான். சூரியனில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் நீங்கள் எடுத்து விட்டால் தொடர்ந்து எரிய முடியாது.
பூமியில் கூட காற்று இருப்பதால் அங்கே ஏகப்பட்ட மாற்றங்கள் உருவானது. அதில் உருவான முக்கியமான மாற்றம் தான் நீங்கள்! இதனைப் பற்றி விரிவாக அடுத்த பகுதியில் கூறுகிறேன். அதுவரை காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.