நான்காம் பரிமாணம் – 4

1. மொழி அதிகாரம் - 4ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். சென்ற பகுதியில், மொழியின் அலைவரிசை பற்றியும் அதன் பல்வேறு விதமான பரிணாம வளர்ச்சிகளை பற்றியும் கூறினேன். நீங்கள் பேசும் மொழிகளின் பல்வேறு ஒற்றுமைகளையும் கூறினேன். இன்று, ஒலியின் அலைவரிசையை மட்டுமே கொண்டு உருவான மொழிகளைப் பற்றி உங்களுக்கு கூற போகிறேன்.

அலைவரிசை

மனிதனால் கேட்க முடிந்த 20-20000 Hz அலைவரிசையில், ஒரே ஒரு குறிப்பிட்ட வரிசையை மட்டும் பயன்படுத்தியே உலகிலுள்ள பல்வேறு மொழிகளைப் பேச முடியும். இப்பொழுது உங்களால் எளிதாக 8000 Hz ஒலியை உண்டாக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம், அந்த 8000 Hz ஒலியை வைத்துக்கொண்டே தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் சொற்களையும் உங்களால் பேச முடியும். ஆனால் அப்படி பேசும்போது அந்த பேச்சில் ஒரு உணர்ச்சியே இல்லாமல் இருப்பதை உங்களால் கவனிக்க முடியும். அந்த உணர்ச்சியை கொடுப்பதற்காக உங்கள் பேச்சில் ஏற்ற இறக்கத்தை கொடுக்கிறீர்கள். உதாரணத்திற்கு, ஒருவர் தன் அருகில் இருக்கும் தாயை “அம்மா” என்று அழைப்பதற்கும், கோபத்தில் சண்டை போட்டுக்கொண்டு “அம்மா” என்று அழைப்பதற்கும், வலியால் துடித்துக் கொண்டு இருக்கும்போது “அம்மா” என்று  கத்துவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிறதல்லவா? அம்மா என்னும் சொல் ஒன்றுதான். ஆனால் அதே சொல் அன்பையும், கோபத்தையும், வலியையும் வெளிப்படுத்துவதற்கு காரணம் அந்த அலைவரிசை தான். 

ஒரு மனிதன் குறைவான அலைவரிசையில் பேசும் பொழுது அது அன்பு, அமைதி போன்ற பல்வேறு குணங்களைக் குறிக்கிறது. அதிக அலைவரிசை கொண்டு பேசும் பொழுது கோபம், வேகம் போன்ற குணங்களைக் குறிக்கிறது. இதைப் பயன்படுத்தும் மற்றும் புரிந்து கொள்ளும் குணம், நீங்கள் கற்றுக் கொண்டு வருவதில்லை. பிறவியிலேயே உங்களுடன் வருகிறது. இதை சோதனை செய்ய வேண்டும் என்றால் ஒரு சிறு குழந்தையிடம் சென்று நீங்கள் திட்டுவதற்கு பயன்படுத்தும் ஒரு சொல்லை குறைந்த அலைவரிசையில் சாந்தமாக சொல்லிப்பாருங்கள். அந்த குழந்தை உங்களிடம் சிரிக்கும். அப்படியே நீங்கள் பாராட்ட பயன்படுத்தும் ஒரு சொல்லை அதிக அலைவரிசையில் கத்தி சொல்லிப்பாருங்கள். அந்த குழந்தை அழ ஆரம்பித்துவிடும். ஏனென்றால் குழந்தைகளுக்கு சொல்லின் அர்த்தம் வளர வளரத்தான் புரியும். ஆனால் பிறக்கும் பொழுதே சொல்லின் அலைவரிசையை புரிந்து கொள்ளும் சக்தி அதற்கு வந்து விடும். மனிதனுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விலங்கினங்களுக்கும் இதே குணம் பிறவியிலேயே உண்டு. 

இசை

இயற்கையிலேயே புரிந்து கொள்ள முடிந்த அலைவரிசையை உங்களால் அவ்வளவு எளிதாக வசப்படுத்த முடியாது. “புத்தகம்” என்று நீங்கள் கூறினால் அதனுடைய அர்த்தம், அது தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். தமிழ் தெரியாதவர்களுக்கு நீங்கள் “Book” என்று ஆங்கிலத்தில் கூற வேண்டி வரலாம். ஏனென்றால் இந்த வார்த்தைகள் அனைத்தும் உங்களாலே உருவாக்கப்பட்டு மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அலைவரிசையை நீங்கள் உருவாக்காததால் அதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு வேண்டியபடி உருவாக்க முடியாது.

அதிக அலைவரிசையுடன் சத்தமாக பேசினால் கோபம் எனும் குணம் வெளிப்படுகிறது என்று கூறியிருந்தேன்.  அப்படியானால் உங்களுக்கு வேண்டிய மனநிலையை உருவாக்கிக் கொள்ள அந்த அலைவரிசையை உருவாக்கினால் போதும் அல்லவா? இதைத் தெரிந்து கொண்டு நீங்கள் உருவாக்கிய மொழிதான் இசை. இசையால் உங்கள் மனதை எந்த உணர்ச்சிக்கும் கொண்டு செல்ல முடியும். இதை அறிவியல் பூர்வமாக கண்டுபிடிப்பதற்காக உங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கோட்பாடுகளே இசையின் இலக்கணமாக மாறியது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதுபோல இசைக்கு ஆரம்பத்தில் 21 ஸ்வரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த 21 என்பது 12 ஆக மாறி இன்று உலகம் முழுவதும் இசைக்கு 12 விதமான ஸ்வரங்கள் ஆக கணக்கில் கொள்ளப்படுகிறது. இசைக்கு சப்தஸ்வரங்கள் என்றுதானே பொதுவாகக் கூறுவார்கள்? சரிதான். இந்தப் பனிரெண்டு ஸ்வரங்களில் இருந்து 7 மட்டுமே எடுத்துக்கொண்டால் அதை வைத்து ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்த முடியும் என்பதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள். இதுதான் நீங்கள் இசையில் உணர்ந்த திலேயே மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும். 

இந்தப் பன்னிரண்டு ஸ்வரங்களில் இருந்து ஒரு ஏழு ஸ்வரங்களை நீங்கள் எடுத்து அதை மாற்றி அமைத்து ஒரு இசையை உருவாக்குவது தான் ஒரு ராகம் எனப்படும். வேறு ஏழு ஸ்வரங்களை எடுத்து அமைத்தால் அது வேறு ஒரு ராகம் ஆகிவிடும். நீங்கள் எடுத்துக் கொண்ட அந்த ஏழு ஸ்வரங்களை குறிப்பதற்காக தமிழில் ச, ரி, க, ம, ப, த, நி என்றும், ஆங்கிலத்தில் do, re, mi, fa, sol, la, si என்று குறியீட்டை வைத்துள்ளீர்கள். குறியீடு வெவ்வேறாக இருந்தாலும் அனைத்து மொழிகளிலும் இவை கூறும் விஷயம் ஒன்றுதான். முதலில் அந்த 12 அலைவரிசைகள் உருவாக்குவது எப்படி தெரியுமா? முதலில் ஏதேனும் ஒரு அடிப்படை அலைவரிசையை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு 440Hz என்று வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் இசையில் பயன்படுத்தப்படும் அடிப்படையாகும். உங்களுக்கு பிடித்த எந்த எண் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அந்த முதல் அலைவரிசை யுடன் 1.059463 என்ற எண்ணை பெருக்குங்கள் உங்களுக்கு அடுத்த அலைவரிசை (440 * 1.059463 = 466.16 Hz) கிடைத்துவிடும். மூன்றாம் அலைவரிசைக்கு இரண்டாம் வரிசையுடன் 1.0594ஐ (466.16 *1.059463 = 493.88 Hz) பெருக்கிக் கொள்ளுங்கள். இப்படி கிடைக்கும் முதல் 12 எண்கள் தான் இசையின் அடிப்படை. இந்த பன்னிரண்டில் எந்த ஏழை எடுத்துக் கொண்டாலும் அது ஒரு ராகம் ஆகிவிடும். இப்படி உருவாக்குவதை ஆங்கிலத்தில் ஹார்மோனிக் சீரிஸ் (Harmonic series) எனக் கூறுவார். இந்தப் பன்னிரண்டு அலைவரிசையை உண்டாக்கும் கட்டையை கொண்ட பெட்டியை தான் ஆர்மோனியம்(Harmonium) என கூறுவார். Harmony (ஒத்திசைவு) எனும் மூலச்சொல் மூலமாக வந்த வார்த்தை தான் இவையெல்லாம்.

ராகங்கள்

12 அடிப்படை அலைவரிசையில் இருந்து ஏழு ஸ்வரங்களை எடுத்து ராகங்கள் உருவாக்கலாம் என்று கூறினேன் அல்லவா? நீங்கள் எடுக்கும் அந்த ஏழு ஸ்வரங்கள் ஒவ்வொரு மனநிலையை வெளிப்படுத்தும். இதில் நீங்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், மேற்கத்திய சங்கீதம் என்று பல்வேறு பாணிகளை உருவாக்கி வைத்துள்ளீர்கள். கர்நாடக சங்கீதத்தில் ச,ரி,க,ம,ப,த,நி எனும் ஏழு அலைவரிசை உருவாக்கும் போது ‘ம’ எனும் அலைவரிசை இரண்டு விதத்தில் உண்டாக்கலாம். முதல் ‘ம’ வில் உருவாகும் அனைத்து ராகங்களும் சந்தோஷத்தை வெளிப்படுத்துவதாகவும் (எ.கா. சங்கராபரணம்), இரண்டாவது ‘ம’ வில் உள்ள அனைத்து ராகங்களும் (எ.கா. கல்யாணி) சோகத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளது. ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் இன்னும் ஒரு படி மேல் போய் மனநிலை மற்றும் கால வேளையை குறிப்பதற்கான ராகத்தையும் உருவாக்கி உள்ளீர்கள். காலைவேளையில் சந்தோஷத்திற்கான ஒரு ராகமும், அதே சந்தோஷத்திற்கு மதிய வேளையில் வேறு ஒரு ராகமும் உள்ளது. மேற்கத்திய இசையில் மேஜர் ஸ்கேல் (major scale) மைனர் ஸ்கேல்(minor scale) என்றும் இதனை எழுதுவதற்கு Stave notation எனும் எழுத்து முறையும் கண்டுபிடித்து வகைப் படுத்தி உள்ளீர்கள். 

சங்கமம்

ஒலியின் வீச்சு மூலமாக வார்த்தைகளும் அதன் அர்த்தத்தையும் உருவாக்கிய நீங்கள் உணர்ச்சிகளை அலைவரிசையின் மூலமாக புரிந்துகொள்ள முடியும் என்று தெரிந்தவுடன் இரண்டையும் கலந்து பாடல்களை உருவாக்கினீர்கள். வெறும் பேச்சு மூலமாக குறைந்த தகவலையே பரிமாற்ற முடியும். ஆனால் பாடல்கள் மூலம் நீங்கள் கூற விரும்பும் அர்த்தம் மற்றும் அதன் உணர்ச்சி இரண்டையுமே சொல்ல முடியும். அதனால் தான் உங்கள் பண்டைய மதங்கள் அனைத்திலும் ஆகமங்கள் மற்றும் வேதங்களில் உள்ள சொற்களை ராகத்துடன் அமைத்துள்ளனர். ராகத்தை விடுத்து வெறும் சொல்லை மட்டும் தெரிந்து கொண்டால் உங்களுக்கு அதன் முழு பொருளும் விளங்குவதற்கு வாய்ப்பில்லை. ஒரு மொழியில் உள்ள பாடலை மொழிபெயர்த்தால் ராகத்தையும் அதற்கு ஏற்றார்போல் மாற்ற வேண்டும். அதை செய்வதற்கு உங்களுக்கு மிகுந்த பயிற்சி தேவைப்படும். அவ்வாறு மாற்றாமல் வார்த்தைகளை மட்டுமே மொழிபெயர்த்ததனால் உங்கள் உலகில் இன்றுவரை வந்த சண்டைகளுக்கு பஞ்சமே இல்லை. 

இன்று உங்கள் உலகில் பாடலைப் பதிவு செய்து மீண்டும் ஒலிக்க செய்வதற்கு பல்வேறு முறைகள் உள்ளது. தொலைக்காட்சி, இணையம் போன்ற வசதிகள் மூலமாக வார்த்தைகள் மற்றும் அதன் அலைவரிசையை அப்படியே மீண்டும் உருவாக்க முடிகிறது. அதனால் தகவல் தொலைந்து போகாமல் ஒலிபரப்ப முடிகிறது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது முற்றிலும் சரியல்ல. நீங்கள் பேசும் வார்த்தை மற்றும் உணர்ச்சி இரண்டு மட்டுமே மொழி அல்ல. மூன்றாவதாக வேறு ஒரு விஷயமும் உள்ளது. 

அதைப் பற்றி அடுத்த வாரம் கூறுகிறேன்.

(நான் சுழல்வேன்)

இந்த தொடரின் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

அடுத்த வாரத்துடன் மொழி அதிகாரத்தை நிறைவு செய்கிறேன். பின்பு வேறொரு அதிகாரத்துடன் என் சுழற்சி தொடரும்…

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

  1. இசையின் தொடக்கத்தை வெகு எளிமையாக சொல்லிவிட்டீர்கள்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -